எஸ். சண்முகம் கவிதை

முதலிருந்த வண்ணத்தைக் காட்டிலும் இப்போது
கூடுதலாக அடர்ந்துள்ளது
பூஜாடியில் இரண்டு நாட்களுக்கு முன்
செருகியிருந்த பூ

மடல்களிலும் இலைகளிலும் நீர்ப்பற்று உலராதிருப்பதை
தீண்டிப் பார்த்த போது தண்டின் குளிர்மை
விரல்களின் உள்பக்கத்தில் படிந்தது

வெம்மையாய்ப் பரவிய
அவநாளின் கைகூடாத விருப்பங்களை
உகுத்துவிட எத்தனைமுறை முனைந்தாலும்
பாதியில் எல்லாம் பாழாகி விடுகின்றன

ஏமாற்றத் துடிப்பின் அழுத்தமான அதிர்விலிருந்து
தாற்காலிகமாக விடுபட
தேவையில்லாது போனாலும்
யாரிடமாவது பேசினால் தணியும்
சீரற்ற தன்முணுமுணுப்பு

சுவரில் தொங்கும் சட்டகமிட்ட
அயல் உருவச்சித்திரத்தின் வாஞ்சைமிகுந்த விழிகள்
நெடுநேரத்திற்கு பிறகு
தற்செயலாக எதிரிட்டன.

(எண் : 048)

One Comment on “எஸ். சண்முகம் கவிதை”

  1. அப்பா, என்ன ஒரு அடர்த்தியான உணர்ச்சியை கவிஞர் சண்முகம் அவர்கள் வார்த்தைகளில் வடித்து உள்ளார் . இதை உணர்ச்சி என்பதா , ஓவியம் என்பதா , உள்ளுக்குள் ஊடுருவி உலுக்கும் வார்த்தைகளின் வெடிப்பு என்பதா . ஏமாற்றத் துடிப்பை எப்படி வெளிப்படுத்தி உள்ளார். .திரும்பத் திரும்பப் படிக்க வைக்கும் வரிகள் . புதுக் கவிதை என்பதற்கு புது அர்த்தம் பொழிப்பிக்கும் கவிதை .

    வண்ணத்தையும் , பூவையும் , தண்டையும் இலையையும் , வருணித்து , நம் மனதிற்குள் ஒரு மென்மையை வரவழைத்து , கைகூடாத விருப்பங்களைக் கோடி காட்டி விட்டு , கடைசி வரியில் சித்திரத்தின் வாஞ்சையான விழிகள் ‘தற்செயலாக நேரிட்டன ‘ என்று முடிக்கும் போது அவை பார்த்துப் பார்த்து உள்ளுக்குள் பதுக்கி வைத்த உணர்ச்சிகள் தான் பாய்கின்றன என்பது படிப்பவர்க்குப் புரியும் தானே .

Comments are closed.