இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘சினிமாவும் நானும்’/சுரேஷ் கண்ணன்

இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘சினிமாவும் நானும்’ என்கிற நூலை நான்-லீனியராக வாசித்துக் கொண்டிருக்கிறேன், எச்சரிக்கை: இது குறித்த ஒரு கட்டுரை வரலாம்.

அதில் ஒரு அத்தியாயத்தில் ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் உருவான கதையொன்று இருக்கிறது. ஏறக்குறைய அனைவரும் அறிந்ததுதான். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ என்கிற குறுநாவலில் இருந்து உருவானது. நானும் பல முறை அதை வியந்திருக்கிறேன். ஏனெனில் குறுநாவலுக்கும் திரைப்படத்திற்கும் தொடர்பே இருக்காது. ஒரே ஒரு துளி மையை மாத்திரமே புதுமைப்பித்தனில் இருந்து எடுத்திருக்கிறார். போலவே ‘முள்ளும் மலரும்’ திரைப்படமும். மிகச் சுமாரானதொரு வணிக நாவலை ‘என்னுடைய கேரியர்யலே பெஸ்ட் படம்’ என்று ரஜினியே அடிக்கடி சிலாகிக்கும் அளவிற்கு மிக அற்புதமானதொரு திரைப்படமாக உருவாக்கியிருப்பார் மகேந்திரன்.

உதிரிப்பூக்கள் அத்தியாயத்தில் அவர் தந்திருந்த ஒரு தகவல்தான் ஆச்சரியமாக இருந்தது.அவர் நூலில் விவரித்திருப்பதை சுருக்கமாக விவரிக்க முயல்கிறேன்.

மகேந்திரன் இந்தக் குறுநாவலை ‘தாம் ஒரு சினிமா இயக்குநராகப் போகிறோம்’ என்று அறிவதற்கு பல வருடங்களுக்கு முன்பே வாசித்து மறந்திருக்கிறார். என்றாலும் அந்தப் படைப்பில் வரும் சிறுவனும் சிறுமியும் அவர் நினைவில் அழுத்தமாகப் பதிந்து அவர்களைப் பற்றியே பிடிவாதமாக பல வருடங்களுக்கு தொடர்ந்து யோசித்திருக்கிறார். சிறிது சிறிதாக அதன் திரைக்கதை அவர் மனதிலேயே வளர்ந்திருக்கிறது. பிறகு திரைத்துறைக்கு வந்து முள்ளும் மலரும் வெற்றிக்குப் பிறகு இன்னொரு வெற்றியைத் தேடி ஓடாமல் தன் சொந்த தயாரிப்பில் ‘உதிரிப்பூக்களை’ உருவாக்க முடிவு செய்கிறார். ஆனால் சில காரணங்களுக்காக அவர் நண்பரை தயாரிப்பாளர் ஆக்குகிறார்.
மகேந்திரன் முதலில் தயாரிப்பாளரிடம் சொன்ன விஷயம், புதுமைப்பித்தன் குடும்பத்தைச் சந்தித்து அவர்களுக்கான தொகையை தர வேண்டும் என்பது. தயாரிப்பாளர் சற்று தயங்கியிருக்கிறார். “என்னங்க..உங்க ஸ்கிரிப்ட்டுக்கும் அந்தக் குறுநாவலுக்கும் சம்பந்தமேயில்லை. அப்புறமும் பணம் தரணுமா என்ன?” என்றாலும் இத்திரைப்படம் உருவாக அந்தக் குறுநாவல்தான் துவக்கப்புளளி என்பதால் வற்புறுத்தி பு.பியின் குடும்பத்தைச் சந்தித்து தொகையைத் தந்திருக்கிறார்கள். படம் வெளியாகி ஆச்சரியமாக மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இப்போதுதான் அந்த மேட்டரே…

ஏதோ ஒரு இலக்கிய வட்டம் மகேந்திரனுக்கு கடிதம் எழுதியதாம். “புதுமைப்பித்தனின் பெயரை உபயோகித்து வியாபாரம் நடத்தி விட்டாய்” என்பது.

()

அது எந்த இலக்கிய வட்டம் என்று தெரியவில்லை. தமிழ் இலக்கிய ஆசாமிகளில் சிலர் அப்போதே ஒரு மார்க்கமாகத்தான் இருந்திருக்கிறார்கள் போல…

அய்யா சாமிகளா.. அப்போது மணிக்கொடி வகையறா நபர்களைத் தவிர்த்து புதுமைப்பித்தனின் பெயர் கூட வெகுசன சமூகத்திற்கு தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இதில் அவர் பெயரைப் பார்த்து பயங்கரம் கூட்டம் சேர்ந்து ஒரு சினிமா வெற்றி பெற்றிருப்பது உண்மையாகியிருந்தால் தமிழ் சினிமா எப்பவோ உருப்பட்டிருக்குமே என்றுதான் இதை வாசித்ததும் நினைக்கத் தோன்றியது.

சுவாரசியமான நூல். இன்னும் பல சுவையான சம்பவங்கள். மேலே குறிப்பிட்டது போல் இன்னொரு தகவல். இதுவும் மகேந்திரன் பல நேர்காணலில் கூறியதுதான். நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படம் எப்படி உருவாகியது என்றால் அவர் விடியற்காலையில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணைப் பார்த்ததுதான். அதற்குப் பிறகுதான் திரைக்கதை மளமளவென்று வளர்ந்திருக்கிறது.

விஷயம் என்னவென்றால் முகமே தெரியாத அந்தப் பெண்ணிற்காக தொடர்புள்ள அத்தியாயத்தில் பலமுறை நெகிழ்ந்து நன்றி கூறி நினைவுகூர்ந்திருக்கிறார் மகேந்திரன். .

சுவாரசியமான ஆசாமிதான் போல.

📚 மீள் 📚