இட்டு நிரப்ப முடியாத சிவாஜித்தனம்/ம.தொல்காப்பியன்

(அய்யனின் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை)

எனது குழந்தை வயதில் சம்பூர்ண ராமாயணம் என்ற புராணப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரபல தென்னிந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருந்த படம் அது. எங்கள் ஊர் ‘#சீத்தாலக்ஸ்மி’ டூரிங் டாக்கீசில் மூன்றரை மணி நேரம் ஓடும். ஒரு வாரம் முழுதும் அந்தப் படத்தைக் காணக் குடும்பம் குடும்பமாக ஊரே திரண்டு செல்வோம்.

படம் மிக மெதுவாக நகரும். மெது மெதுவான காட்சி அமைப்புகள், அமைதி தவழும் முக பாவனைகள், சோகம் பொங்கும் பாத்திரப் படைப்புகள் என்று படம் அலுப்பூட்டும். பார்வையாளர்கள் எல்லோரும் தூங்கி வழிவார்கள். சிலர் படுத்து உறங்குவதையும் காணலாம். இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அப்படியே தலை கீழாய் மாறிவிடும்.

விழித்துக்கொண்டிருப்பவர் அந்தக் காட்சி வருவதை முன்னிட்டு மற்றவர்களை உஷார்படுத்துவார். வேறு சிலரோ திடீரென விழித்துக்கொண்டு பரபரப்படைவார்கள். இந்தக் களேபரங்களுக்கு இடையிலும் தூங்கிப் போனவர்கள் மறுநாள் காலையில், தான் எழுப்பப் படவில்லை என்பதற்காக மற்றவர்களோடு சண்டையில் இறங்குவார்கள்.

விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பரதனாகத் தோன்றும் அந்தச் சில காட்சிகளுக்காகத்தான் இத்தனை அலப்பறைகள்.

“அண்ணா! அண்ணா! என் அண்ணன் எங்கே? என் அண்ணன் ராமன் எங்கே? அண்ணா…”

என்று பதறியபடி பரதனாக சிவாஜி தோன்றும் அந்த காட்சியின்போது விழித்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அத்தனை கூட்டமும் இத்தனை சலசலப்புகளுக்கு உள்ளாகியது.

சிவாஜி திரையில் தோன்றியதும் அதுவரை தூங்கி வழிந்த, சோர்ந்து கிடந்த பார்வையாளர்கள் திடீர் விழிப்படைவதைக் கண்டு நான் திகைப்பது வழக்கம். பரதனின் முக்கியக் காட்சிகள் கடந்ததும் கூட்டம் மெல்ல மெல்லக் கொட்டகையை விட்டு வெளியேறும். என்ன நடந்தது?

சம்பூர்ண ராமாயணத்தில் பங்கு பெற்றிருந்த என்.டி. ராமாராவ் உட்பட அத்தனை நடிகர்களையும் வென்று வீழ்த்திக் காட்டியிருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவ்வளவுதான் வேறொன்றுமில்லை!.

வெற்றி வாகை;

எனது அனுபவம் அத்தோடு முடிந்து விடவில்லை

பாத்தால் பசி தீரும் படத்தில் ஜெமினி கணேசனை வென்றார். பச்சை விளக்கு போன்ற படங்களில் எஸ்.எஸ்.ஆரை வீழ்த்தினார். சபாஷ் மீனாவில் சந்திரபாபுவை வென்றார். பல்வேறு படங்களில் முத்துராமன், ஏவிஎம் ராஜன், நம்பியார், நாகேஷ், போன்ற அன்றைய காலத்து ஜாம்பவான்கள் அனைவரையும் வெற்றி கண்டார் சிவாஜி கணேசன்.

‘வியட்னாம் வீடு’வில் பத்மினியை வென்று காட்டினார். பாச மலர் படத்தில் சாவித்திரியைத் தோற்கடித்தார். மனோகராவில் கண்ணாம்பாவை ஜெயித்தார். சரஸ்வதி சபதம் படத்தில் கே.ஆர். விஜயாவைத் தோற்கடித்தார். பல்வேறு படங்களில் மனோரமாவை வென்று வீசி இருக்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட மேலான வெற்றியாக நான் காண்பது, அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் பின் தள்ளியதைத்தான்!

