“வெட்ட வெளியில்” /மீ. விசுவநாதன்

வெள்ளைக் காகிதத்தின்
பெரும் விரிப்பாய்க் கிடக்கிறது வானம்
அதில்
வருவதும் போவதுமாய்
இளம் பஞ்சுப் பொதிகளாய் மேகங்கள்
போடும் வண்ண வண்ணக் கோலங்கள்

பூமி விட்டு
மேலே மேலே உயர்ந்து
எண்ணச் சிறகுகளால் தொடப்போனேன்
மேலும் மேலும் உயர்ந்து
வளர்ந்து கொண்டே போகிறது

வெட்ட வெளிளியில்
காற்று வற்றிய ஊரில்
நுழைந்து திரிந்தும் தேடினேன்
இன்னும்
என்கைக்கு எட்டியபாடில்லை
பார்க்கும் திசையெலாம் ஒளிவெளி
ஒன்றுமே அங்கே இல்லை
ஆனால்
எல்லாம் உள்ள உணர்வு

அஹா..அஹா..
அந்த வெட்ட வெளியே
“நான்”.
(07.07.2022 11.50 am)