புஷ்பால ஜெயக்குமார்
அந்த அறையில் மூன்று பேர் இருந்தார்கள். அவர்கள் எதற்காகவோ காத்திருப்பது போலவும் இன்று ஒரு முடிவு எடுத்துவிடவேண்டும் என்பது போலவும் உறுதியாக இருந்தார்கள். அந்த அறையிலிருந்தவர்களின் பெயர்கள் ஒருவர் பின் ஒருவராக முன்னா, குமார், மற்றும் தம்பா. அந்த அறையில் மின் விசிறி அதன் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்ததது. குமார் அந்த அறையில் குறுக்காக நடந்து கொண்டிருந்தான். முன்னா தலை கவிழ்ந்தபடி நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தான். தம்பா தன் இரு கைகளையும் மார்பில் கட்டியபடி தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டு சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
அந்த அறை மஞ்சள் நிறத்தில் இருந்தது. அறையின் ஓரத்தில் ஒரு மின்சார விளக்கு ஒன்று எரிந்துக்கொண்டிருந்தது. அந்த அறையில் தான் அவர்கள் ஒரு முடிவை எடுக்க போகிறார்கள். இதற்குமுன் அவர்கள் ஒரு முடிவை எடுப்பதற்காக இப்படி அவர்கள் கூடியதில்லை. முதலில் மிகுந்த கவனத்துடன் தொடங்கவேண்டும் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை. திடீரென்று அம்முவரில் ஒருவனின் குரல் “இப்படியே இருந்தா எப்படி” என்று அறையிலிருந்த அம்மூவருக்கும் கேட்கும்படி ஒலித்தது. அதற்கு பிறகு ஒருவன் அவனது கடந்த காலத்தில் நிகழ்ந்த உப்புசப்பில்லாத அவனது வாழ்க்கயில் நிகழ்ந்த அந்த ஒரு மறக்கமுடியாத இன்றுவரை தொந்தரவு செய்யும் அந்த நிகழ்ச்சியை மெதுவாக சொல்ல தொடங்கினான்.
இப்படி ஒவ்வொருவராக அந்த மூன்று பேரும் அவரவர் கதைகளைச் சொல்லத் தொடங்கிச் சொல்லி முடித்தார்கள். அவர்கள் மூவரும் சொன்ன கதைகளுக்கு ஒரு அர்த்தம் அல்லது ஒரு தொடர்பு உண்டென்றால் அது அவர்கள் தேடும் அல்லது அடைய விரும்பும் ஒரு முடிவு அல்லது விடை தான். அதை அடையவே அவர்கள் இங்கே மூவரும் கூடியுள்ளனர். மேலும் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில் அவ்வறையைத் தேர்ந்தெடுத்து அதனுள்ளே அடைபட்டுக் கொண்டார்கள்.
அங்கே எதோ நிகழ்ந்து விட்டிருந்தது. அதைப் பற்றித்தான் அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். அது மிக மோசமாக இருக்கவேண்டும். அது பற்றிய விடை தெரியவில்லை அவர்களுக்கு. இத்தனை நாள் அவர்கள் ஒன்றாக இருந்தும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்கிற மனப்பாங்கில் தான் இருந்து வந்துள்ளனர் என்பது இப்போது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. அவர்கள் வேறு வேறு மாதிரியான மனிதர்களாகத் தோற்றம் கொண்டிருந்த்வர்களாகவும், அவர்கள் நண்பர்களாகவும் இருந்தார்கள். நீண்டகால நண்பர்கள். அவர்களின் நட்பு அர்த்தமற்று இருந்தது.
அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் நீண்ட நாள் நட்புடன் இருப்பது அதிசயம் தான். அவர்கள் அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அதில் தீராத பிரச்சனைகள் இருந்தது. அதை அவர்கள் பேசி தீர்த்துக் கொள்ளப் பார்த்தார்கள். ஆனால் அது மேலும் மேலும் பெரிதாகி கொண்டே போயிற்று. அவர்களுக்குள்ளே ஒரு அமைதி என்பது இல்லை. வேறு வேறு விஷயங்கள் தோன்றிக் கொண்டே இருந்தது. அர்த்தமற்று இருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மீறி எதோ ஒன்று அவர்களை ஈர்த்துக் கொண்டே இருந்தது. அதுவும் தற்காலிகமாக்கத் தான் இருந்தது. பகைமை என்று தனிப்பட்ட முறையில் ஏதுமில்லை. ஆனால் அது இருந்தது.
அந்த நண்பர்களின் பிரசித்திபெற்ற ஒரு ஒருங்கிணைவு அவர்களுக்குள் ஏற்பட்டு விட்டிருந்தது. அந்த நட்பு இப்பொழுது எப்படி உண்டானது என்று இப்பொழுது சரியாகச் சொல்லிவிட முடியாது. ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அவர்களை இணைத்தது. அவர்கள் மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொள்வதற்கான நிகழ்வுகள் வந்தவண்ணம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அது அவர்களை இனைப்பதற்கான முயற்சி என்று அப்பொழுது அவர்கள் அறிந்திருக்கவில்லை. தெருவிலும் மைதானத்திலும் சினிமா திரையரங்கிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலும் அவர்கள் மாறி மாறி சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் வயது கூடக் கூட நட்பு இன்னும் இறுக்கம் ஆகியது. அவர்கள் ஊரெல்லாம் சுற்றி வந்தார்கள். மனம் விட்டுப் பேசிக்கொண்டார்கள்.
இவ்வாறு அவர்கள் இருப்பதற்கான காரணம் சொல்லி மாளாது. அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். எல்லாவற்றையும் பற்றிப் பேசினார்கள்.
மன போனபடியும் ஆழ்ந்து சிந்தித்தும் பேசினார்கள். கேளிக்கையில் கலந்து கொண்டார்கள். வானத்தின் கீழ் அமர்ந்து இயற்கைக்கு ஒப்ப நடந்து கொண்டார்கள். அவர்களது மனம் விசாலம் அடைந்தது போல் அவர்களது பேச்சும் இருந்தது. அந்த பேச்சின் வழியாக ஒருவரை ஒருவர் ஆழம் பார்த்துக் கொண்டார்கள். அந்த மூன்று பேரில் ஒவ்வருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்களது நட்பின் வழியே இடையூறு செய்த படி இருந்தது. ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் சமாதானம் செய்தபடியும் எதையோ மறைத்தபடி அவர்கள் பழகி வந்தார்கள்.
அந்த அறையில் அவர்கள் மாட்டிக்கொண்டார்கள். ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள். அவர்கள் முன்பே சொல்லி வைத்தபடி தனித்தனியாகச் சந்தித்துப் பேசி முடிவெடுத்து அந்த அறையில் வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். அந்த அறைக்குச் செல்ல அவர்களுக்கு வழி தெரிந்திருந்தது. வெளியே வருவதற்கும் அவர்களுக்கு வழி தெரியும். அதுவல்ல பிரச்சனை. அங்கே அவர்கள் கூடுவதற்குக் காரணம் எதுவோ அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. மூன்று வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு சிந்தனைகள் காலம் இடம் புரிதல்கள் என்று இப்படி இருக்கும் போது அவர்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு பேசி அதை எப்படிப் புரிந்து கொண்டு விடைக் கான போகிறார்கள் என்பது தான் இங்கே கேள்வி. அது ஒரு கண்ணாடி அறை இல்லை என்றாலும் அது போல் தான்
