ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 19

15.10.2021

அழகியசிங்கர்



ஜெகன் : இந்த முறை சாகித்திய அக்காதெமியின் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது.

மோகினி : கடைசிவரை ஒரு திரில்தான்.

ஜெகன் : அது கிடைப்பதற்குப் பலர் அலை மோதுவதாகக் கேள்விப்படுகிறேன்.

மோகினி : ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும்.  அதன்படி செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள்.

ஜெகன் : உங்களால் யூகிக்க முடிகிறதா?

மோகினி : யாருக்கும் கிடைக்கும் என்றா.

ஜெகன் : ஆமாம்.  

மோகினி : இந்த முறை ஒரு பெண் எழுத்தாளருக்குக் கிடைப்பதுதான் சரியாக இருக்கும்.

ஜெகன் : இதைப் பற்றி நாம் பேசினால் ஆண் எழுத்தாளர்கள் எல்லாம் சேர்ந்து நம்மைக் கிழி கிழியென்று கிழித்து விடுவார்கள்.

மோகினி : ரொம்ப ஆண்டுகளாகப் பெண் எழுத்தாளர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை.

ஜெகன் : ஆமாம்.  கடைசியாக திலகவதிக்குத்தான் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

மோகினி : புத்தகத்திற்காகப் பரிசா? எழுத்தாளர்களுக்காகப் பரிசா?

ஜெகன் :எழுத்தாளருக்காகப் பரிசுதான்.  எப்போதும் சாகித்திய அக்காதெமி பரிசு புத்தகத்திற்காக வழங்கப் படுவது கிடையாது.

மோகினி : பல ஆண்டுகளுக்கு முன் வந்த ‘மையம்’ காலாண்டு இதழில்  இலக்கியப் புரவலர்களின் மறதிக் கட்டளைகள் என்ற கட்டுரையைப் படித்து இருக்கிறீர்களா?

ஜெகன் : ஆமாம்.  ஜி .நல்லக்கண்ணன் என்ற பெயரில் ஒரு பிரபலமான எழுத்தாளர் எழுதிய கட்டுரை.’ அதில் எழுதியிருப்பதை இங்கு அப்படியே தருகிறேன் :

‘1979-82 இடைப்பட்ட காலத்தில் தமிழில் வெளிவந்த புத்தகங்களில் சிறந்த புத்தகம் திரு மீ.ப சோமசுந்தரத்தின் நமது செல்வம் என்று மு.அ.செ அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது.  மீப சோமுவின் புத்தகம அந்தக்  காலகட்டத்தில் வெளிவந்த புத்தகங்களில் சிறந்ததென்று சொல்லியிருப்பதோடு அதைப் படைப்பிலக்கியம் என்றும் சொல்லியிருக்கிறது அதன் பரிசுக்குழு.

சென்ற தலைமுறை வணிக எழுத்துக்கள்தாம் இலக்கியம் என்று மயங்கும் உறுப்பினர்களைக் கொண்டது போலும் அதன் பரிசுக் குழு.  
ஒரு விஷயம் தெளிவாகிறது.  சென்ற தலைமுறை இலக்கிய சராசரித் தனத்துக்கு அரவணைப்புத் தந்து விட்டு முடிந்ததும், அடுத்த தலைமுறை சராசரிகளை இந்தப் பரிசுக்குழு அரவணைக்கச் சென்றுவிடும்.  வழக்கம் போல இலக்கியம் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மறதிக் கட்டளையாகிவிடும்.

மோகினி : இதை எழுதியவருக்கு தனக்குப் பரிசு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் தெரிகிறது.

ஜெகன் : நடிகர் ஸ்ரீகாந்த் இறந்து விட்டாரே..

மோகினி : அவர் ஒரு சிறந்த வில்லன் நடிகர்.  ஜெயகாந்தன் படங்களில் நடித்த போது அவர் ஒரு சிறந்த நடிகராகத் தெரியப்பட்டார்.

ஜெகன் : முதிய வயதில் அவர் முகமே மாறிவிட்டது  அவர்தானா இவர் என்ற சந்தேகம் கூட வரும்.

மோகினி : அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

ஜெகன் : இன்னும் அழகியசிங்கர் வரவில்லை. கூட்டம் நிறைவடைந்தது என்று சொல்ஙூ விடலாம்.