விருட்சம் நினைவுகள் – 1


அழகியசிங்கர்


நான் விருட்சம் ஆரம்பித்தபோது இரண்டு பிரிவினர் இருந்தார்கள்.  ஒன்று ஞானக்கூத்தன் பிரிவினர்.  இரண்டாவது பிரமிள் பிரிவினர்.  

பிரமிள் குழுவினர் ஞானக்கூத்தன் குழுவினரைச் சாடுவார்கள்.  அதேபோல் ஞானக்கூத்தன் குழுவினர் பிரமிள் குழுவினரைச் சாடுவார்கள்.  நான் இரண்டு பக்கமும் இருந்தேன்.  விருட்சம் கொண்டு வரும்போது பிரமிள் பிரிவைச் சார்ந்தவர்களை இழுப்பது என்று முயற்சி செய்வேன். 

அதனால்தான் என் முதல் இதழில் தேவதேவன் (பிரமிள்), நாராணோ ஜெயராமன் (பிரமிள்) முதலியவர்களின் கவிதைகள் இடம் பெற்றிருக்கும். பிரமிளை முதல் இதழ் விருட்சத்தில் கவிதை எழுத வைக்க முடியவில்லை.  ஆனால் அவரை நான் போய்ப் பார்த்தேன்.  தி நகரில் விஷ்ணு நாகராஜன் அலுவலகத்தில் அவர் இருந்தார்.   “பத்திரிகை கொண்டு வருகிறேன்,” என்றேன்.

“ஏன் கொண்டு வருகிறீர்கள்?  சும்மா இரும்..”

“இல்லை.  முடிவு பண்ணியாச்சு.  முதல் இதழில் உங்கள் கவிதை ஒன்றும் இடம் பெற வேண்டும்.” 

முதலில் பிரமிள கொஞ்சம் யோசித்துப் பார்த்தார்.  அவருக்கு என் மீது சந்தேகம். தான் எழுதித் தருகிற கவிதையை இவன் பத்திரிகையில் போடுவானா என்ற சந்தேகம்தான்.  அவர் என்னைப் பார்த்துச் சொன்னார் :  “நான் ஒரு கவிதை சொல்கிறேன்.  எழுதிக்கொள்ளுங்கள்,” என்றார் பிரமிள. அவர் என்ன சொல்வது நான் என்ன எழுதுவது என்று யோசித்தேன்.   பின் அவர் ஒரு கவிதையைப் படித்தார்.

கிரணம் என்ற கவிதை ஒன்றைப் படித்தார்.


‘விடிவுக்கு முன் வேளை’

ஆகாயத்தில் மிதக்கின்றன

நாற்காலி மேஜைகள்

ஊஞ்சல் ஒன்று

கடல்மீது மிதக்கிறது

அந்தரத்து மரச் சாமான்களை

சுற்றிச் சுற்றிப் பறக்கிறது

அசரீரிக் கூச்சல் ஒன்று

சிறகொடிந்து கிடக்கிறது

ஒரு பெரும் கருடப் பட்சி

கிழக்கு வெளிறிச்

சிவந்து உதித்த மனித மூளைக்குள்

வெறுமை ஒன்றின் இருட்குகை

குகைக்குள் கருடச் சிறகின் 

காலை வேளைச் சிலிர்ப்பு.

ஆகாயத்தில்

அலைமேல் அனல்.

மௌனித்தது 

அசரீரிக் குரல்.

இந்தக் கவிதை விருட்சம் முதல் இதழில் பிரசுரம் செய்ய நான் விரும்பவில்லை.   வேண்டுமென்று கவிதை என்ற பெயரில்  ஏதோ சொல்லி என்னைக் கிண்டல் பண்ணுகிறார் என்று நினைத்தேன். 

ஏன் நாற்காலியும் மேஜைகளும் ஆகாயத்தில் மிதக்க வேண்டுமென்று தோன்றியது.  நான் இக் கவிதையைப் பிரசுரம் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன்.  

பிரமிளும் அது குறித்து பெரிதும் கவலைப்பட வில்லை.  ஆனால் என் முதல் இதழ் விருட்சம் வரும்போது பிரமிள் ஒருமுறை என் வீட்டிற்கு வந்திருந்தார். 

என் அப்பாவைப் பார்த்து, “உங்கள் பையனை சும்மா இருக்கச் சொல்லுங்கள்.  ஏன் பத்திரிகையெல்லாம் ஆரம்பிக்கிறான்,” என்று சொன்னார். 

என் அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நானும் பிரமிள் என் அப்பாவிடம் கூறியதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.  

அதேபோல் ஞானக்கூத்தன் அணியிலிருந்து ஞானக்கூத்தனிடம் கவிதைக் கேட்டேன்.  அவர் உடனே ஒரு கவிதையை எழுதிக்கொடுத்து விட்டார்.  ஞானக்கூத்தன் என்னிடம் பேசும்போது கட்டாயம் விருட்சம் போன்ற பத்திரிகை வருவது அவசியம் என்று கூறினார். 

நான் விருட்சம் பத்திரிகைக் கொண்டு வரும்போது üழý என்ற ஆத்மாநாமின் பத்திரிகை வந்திருந்து நின்று போய்விட்டிருந்தது.  கிட்டத்தட்ட ‘ழ’ என்ற பத்திரிகை வடிவத்திலேயே விருட்சம் பத்திரிகையைக் கொண்டு வந்திருந்தேன்.  

ஞானக்கூத்தனிடம் நான் எப்படிப்பட்ட பத்திரிகை கொண்டு வரப் போகிறேன் என்றெல்லாம் குறிப்பிடவில்லை.  பிரமிள் அணி ஞானக்கூத்தன் அணி என்றெல்லாம் கூறினால் நான் கிண்டலுக்கு ஆளாவேன் என்றெல்லாம் எனக்குத் தெரியும். 

