கணேஷ்ராம்
துர்பாக்கியசாலிகள் தான் மனைவியுடன் இந்த மாதிரி ஸ்டிக்கர் பொட்டு, பாஷிமணி, ஊஷிமணி கடைகளுக்கு செல்வார்கள். தொடர்ச்சியாக ஆறுமுறை இவ்விதம் போகிறவர்கள், பழைய காலத்து விஜிபி கோல்டன் பீச்சின் வாசலில் மகாராஜா காஸ்ட்யூமில் நிற்கும் தகுதியைத் தானாகவே அடைந்து விடுவார்கள்.
பூனாவில் வசித்த போது, என் மனைவி துளசிபாக் என்கிற இடத்தில் என்னை நிறுத்தி விட்டு, அங்கு ஆயிரக்கணக்கில் இந்த மாதிரி கடைகள் சிதறிக் கிடக்கும் கடைத்தெருவில் நுழைந்தாள்.
நானும், எனக்குத் தெரியாமல் வாழ்க்கைப் பட்டுவிட்ட என் வண்டியும், டயர்கடுக்க நின்றது மட்டுமல்லாமல், காவலர்கள் தொல்லையால் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி அரைமைல் வந்து விட்டோம்.
ஆச்சரியகரமாக, என் மனைவி நான் தள்ளித் தள்ளி வந்து விட்ட சாலையின் எதிர்ப்புறம் ஏதோ கடையில் பேரம் பேசிக் கொண்டு இருந்தாள். அவளும் கடைகடையாக ஏறி இறங்கி இருக்கிறாள். ஆனாலும், வெறுமனே நின்று கொண்டு இருந்த என்னைப் போலக் களைத்துப் போகவில்லை.
நான் அவளைக் கைபேசியில் அழைக்க, மூன்றாவது முயற்சியில் அவள் அதை எடுத்து, வீரேந்திர ஷேவாக் மாதிரி முதல் பந்திலேயே ஒரு விளாசல். நான் பதவிசாக, எதிர் சாரியில் நிற்பதாகக் கூற, அவள் என்னை ஜனத்திரளில் துழாவி, கண்டு பிடித்து விட்டாள்.
உடனே, என்னிடம் கைபேசியில் அழைத்து, “எட்டணா சில்லறையா இருக்காப்பா?”
“எதுக்கு?”
“ம்ம்.. இங்கே ஒரு பில்டிங் விலைக்கு வருதாம்.. வாங்குறதுக்கு”
“நியாயமா நாந்தான் கோச்சுக்கணும்.. “
“வீட்டுக்குப் போய் சாவகாசமா சண்டை போடலாம்.. இப்ப எட்டணா குடுங்க.. லேட்டாகுது… ஸ்டிக்கர் பொட்டு எடுத்துட்டேன்.. சில்லறை இல்லை இவன்கிட்ட”.
நான் பர்ஸைத் துழாவி, மிகவும் சிரமப்பட்டு சில்லறை எடுக்க, அதையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த நாலைந்து பிச்சைக்காரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். வேறு வழியின்றி அவர்களுக்கும் தர்மம் பண்ண வேண்டியதாகி விட்டது.
நான் பிச்சைக்காரர்களுக்குப் பட்டுவாடா செய்வதில் மும்முரமாக இருந்த போது, ஒரு முரட்டு போலிஸ்காரர் என்னைப் பின்னாலிருந்து அணுகி, என் வண்டியின் ஸ்டெப்னியில் பிரம்பால் பலமாகத் தட்டினார். நான் திரும்பினவுடன், கடுமையான முகத்துடன் என்னிடம், “இங்கு பிச்சை எல்லாம் எடுக்கக் கூடாது” என்று அதட்டினார்.
“வேறெங்கெல்லாம் எடுக்கலாம்” என்று கேட்டுத் தெரிந்து கொள்ளப் போதுமான மராத்தி கைவசம் இல்லாததால், அதைக் கடைசிவரைத் தெரிந்து கொள்ள முடியாமலே போய்விட்டது.
மேலும் தாமதிக்காமல்,
வண்டியை வாகாக சாக்பீஸால் குறி போட்டு இருந்த இடத்தில் நிறுத்தி விட்டு, சாலையைக் கடந்து எட்டணாவை தர்மபத்தினியிடம் சேர்ப்பித்து விட்டுத் திரும்பினால் வண்டியைக் காணோம்.
மாநகராட்சி வண்டி வந்து சுடச்சுடத் தூக்கிப் போய் விட்டான். குறி போட்டிருந்த இடத்தின் தென்கிழக்கே நிறுத்தக் கூடாதாம். பூனாவே எந்தத் திக்கில் இருக்கிறது என்று அப்போது புரியாமல் இருந்த நேரம்.
முந்நூறு ரூபாய் செலவு செய்து வண்டியை மீட்டோம்.
“ரெண்டு ரூபா பொட்டை, முந்நூத்தி ரெண்டு ரூபாய்க்கு வாங்கி இருக்கோம்”.
“பொட்டு வச்சுக்கறதே ஹஸ்பண்டுக்காகத் தானே? நீங்க முந்நூறு ரூபாய் பொற மாட்டீங்களா?”
நான் பதில் சொல்லவில்லை.

சில நேரங்களில் சில வலைகளில் சிக்காமல் எவரும் தப்பிக்க முடியாது. அனுபவத்தை அழகுறப் பதிவுசெய்தவிதம் வெகு இயல்பாக உள்ளது. வாழ்த்துகள் கணேஷ் ராம்.