தெரிந்தது. அவர்கள் மௌனமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள். இங்கிருந்து பார்ப்பதற்கு அதி தீவிரமான இசை மௌனமாக இசைப்பது போல் இருந்தது. அல்லது நாடக காட்சியை ஒத்தது போலவும் இருந்தது. அவர்களுக்கு யார் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. யாரோ சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வதைப் போல் நடந்து கொண்டார்கள். அவர்கள் ஒரு முடிவைச் சொல்ல விழைகிறார்கள். அது அவர்களுக்கான விடை மட்டும் அல்ல. அவ்விடை அல்லது அம்முடிவு அவர்களுக்கான விடுதலையும் கூட. அதைத் தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஒவ்வொருவரின் வார்த்தைகளும் ஒருவரை ஒருவர் மறுத்து இருந்தது. எதாவது ஒரு ஆபத்து தவிர்க்கவே முடியாமல் நிகழுமானால் அவர்கள் உடனே ஒரு முடிவை எடுத்து விடுவார்கள் என்று நினைக்கும்படி அவர்கள் நடந்துக்கொண்டார்கள். அவர்கள் நண்பர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் நம்பினார்கள். ஒரு கட்டத்தில் “நீயே சொல் ” என்றார்கள். அவர்கள் இவ்வளவு தூரம் மனம் விட்டுப் பேசுவதற்கு அவர்கள் நண்பர்களாய் இருப்பதும் ஒரு காரணம். அந்த நட்பு அவ்வப்பொழுது நடந்து முடிந்த நிகழ்வுகளின் ஞாபகத்தால் ஒருவருக்கு ஒருவர் பொதுவாகத் தலை அசைத்து ஆமோதித்துக் கொண்டார்களாக இருந்தார்கள். உண்மையில் அது வேறு வேறு ஆக இருந்தது. அவனவனுக்கு அவன் நினைப்பதுதான் சரி என்பதாக நடந்து கொண்டார்கள். ஒரு நாள் அவர்கள் பிரியப் போகிறார்கள். அது தான் அவர்களின் பேச்சின் முடிவாகவும் தீர்மானமாகவும் இருக்கப் போகிறது. அவர்களைக் காட்சிப் படுத்திப் பார்க்கும் போது மூன்று இறக்கைகள் கொண்ட பறவை ஒன்று ஒரு அறையில் மாட்டிக் கொண்டு அல்லாடுவது போல் தோன்றியது. ஒரு தீவிரமான நிலைப்பாடு அல்லது அவர்கள் எடுக்கப்போகும் முடிவு அவர்களைச் சுற்றிச் சுற்றி வருவது போலவும் அதை அவர்கள் பிடிப்பதற்கு எத்தனிப்பது போலவும் அவர்கள் நடந்து கொண்டார்கள்.
அவர்களுக்குள் இருந்த பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக் கொள்ள முயன்றபோது அது வேறு வேறு மாதிரியான வடிவத்தில் உரு கொண்டு வளர்ந்துகொண்டே போயிற்று. இதில் ஒரு ஆச்சரியம் அவர்கள் இந்த உலகத்தின் கண்களில் படவே இல்லை. அவர்கள் எங்கோ ஒரு அறையில் யார் கண்ணிலும் படாமல் இருந்தார்கள். அவர்கள் பிரச்சனை என்ன, அதைப் பற்றிய கவலை யாதென அவர்களைத் தவிர யாருக்கும் தெரியாது. அது ஒரு மௌனமாக நடக்கும் சண்டை மனஸ்தாபம் சச்சரவு என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த அறையில் அதில் அவர்கள், அவர்களது பிரச்சனை, அந்த சூழ்நிலை என்று தீர்க்கமாக நிலைத்திருந்தது. சீட்டாட்டத்தில் ஒருவர் தோற்றுக்கொண்டே இருக்கும் மனநிலையில் அவர்கள் மூவரும் அடைந்திருந்தனர். இதில் யார் யார் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கின்றனர், இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதெல்லாம் ஒரு தனிப்பட்ட கதை. அதனால் எந்த உபயோகமும் தற்சமயம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஒன்றை அல்லது ஒரு விஷயத்தை மூன்று பேருக்குச் சமமாகப் பங்கிட்டுத் தர முடியாது.