ஆம்! சிவாஜி கணேசனால் நடிக மேதை என்று மிக உயர்வாக வர்ணிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ராதா. மற்றவர் டிஎஸ் பாலையா. அத்தகைய ராதாவை பலே பாண்டியா உட்பட, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் அவரை விஞ்சிச் சென்று சாதனை படைத்தவர் சிவாஜி கணேசன்.

மகா நடிகர்கள் என்று கருதப்பட்ட டி.எஸ்.பாலையா, சகஸ்ரநாமம், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.ரங்காராவ், பி.நாகைய்யா போன்ற பெரும் நடிகர்களை எல்லாம் பின்வாங்க வைத்தவர் சிவாஜி கணேசன்!

பழம்பெரும் நடிகர்களை மட்டும் அல்லாமல் பின்னால் தான் சந்திக்க நேர்ந்த நவீன நடிகர்களை எல்லாம் கூட தனது நடிப்பால் ஊதித் தள்ளினார் நடிகர் திலகம்.

வென்றார், வீழ்த்தினார், தோற்கடித்தார், பின்வாங்கச் செய்தார், ஊதித் தள்ளினார் போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கான விளக்கத்தை நீங்கள் கோரலாம். உங்களுக்கு சிறு அவகாசம் அளிக்க விரும்புகிறேன். ஒரு பாடல் காட்சியைப் பார்த்துவிட்டுப் பிறகு தொடரலாம்.

ஊதித் தள்ளினார்;

‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ என்ற பாடல் காட்சியைப் பார்க்க உங்களை அழைக்கிறேன். படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் அது.

‘பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’, ‘நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை’ போன்ற உலகத் தரமான மேலும் இரண்டு பாடல்கள் இருந்த போதும் இந்தப் பாடலை குறிப்பாக நான் சொல்வதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது.

இந்தப் பாடலில் சிவாஜியோடு பாலாஜியும் சேர்ந்து நடித்திருப்பார். பாடலின் மெட்டு சற்று மெதுவான தொனியில் ஒலிக்கும். பாலாஜிக்குப் பாடிய பி.பி. ஸ்ரீநிவாஸோ மென் தொனிக் கொண்டவர். பண்ணை ஆட்களுடன் சேர்ந்து கொண்டாட்ட மோஸ்தரில் பாடப்பட்ட அந்த பாடல் சற்றும் பொருத்தமில்லாமல் வேகம் குறைந்திருக்கும். ஆனால் நடிகர் திலகம் அந்தத் தொய்வுகள் ஏதும் தெரியாமல் அப்படியே மாற்றிக் காண்பிப்பார்.

தனக்கே உரிய பாணியில் அங்கு இல்லாத ஆனால் இருந்திருக்க வேண்டிய ஓர் உணர்ச்சி வேகத்தைத் தனது உடம்பிலும் உள்ளத்திலும் கொண்டு வந்து அந்த சூழலையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொடுத்துவிடுவார்.

ஒரு நடிகனால் எத்தகைய மோசமான நடிப்புச் சூழலையும் தூக்கி நிறுத்திக் காட்ட முடியும் என்பதற்கு அந்தப் பாடல் காட்சி ஒரு சிறந்த உதாரணம்.

மெட்டு மெதுத்தன்மை வாய்ந்தது என்றால் நடிகர் பாலாஜி அதை விடவும் மெதுவானவர். இந்த இரண்டு வேகத்தடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு அந்தக் காட்சியையே குதூகலப்படுத்தியிருப்பார் சிவாஜி. ஒரு நடிகன் ஒரு பாடல் காட்சியை எப்படி ஆளுமைப்படுத்த முடியும் என்பதற்கு ஓர் இலக்கணச் சான்றாகத் திகழ்கிறது இந்த பாடல் காட்சி.

‘ஊதித் தள்ளினார்’ என்ற எனது சொற்களுக்கான காட்சி வடிவத்தை இப்போது கண்டீர்கள். இது ஒரு சிறு பொறி. அவ்வளவுதான்.

