தொலைந்து போன பாட்டியும்,பேரனும்/மாதவ பூவராக மூர்த்தி

நான் நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறேன் பத்து நிமிஷம் ஆகிறது வீட்டின் எதிரே தான். இன்னும் வரவில்லை இவ்வளவு நேரம் வேன் வந்திருக்கும். தெரு முனையில் ஏதாவது உருவம் நிழலாடுகிறதா என்று இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இல்லை. வாசல் கதவை வெறுமனே மூடி விட்டு வந்திருக்கிறேன்.

இதுவரை உங்களுக்கு எதுவும் புரிந்திருக்காது நாங்கள் இப்போது, அதாவது நானும் பிருந்தாவும்,
மகன் கார்த்திக் வீட்டில் கோயம்புத்தூரில் இருக்கிறோம். போன சனிக்கிழமை காலை வந்தோம். அந்த அஞ்சரை மணிக்கு வந்த சேரனில் வந்து கார்த்திக்கிற்காக காத்திருந்தோம். கார்த்திக் எங்கள் பேரன் விஸ்வாவுடன் காரில் வீட்டற்கு வந்து சேர்ந்தோம்.

விஷ்வாவிற்கு இன்று ஸ்கூல் இல்லை சனி, ஞாயிறு விடுமுறை. அவன் இரண்டாவது படிக்கிறான் சென்ற வருடம் முதல் அவன் மெயின் ஸ்கூலில் படிக்கிறான்.

போன வருஷம் பைபாஸ் தாண்டி கத்ரி மில்ஸில் வேன் வந்து கொண்டிருந்தது. எங்கள் மருமகள் லட்சுமி அவன் படிக்கும் ஸ்கூலின் கிண்டர் கார்டன் பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறாள்.

தினமும் காலை அவள் ஸ்கூல் போகும்போது விஷ்வாவையும் அழைத்துக் கொண்டு கத்ரி மில்சில் வரும் வேனில் ஏற்றிவிட்டு அவள் ராமநாதபுரத்தில் இருக்கும் ஸ்கூலுக்கு போய்க்கொண்டிருந்தாள்.

இந்த வருடம் முதல் வேன் எங்கள் நகருக்கு அருகிலேயே மெயின் ரோட்டிற்கு வருகிறது காலை 7:30 மணிக்கு கார்த்திக் போய் ஏற்றிவிட்டு வருவான் மாலை 3:20 க்கு வரும் வேனில் விஷ்வா வர, லட்சுமி திரும்பி வரும்போது அழைத்துக் கொண்டு வருவாள்.

இன்று திங்கள்கிழமை காலை வழக்கம் போல் கார்த்திக் கொண்டு விட்டு வந்தான்.

லட்சுமி ஸ்கூலுக்குப் போகும்போது, “ஆன்ட்டி இன்னிக்கு எனக்கு கொஞ்சம் லேட் ஆகும் நீங்க போயி விஷ்வாவை முருகன் நகர் வாசலில் மெயின் ரோட்டில் வரும் வேனில் இருந்து அழைத்து வந்து விடுங்கோ. நீங்க 3:20க்கே போயிடுங்கோ வேன் 3.30க்கு வரும் சில சமயம் லேட்டாக வரும் இருந்து அவனை அழைச்சிண்டு வந்துடுங்கோ” என்றாள்

பிருந்தா முதன் முதலில் அழைத்து வருவதால் மூன்று மணிக்கே, லேசாக தூறிக் கொண்டிருந்தது அதனால் குடை எடுத்துக் கொண்டு, போனை எடுத்துக் கொள்ளாமல் புறப்பட்டாள்.

“நான் போயிட்டு வந்துடறேன். நீங்க தூங்குறதா இருந்தா கதவை தாப்பா போட்டுங்கோ” என்றாள்.

” இல்ல பிருந்தா நான் தூங்க மாட்டேன் பாத்துக்குறேன். நீ போனை எடுத்துண்டு போ” என்றேன்.

” கிட்ட தானே போறேன் போன் எதுக்கு? வந்துடறேன்” என்றபடி புறப்பட்டாள்.