அவர்கள் ஒருநாள் அந்த அறையைவிட்டு வெளியே வருவார்கள். ஏன் எந்த ஒன்றும் அம்மூவருக்கும் ஒரே மாதிரியாகத் தோன்றுவதில்லை. அவர்களை, அந்த மூவரையும் அந்த அறைக்குள் சென்ற கணத்திலிருந்து எல்லோரும்
வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் சண்டை போடவேண்டும், சண்டை போட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும். பின்னாளில் அவர்களைப் பற்றி யாராவது நினைப்பார்களேயானால் இது தான் அவர்களுக்குச் சரியான முடிவு என்று நினைக்க வேண்டும். அவர்கள் அந்த அறையில் நுழையும்போது இருந்த மனநிலையை இனி ஒரு போதும் அவர்களால் திரும்பப் பெற முடியாது. எந்த நம்பிக்கையில் அந்த அறைக்குள் நுழைந்தார்களோ அது ஈடேறப் போவதில்லை. ஆனாலும் அவர்களது முயற்சி போராட்டம் எல்லாம் காலத்தில் கரைந்து தான் போகப் போகிறது. அது ஒரு வாய்ப்பு அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். வறண்ட இந்த வாழ்கையிலே அது ஒரு வாய்ப்பு. எந்நேரமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் வெளியே வரலாம் அதுவல்ல தீர்வு, எந்த நோக்கத்திற்காக உள்ளே போனார்கள், எப்படிச் சிக்கிக்கொண்டார்கள் எப்படி மீளப் போகிறார்கள் என்பதெல்லாம் தற்சமயம் இப்பொழுது எதுவுமே யாருக்குமே தெரியாது. அவர்களை நன்றாக வேடிக்கை பார்க்கலாம். ஒரு நாடகத்தின் காட்சியைப் போல் புரிந்து கொண்டுவிடலாம். “என்ன ஒரு அற்புதம்” என்று சொல்லாம்.
அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். மீள்வது கடினம். அவர்கள் யாரிடமாவது பஞ்சாயத்துக்குப் போனாலும் “நீங்கள் ஒன்றாகத்தானே இருந்தீர்கள், உங்களுக்குள் என்ன?” என்று தான் சொல்வார்கள். அவர்களைப் பிரிக்கலாம். அது ஒரு வழி இருக்கிறது. அவர்களைப் பிரித்துவிட்டால் அந்த பிரச்சனையும் அவர்கள் எந்த முடிவைத் தேடி வந்தார்களோ அதுவும் இல்லாமல் போகும். அவர்களை விட்டு அது போகும்போது அவர்களும் பிரிந்து போய்விடுவார்கள். அல்லது அவர்கள் மாறவேண்டும். அவர்கள் வேறு வேறு மனிதர்களாக மாறவேண்டும். அது யாருக்கும் தெரியக் கூடாது. அதை மர்மமான முறையில் மறைத்து வைக்க வேண்டும். இங்கு நடப்பது அதேபோல் முன்பு நடந்தது போலவே இருக்கவேண்டும். அப்பொழுது இதுவரை அவர்கள் எடுக்காத முடிவு எடுக்கப்படலாம், அல்லது எடுக்கக்கூடிய சாத்தியம் ஏற்படலாம். இதற்கு மூவரும் ஒத்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒரு செயல் நடைபெறுகிறது என்று அவர்களுக்குத் தெரியாமல் இருந்தால் மிக யதார்த்தமான மற்றும் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு என்றும் மிகக் கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்து விட்டோம் என்றும் அவர்கள் நினைக்கக் கூடும். அப்படியென்றால் அவர்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறு என்றுதான் அந்நிகழ்வு நடக்க முடியும். யதார்த்தத்தில் அம்மூவர் அந்த அறையில் இருப்பது அவர்கள் உரையாடிக் கொண்டிருப்பது