இந்தப் பாடல் காட்சியில் ஒரு புதிரையும் நீங்கள் கண்டீர்கள். ஆம்! அது புதிர்தான். வேறு நடிகர்களுக்கெல்லாம் புரியாத புதிர் அது. அந்தப் பாடலில் வந்த பாத்திரத்துக்கு ஒரு ஸ்டைலை உருவாக்கி இருப்பார் சிவாஜி கணேசன். பாடலில் மட்டுமல்லாது படம் முழுக்க அந்த ஸ்டைல் ஊடாடி நின்று அசத்தியிருக்கும்.

உற்பத்தியாகும் ஸ்டைல்;

தாம் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய புதிய ஸ்டைலை உருவாக்கி அளிப்பது சிவாஜியின் நடிப்புச் சூத்திரத்தின் பிரதான அம்சம். சித்தரிக்கப்பட்ட பாத்திரத்தின் சுபாவத்துக்கு மேலும் மெருகூட்டுவதாக அந்த ஸ்டைல் அமைந்து சிறப்பூட்டும்.

சிவாஜி தனது உடம்பில் ஸ்டலை உற்பத்தி செய்கிறார். ஏதேனும் தனித்த ஸ்டைல் இல்லை என்றால் ஒரு நடிகன் ரசிகனுக்குத் தேவைப்பட மாட்டான். சிவாஜியின் உடல் மொழி வேறாக இருந்தபோதும் அவர் தனக்கே உரிய கற்பனையின் துணை கொண்டு கேரக்டரின் சுபாவங்களுக்கேற்ற புதிய ஸ்டைலைத் தனது உடலில் உருவாக்கிக் காட்டி ரசிகனைப் பரவசப்படுத்திவிடுகிறார்.

இல்லாத ஒன்றை உருவாக்குவதுதானே திறமையினும் திறமை. தனது உடம்பில் இல்லாத ஸ்டைலைத் தேவை அறிந்து உருவாக்கித் தரும் திறமையினால்தான் சிவாஜி கணேசன் அனைவரையும் விஞ்சிச் செல்கிறார். எவராலும் வெல்ல முடியாத நிலையை அடைந்துவிடுகிறார்.

மிகை நடிப்பா?

சிவாஜியின் நடிப்பைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மிகை நடிப்பு என்ற வாளால் விமர்சக உலகம் அவரைக் கீற ஓடி வருவதை நான் காண்கிறேன். நான் அவர்களோடு ஒத்துப்போகிறேன் என்பதை எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்கிறேன்.

அதே நேரத்தில்,

குற்றம் சாட்டுவதோடு நின்றுவிட்ட, அதற்கான காரணங்களைத் தேடிக் காண விழையாத, அவர்களின் பொறுப்பற்ற செயலை நான் வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறேன்..

சிவாஜியின் மிகை நடிப்புக்கு இரண்டு முதன்மையான காரணங்களை நான் பார்க்கிறேன்.

ஒன்று,
அந்தக் காலத்துப் பார்வையாளர்களின் புரிந்துகொள்ளும் ஆற்றலைச் சார்ந்தது.

இரண்டாவது,
சிவாஜியை இயக்கிய அவரது இயக்குநர்களின் திறன் சார்ந்தது.

முதலாவது காரணத்தை நான் இங்கு விரிவாகப் பேசப்போவது இல்லை. அது அனைவரும் அறிந்த பொதுவான ஒன்றே. காலத்தை வெல்வதற்கு மனிதன் இன்னும் கற்கவில்லை என்ற உண்மையில் அதை மூழ்கடித்துவிடலாம்.

என்னைப் பொருத்தவரை இரண்டாவது காரணம் மிகவும் முக்கியமானது.

