டிஸ்டிரிக்ட் செண்டிரல் லைப்ரரி/ஜெயராமன் ரகுநாதன்

என் வீட்டிலிருந்து மேற்கால நடந்து அம்பது தப்படிக்குப்பிறகு நீங்கள் வலது புறம் திரும்பவேண்டும். திரும்பினவுடனே நடக்க ஆரம்பித்தால் உயிர் உங்களுது இல்லை.

முழங்கையைச்சீழ்த்துக்கொண்டு ஒரு பல்சர் பையன் தலை சிக்கு நாத்தம் நாசியில் தெரியும் அருகாமையில் போவான். லொடக்காணி சைக்கிளில் ஒரு ஸ்கூல் வாண்டு பாலன்ஸ் தள்ளாட்டத்துடன் நடுங்கிக் கொண்டே நெருங்கி சற்று முன் விழுங்கின வேர்க்கடலை பர்பி வாசத்துடன் சிராய்த்துக்கொண்டு போகும். அதனால் திரும்பி கொஞ்சம் சுதாரித்து, அப்படி இப்படி பார்த்தபின்னர்தான் தெரு ஓரத்திலேயெ நடக்க வேண்டும்.

கொஞ்ச தூரத்தில் வலது புறம் நல்லி சில்க் கடையின் ஜாஜ்வல்யங்கள், எதிரே கங்கா ஸ்வீட்ஸின் வெங்காய பக்கோடா மற்றும் நம்பீசனோ ஊத்துக்குளியோ வெனும் சந்தேக நெய் நாறும் போளி காற்றில் தவழும். போறாத்துக்கு விஜயராம் காபி கொட்டை, சைன்டிஃபிக் டெய்லர், செல்வ விநாயகா மளிகை, சுமனா ஸ்டேஷனரி என்று வர்ஜ்யாவர்ஜ்யமில்லாத புழுதி அம்மும் கடைகள், கூட்டம்.

எப்போதும்போல கால வெள்ளத்தில் நுங்கி, ஓடத்தில் ஏறி நொடிக்கு பத்து வருஷமாய் ஐம்பது வருஷம் பின்னோக்கிப்போனால்…

என் வீட்டிலிருந்து மேற்க்கால நடந்த அம்பது தப்படிக்குப்பிறகு நீங்கள் வலது புறம் திரும்பவேண்டும். திரும்பினவுடனே…

ஒன்றும் இருக்காது!

பொட்டல் வெளி. இடது புறம் கண்ணம்மா பால்காரியின் எழுபது எண்பது எருமைகள் கட்டிய கீற்றுக்கொட்டகை, பின்னால் வெட்ட வெளி, எங்கள் கிரிக்கெட் மைதானம்.

அக்டோபர் நவம்பர் மாதங்களில் மழை தண்ணீர் தேங்கினால் நாங்கள் வேறு வென்யூ தேடுவோம். அப்படி ஒரு வருஷம் ஆம்ட்டதுதான் சங்கரின் வீட்டு பக்க வாட்டு இடம். கஸ்தூரிபாய் நகர் மூன்றாவது மெயின் ரோடில், அந்த தேக்குமல்லா சாஹப்பின் வீட்டுக்கு அடுத்த வீடு, அதான் இப்போ அந்த பீட்சா கடை இருக்கிறதே, அதற்குப்பின்னாடி. பெரிய இரண்டு அடுக்கு மாடி வீடு. ஆனால் காம்பௌண்டுக்குள் 140 அடி நீளம் 20 அடி அகலம் இடம் இருக்கும். அதைத்தான் நாங்கள் கிரிக்கேட்டின் மழைக்கால ஸ்டேடியமாக்கி விட்டோம்.

அது மாதிரியான ஒரு சாயங்காலத்தில் அம்மாவை விரட்டி விரட்டி டிஃபன் சாப்பிட்டபிறகு எப்போதும்போல முதல் ஆளாய் சங்கர் வீட்டிற்குபோய் குரல் கொடுத்தேன்.

“சங்கர் இப்பத்தான் டிஃபன் சாப்பிடராண்டா! நீயும் சாப்பிடறயா”

சங்கரின் அம்மா வாத்சல்யத்துடன் கேட்க
வெட்கத்தோடு இப்பத்தான் சாப்பிட்டேன் என்று மறுத்து விட்டு, பக்க வாட்டில் மேலேறும் மாடிப்படியில் உட்காரபோனவனை நெரடியது, இந்த வ்யாசத்தின் கதாநாயகனான அந்த புத்தகம்.

அழுக்கு மஞ்சளில் அட்டை. அதில் ஒரு தலை விரித்த பெண்ணின் முகம். கலைந்திருந்த குங்குமத்துளிகள் ரத்தக்கீற்றாய் விரவிக்கிடக்க, ஆளவந்தாரின் ஆவி என்று தீற்றல் தீற்றலாய் எழுதியிருந்தது. பி டி சாமி என்று எழுத்தாளர் பெயர்.

அடியில் பிரேமா பிரசுரம்!

