ஔவையார் தனிப்பாடல்கள் [தொடர்ச்சி]/ வளவ. துரையன்

நிட்டூர மாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரப்போனும் – முட்டவே
கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும்.


யார் யார் கெட்டுப்போவார்கள் என்னும் பட்டியல் ஒன்றை ஔவை தருகிறார். அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத குலமகள், கூச்சப்படும் விலைமகள் ஆகியோர் வாழ்வு கெட்டுவிடும் என்கிறார்.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ
அன்பிலாள் இட்ட அமுது.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் ஒப்புக்காக ஒருத்தி ஔவைக்கு உணவளித்தாள். அதனை வெறுத்த ஔவை பாடிய பாட்டு இது. மாணொக்க வாய் = மாட்சிமை மிக்க வாய்.