
மறுநாள் என்று நீ சொன்ன போது
அடுத்த நாளாக எண்ணிக் கொண்டேன்
சிறிதும் தொடர்பின்றி சொல்லப்படும் சொற்கள்
பொருளற்றவிதமாய் ஓயாமல் சுழல்கின்றன
சிரமத்துடன் மறக்க நாளெல்லாம்
அதையே நினைக்க வேண்டியுள்ளது
நீ இல்லாத பொழுதில்
சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரைப் பார்க்கையில்
அசையும் முகம் உன்னுடையதெனினும்
ஓரிரு முறை மாறாட்டமாகி
தெளியும் தருணம்
மறுபடியும் மறுநாள்
ஆளற்றுப் போன உணர்வில்
பாசிபரவிய சுவர் ஈரத்தில் சாய்ந்தபடி
நாள் முதிர்ந்து கனியும் மேற்கில்
இதற்குமுன் பார்த்திராத புதிய காட்சிக்காக
தயாராக உள்ளேன்.