தோசை மணத்துடன் வாயைத்துடைத்துக்கொண்டு வந்த சங்கரிடம் கேட்டேன்.

”என்ன புஸ்தகம்டா இது?”

“எங்கண்ணா மணியோடதுடா! பயங்கர கதை! நம்ம மாதிரி சின்னப்பையங்கள்ளாம் படிக்கக்கூடாதாம்“

புரட்டிப்பார்த்தேன்.

முதல் பக்கத்தில் மாவட்ட நூலகம், அருணாசலபுரம், அடையாறு என்று காபியிங் நீலக்கலர் முத்திரை.

“டேய்! லைப்ரரியில விட்டுக்கெல்லாம் புக் குடுப்பாங்களா?”

அஞ்சு ரூவா கட்டி மெம்பரான உண்டுடா

அன்னிக்கு ஆட்டம் ஒண்ணும் சுகப்படவில்லை எனக்கு, இரண்டு இன்னிங்ஸிலும் ரெண்டு மூணு ரன்னிலேயெ அவ்வுட்டாகி, நான் போலிங் போடும்போது சீச்சு என்னும் கோண்டுவின் அண்ணன் ஸ்ரீவத்சன் விளாசிவிட்டான்.

இரவு வீட்டில் அம்மாவிடம் சொன்னபோது உடனேயே கேட்டாள்

உன்னையும் மெம்பராக்கச்சொல்லட்டுமா? புஸ்தகம் படிக்கிறயா?”

அந்த சனிக்கிழமையே நானும் சங்கரும் கையில் ஐந்து ரூபாய்களுடன் அருணாசலபுரம் டிஸ்ட்ரிக் சென்ட்ரல் லைப்ரரியில் இருந்தோம்.

வாழ்க்கையில் முதல் முறையாக கிடைத்த மெம்பர்ஷிப்!

நாங்கள் இருவரும் தேடியது பிரேமா பிரசுரம் பதிப்பித்த பி டி சாமி புத்தகங்கள்! இந்த பேய்க்கதை இலக்கியத்தில் எங்கள் அறிவு வளர வளர, சந்திரமோகன், மேதாவி போன்ற ”மாபெரும்” எழுத்தாளரின் கதைகளைத்தேடித்தேடிப்படித்தோம்.

“ விஸ்வநாதன்! போன வாரம் பி டி சாமியோட மோகினி இல்லம்னு புது கதை வந்திருக்கு, வேணுமா?

சங்கரின் அப்பா பெயரை வைத்தே பல நாள் வரை அவனை விளித்துக்கொண்டிருந்த லைப்ரரியன் கேட்க, நாங்க பாய்ந்து ஓடி எடுத்து படிப்போம். அடுத்தடுத்து உட்கார்ந்து இருவருமே பக்கம் பக்கமாய்ப்படித்த இனிய நாட்கள்.

ஒரே வருடத்தில் தமிழ் வாணனுக்கு மாறி, சங்கர்லாலால் ஈர்க்கப்பட்டு, ஓர் அராபிய இரவு என்கிற அபார சிறுகதை எழுதிய ஸ்ரீரங்கத்துக்காரர் ஒருவர் என்னை அப்படியே கடத்திக்கொண்டு போய்விட, பிடி சாமியும், மேதாவியும், சந்திரமோகனும் ஏன், தமிழ்வாணனும் கூட என்னால் கைவிடப்பட்டு அலைக்கழிந்து போனார்கள்.

சமீபத்தில் ஒரு நாள் மீட்டிங்க்குக்காக காரில் விரைந்தபோது இடது பக்கம் சட்டென்று என் கண்ணில் பட்ட அந்த ஆர்காடு ரோடு அட்ரஸ்….

59, ஆற்காடு சாலை, கோடம்பக்கம், சென்னை – 24. வாசலில் இல் இருந்த பெரிய போர்டு

“பிரேமா பிரசுரம்!”

ஆனாலும் அந்தக்காலத்துகதைப்புத்தகங்களில் நான் பார்த்திருந்த பிரேமா பிரசுரம் என்னும் பதிப்பகத்தின் பெயர் நினைவுகளில் வந்து, அந்த இனிமையான சனிக்கிழமை நாட்களையும், அபார சுவாரஸ்ய மணித்துளிகளையும். அருணாசலபுரத்திலிருந்து வீடு வரை நானும் சங்கரும் பேசிப்பேசி மாய்ந்த கணங்களையும், கதவைத்திறந்துகொண்டே,’இன்னிக்கு என்ன புஸ்தகம் படிச்சே ” என்று கேட்டு வறுத்த வேர்க்கடலை, நுங்கு, கிர்ணிப்பழம், த்ரெப்டின் பிஸ்கெட் என்று வகைவகையாய்ச் சாப்பிடக்கொடுத்த அம்மாவும் மனதை அழுத்தினாலும், பின்னோக்கிய நினைவுகளால் சந்தோஷ கணங்களுக்குக் குறைவில்லாததாய்த்தான் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.

Viswanathan Subramanian CV Sankar