ஆனால் ‘ழ’ பத்திரிகையில் எழுதிய பல எழுத்தாளர்கள், விருட்சம் இதழுக்கும் தன் பங்களிப்பைச் செய்யத் தவறவில்லை.  ரா ஸ்ரீனிவாஸன், ஆர் ராஜகோபாலன், ஆனந்த், எஸ் வைத்தியநாதன், ஜெயதேவன், ஆ இளம்பரிதி என்றெல்லாம் ஞானக்கூத்தன் அணியைச் சேர்ந்தவர்கள் கவிதைகள் அளித்தார்கள். முதல் இதழ் முழுவதும் கவிதைகள்.  முதல் பக்கத்தில் ரா ஸ்ரீனிவாஸனும் கடைசிப் பக்கத்தில் நானும் கவிதைகள் எழுதி இருந்தோம்.

எனக்கு ஆரம்பத்திலிருந்து பிரமிளிடம் பழகுவதைவிட ஞானக்கூத்தனிடம் பழகுவது எளிதாக இருந்தது.  காரணம்.  பிரமிள் என்னுடன் பேசும்போது கிண்டல் செய்வார் என்று எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கும். மேலும் பிரமிள் கோபக்காரர். எப்போது வேண்டுமானாலும் கோபித்துக்கொண்டு போவார். 

அப்போதெல்லாம் நான் பிரமிளை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை நேரத்தில் ஜே..கிருஷ்ணமூர்த்தி காணொளி காட்டுமிடமான வஸந்தவிஹாரில் சந்திப்பேன். 

அதேபோல் ஞானக்கூத்தனை ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் கடற்கரையில் உள்ள வள்ளுவர் சிலை அருகில் சந்திப்பேன். ஆரம்பத்தில் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளிலும், பின் லாம்பி ஸ்கூட்டரிலும் நான் சென்னை முழுவதும் சுழன்று சுழன்று வருவேன்.  

ஓட்டைத் தேவனார்க்கு வாழ்த்துகள்’ என்ற பெயரில் ஞானக்கூத்தன் முதல் இதழில் கவிதை எழுதிக் கொடுத்திருந்தார்.  அக் கவிதை வருமாறு

அனைத்து மக்களுக்கும் சரிசம மாக

ஓட்டைகள் வழங்கியுள்ள

அற்புதப் பொருளே

மும்முறை சொன்னேன் வாழ்த்துகள் உனக்கு

சிறிதென்றாலும் பெரிதென்றாலும்

அவரவர்க்கென்றே ஓட்டைகள்

கிடைக்கும் படிக்குச் செய்தஉன்

கருணைத் திறனை

எவர் மறந்தாலும் நான் மறப்பேனா?


அடுத்தவர் ஓட்டை தன்னதைக் காட்டிலும்

பெரிய தென்று கசந்தவர் தம்மை

நின்னருள் வழங்கிப் பாலிக்க வேண்டும்.


ஓட்டைகட் கெல்லாம் ஆதி ஓட்டையாய்

உன்புனித ஓட்டை என்றும் வாழ

ஓட்டையர் சார்பில் என்தலை வணங்கினேன்


எங்கள் ஓட்டையில் காற்றும் நீரும்

ஒளியும் உட்புகுந்து நலமுற்றிருக்க

ஓட்டைநாயகனே நீ அருள வேண்டும்.


எங்கள் ஓட்டைகள் நாங்கள் உறங்குங்கால்

யார் ஒருவ ராலும் திருடப் படாமல்

நாங்கள் விழிக்கும் வரைக்கும் எங்களிடம்

இருக்கும் படிக்குன் காவல் விளங்குக.


எங்கள் ஓட்டையில் ஒன்றிரண்டு

கவனக் குறைவாய்த் தவறிவிட்டாலும்

பதிலுக்கு நல்ல ஓட்டைகள் கிடைக்கும்

படிக்கு நீதான் உதவவும் வேண்டும்.


எங்கள் ஓட்டையில் சூரிய சந்திர

சனியாதி சுக்கிர தேவர்கள்

தங்கு தடையின்றி ஊர்வலம் சுற்ற 

தயவு செய்த நின்னருள் வாழ்க.


அனைத்து மக்களுக்கும் சரிசம மாக

ஓட்டைகள் வழங்கிய அற்புதப் பொருளே

எனக்கு நீ வழங்கிய ஓட்டைகள் சகிதம்

மும் முறை வாழ்த்தினேன் நன்றி கூற.


ஞானக்கூத்தனின் இந்தக் கவிதையைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.  ‘ரொம்ப அற்புதம் உங்கள் கவிதை,’ என்று அவரிடம் கூறினேன். 

ஆனால் அந்த இதழில் அந்தக் கவிதைதான் எல்லோருடைய கிண்டலுக்கும் ஆளானது.

அந்த வாரம் தேவி திரையரங்கத்தில் சினிமாப் பார்க்க நானும் பிரமிளும் சென்றிருந்தோம், அவர் கையில் முதல் இதழ் விருட்சம் வந்து விட்டது என்று கூறி இதழ் பிரதியைக் கொடுத்தேன். 

அதைப் பார்த்த அவர், ஒரு தோசை மாதிரி அதைச் சுருட்டி, ‘வந்துவிட்டதா?’ என்று ஓங்கி தரையில் அடித்தார். நானோ திடுக்கிட்டேன்.  

(இன்னும் வரும்)

2 Comments on “விருட்சம் நினைவுகள் – 1”

Comments are closed.