எல்லாம் அச்சொற்களின் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மனநிலைகளின் அவர்கள் ஏற்கனவே எடுத்த சில முடிவுகளின் பிம்பத்தின் பாதிப்பிலிருந்து அவர்களால் தாக்கம் கொள்ள முடிந்தது. தனிப்பட்ட முறையில் அந்த மூவரில் ஒருவர் பின் ஒருவராக பின் தொடர்ந்து போனாலும் அந்த ஒவ்வொருவரின் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாமே தவிர இம்மூவரின் முடிவைப் பற்றிய சாத்தியப்பாடுகளை அறிந்து கொள்ள முடியாது. எது இனைகிறதோ எது விலகுகிறதோ அதைப் பொருத்து விடை காணமுடியும் என்று அவர்கள் நம்பலாம். கடைசியில் அந்த அறையிலிருந்த புழுக்கம் கூட ஒரு காரணமாக இருந்தது என்றும் அவர்கள் பின்னாளில் நினைவு கூறலாம். அவர்கள் தேடிவந்தது, திட்டம் தீட்டியது, சரியாக அவர்கள் பேசத் துணிந்தது எல்லாம் முடிந்து அவர்கள் ஒன்றாகக் கூடி அந்த அறையில் அடைந்த (அடைத்த) பிறகு அவர்களால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் போயிற்று. இனி அது ஒரு காட்சி. எப்பொழுது நினைத்தாலும் கடைசிவரை ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று தான் நினைக்கத் தோன்றும். இருந்தாலும் அம்முயற்சி அவர்கள் மனதில் மாறாத வடு போல் இருக்கத்தான் போகிறது. வந்தது வரட்டும் என்று அவர்களை அந்த அறையை விட்டு வெளியேற்றபடலாம். அப்பொழுதாவது கிடக்குமா முடிவு. கிடைத்தது போல் தோற்றம் தரலாம். மேலும் அந்த அறை அடையும் ஒரு வெறுமை அதற்குச் சாட்சியாக இருக்கலாம். முக்கியமாக அந்த அறையின் கதவு திறந்திருக்கும்.
இப்பொழுது அந்த அறையை விட்டு அவர்கள் வெளியேறி விட்டிருந்தனர். அந்த அறையில் யாரும் இல்லை. அந்த அறை வெறிச்சோடி இருந்தது. அந்த அறை அவர்கள் இருந்த அறை தான் என்பது தெரிய வந்ததைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர்கள் அந்த அறையை விட்டு வெளியே வந்து படிகளில் இறங்கி நேராகத் தெருவில் வந்து நின்றார்கள். வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அவர்கள் மூவரும் ஒன்றும் பேசாமல் பிரிந்து சென்றார்கள். அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. அப்படித்தான் அவர்கள் உணர்ந்தார்கள். இனிமேல் அவர்கள் இறந்தால் கூட அவர்களுக்குக் கவலை இல்லை. தனித் தனியாக இறந்து போக போகிறார்கள். அது இதற்குமுன் பட்ட பாட்டினை விட எவ்வளவோ மேலானது. அர்த்தமற்றது.
இப்படிப்பட்ட நிலையில் அவர்களை நாம் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அவர்களது மனக்கசப்பு அப்படியேதான் இருக்கப் போகிறது. அது யார்க்கும் தெரியப்போவதில்லை. அதைப்பற்றி அவர்கள் ஆராய்ந்துகொண்டே இருக்கலாம். அது ஒரு முடிவற்ற செயல். எந்த கொள்கையாலும் கோட்பாட்டாலும் அவற்றை நிவர்த்தி செய்ய முடியாது. அது அந்த அறையிலேயே அன்று இருந்த தட்ப வெட்ப நிலையிலேயே தேங்கிக் கிடக்கப் போகிறது. அந்த மூவரின் மனதிற்கு அந்த அறைக்கும் யாருக்கும் தெரியாமல் ஒரு வழி இருக்கத்தான் போகிறது.