சிவாஜியின் இயக்குனர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்களாகவே இருந்தனர். அவர்கள் சிவாஜியை ஓர் ஒப்பற்ற அதிசயமாகப் பார்த்து வியந்து நின்றவர்கள். அவர்கள் விரிந்து பரந்த சினிமா பார்வை கொண்டவர்கள் அல்ல. உலக சினிமா குறித்தோ மேதமை மிக்க உலக நடிகர்களின் கேமிரா செயல்பாடுகள் குறித்தோ எந்த வித ஞானமும் இல்லாதவர்கள். சிவாஜியின் இத்தகைய இயக்குனர்கள் சிவாஜியைக் குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டுப்படுத்தும் வல்லமை அற்றவர்களாக இருந்தனர். சிவாஜியிடமிருந்து திரண்டு வரும் நடிப்பைத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் திறனற்று நின்றார்கள்

சித்தரிக்கப்பட்ட கேரக்டர்களுக்கு உயிர் கொடுப்பதற்காகப் புதிய ஸ்டைல்களை உருவாக்கி அளிக்கும் சிவாஜியின் ஆதார ஆற்றலின் வேகத்தைத் தேவை அறிந்து கட்டுப்படுத்தும் திராணி அற்றவர்களாக, அசந்து போய் நின்றிருந்த அவர்களை நான் காட்சிதோறும் காட்சிதோறும், ஷாட்தோறும் ஷாட்தோறும் அவதானித்து வந்திருக்கிறேன்.

சிவாஜியிடம் ஆங்காங்கே தெரியும் மிகை நடிப்புக்கு அவர் மட்டுமே காரணம் அல்ல.

இதே விமர்சகர்கள் ‘முதல் மரியாதை’யைப் பார்த்துக் கை கட்டி வாய் பொத்தி நிற்பதை எண்ணிப் பாருங்கள். எங்கே போயிற்று அவர்களது மிகை நடிப்பு எனும் குற்றச்சாட்டு!

சிவாஜி தனது ஆயுள் முழுதுமான சினிமா வரலாற்றில் நூறு சதவிகித சினிமா மொழியில் உருவான எத்தனை படங்களில் தோன்றி இருக்கிறார் என நினைக்கிறீர்கள்?

அவருக்கு அத்தகைய வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்தன. ஆயினும் அவர் நடித்த அனைத்துப் படங்களிலும் அவர் தரமான சினிமா மொழியைக் கையாண்டிருப்பதைக் காணலாம். சினிமா மொழியும் நாடகத்தனங்களும் மாறி மாறி இடம் பெற்றிருக்கும்.

அவரது இயக்குனர்கள் சினிமா மொழியைக் கையாண்டவர்கள் இல்லை. அவர் மட்டுமே தனி ஒருவராக முயன்றிருக்கிறார்.

கேரக்டரின் உணர்ச்சி வேகத்துக்கு ஏற்றாற்போல நடை எப்படி அமைய வேண்டும், பார்வை எப்படி இருக்க வேண்டும் குரல் எந்த தொனியில் ஒலிக்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானித்துக்கொள்கிறார். அந்த கேரக்டரின் பிறவிக் குணங்களோடு தனது உடல் மொழியை இயங்கவிடுகிறார். இது சிவாஜியின் நடிப்புச் சூத்திரம்.

சிவாஜியின் கற்பனைத் திறன் அலாதியானது. இணையற்றது. கேரக்டரின் சுபாவத்தைப் பெருக்குவது குறித்த அவரது கற்பனைத் திறன்தான் சிவாஜியின் ஜீவ ரசம். சிவாஜியைப் பிழிந்து எடுத்தால் அவரிடம் மீதமிருக்கும் ‘சிவாஜித்தனம்’ என்பது அவரது கற்பனையாகத்தான் இருக்கும்.

தன் இயக்குநர்கள் அளித்த நாடக வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு சிறந்த சினிமாவுக்கான முதல் தர நடிப்பை வெளியிட்டிருக்கிறார் சிவாஜி.

ஒரு முழுமையான சினிமாவில் நடிப்பதற்கு அவர் 1986வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வருடத்தில்தான் பாரதிராஜா தனது முதல் மரியாதையைக் கொடுத்தார். பாரதிராஜாவின் வழக்கமான குறுக்கீடுகள் இதிலும் இருந்தபோதும் சிவாஜியின் ஒப்பிட முடியாத பங்களிப்பால் ‘முதல் மரியாதை’ சினிமா, தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க பொக்கிஷமாக ஜொலிக்கிறது.

(‘சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஓர் சமர்’என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. கட்டுரையாசிரியர் ம. தொல்காப்பியன், இயக்குநர், எழுத்தாளர்.)

இன்று,ஜூலை 21, 2021
அய்யனின் நினைவு நாள்