மணி 3.35 . முருகன் நகர் மெயின் ரோடு பக்கம்தான். எங்கள் தெருவின் பாதியில் வரும் ஜங்ஷனில் இடதுபுறம் திரும்பி கொஞ்சம் நேராக போய் இடதுபக்கம் திரும்பி கொஞ்சம் தூரம் நேராக போனால், முருகன் நகர் மெயின் ரோடு. வீட்டிலிருந்து எட்டு நிமிடத்தில் வந்துவிடலாம்.
அவள் வரவில்லை.

எதிர்வீட்டு எல்சி பாட்டி அவர் வீட்டு வாசலுக்கு வந்து அவர் பேத்தி செபியை எதிர்பார்த்துக் கொண்டருந்தவர், “இந்நேரம் வந்திருக்கணுமே, யாரு போயிருக்கா ? .

“இன்னிக்கு லட்சுமிக்கு வர லேட்டாகுமாம். அதனால் பிருந்தா போயிருக்கிறாள்” என்றேன்.
மணி 3.45 . எனக்கு டென்ஷன் ஆகிவிட்டது. என்ன செய்யலாம்? யோசித்தேன்.
பிறகு நாமே போய்விடலாம் என்று முடிவு பண்ணி உள்ளே வந்து, என் போனை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு முருகன் நகர் புறப்படும் போது கார்த்திக் phone பண்ணினான்.

“அப்பா, அம்மா போலையா? வேன் டிரைவர் Phone பண்ணினார்.”

“இல்லையே, அம்மா 3 மணிக்கே கிளம்பி போயிட்டாளே”

“இடம் தெரியுமோன்னோ?”

“தெரியாம என்னடா பை பாஸுக்கு போகும்போதேல்லாம் அப்படித்தானே போவோம்”

“சரி அம்மா வந்தவுடனே Phone பண்ணு”

எனக்கு இன்னும் கலவரமாகிவிட்டது.
பிருந்தாவுக்குத் தெரியும். ஒருவேளை வேன் லேட்டாக வரதோ?
ஒன்றும் புரியாமல் Road junctionலில் வந்து நின்றேன்.

முருகன் நகருக்கே போகலாம் என்றால் அதிலும் ஒரு கஷ்டம்.அங்கிருந்து இரண்டு வழி உண்டு. ஒன்று கார்த்திக் ‌வழக்கமாக போகும் வழி ஜங்ஷனில் இருந்து இடது பக்கம் திரும்பி நேராக போய் விக்ரம் வீட்டுக்கு பக்கத்தில் இடது பக்கம் திரும்பி நடந்தால் முருகன் நகர் மெயின் ரோடு.

இன்னொரு வழி ஜங்ஷனில் திரும்பாமல் நேரே நடந்து இடதுபக்கம் திரும்பி மறுபடியும் வலது திரும்பி மறுபடியும் இடது பக்கம் திரும்பினால் மெயின் ரோடு.

இதில் பிருந்தா எந்த வழியில் வருவாள் என்று சொல்ல முடியாது அவள் கொஞ்சம் வித்தியாசமாக
யோசிப்பவள். ஒரு தடவை பத்தாம் வகுப்பில், அரை பரிட்சையில் தமிழ் பேப்பரில் நூல் பற்றி ஒரு கட்டுரை எழுதுக என்ற கேள்விக்கு அவள் நூல் பஞ்சில் இருந்து எடுக்கப்படுகிறது என்று ஆரம்பித்து மிகப் பெரிய கட்டுரை எழுதி விட்டாள். ஆனால் கேட்டது திருக்குறள் சிலப்பதிகாரம் போல் நூலை குறிப்பிட்டு மார்க் போடவில்லை என்றாலும் வாத்தியார் அவள் யோஜனையை பாராட்டினர்.

அதுபோல இப்பொழுதும் நான் இடது பக்கம் திரும்பும் போது அவள் நேராக வரும் ரோடில் வந்துவிடலாம் சந்திக்க முடியாமல் போகும் எனவே கொஞ்ச நேரம் யோஜனை பண்ணினேன்..

பிறகு ஒரு முடிவுக்கு வந்து நேராக போகலாம் என்று நினைத்தபோது எதிர்வீட்டு செபியின் தாத்தா ஆட்டோவில் வீட்டிற்கு போய் கொண்டு இருந்தார் சரி என்று அந்த வழியிலேயே போய் முருகன் நகர் போனேன் அங்கு பிருந்தாவையும் விஷ்வாவையும் காணவில்லை .

லட்சுமி போன் பண்ணினாள் “என்ன அங்கிள் விஷ்வா வந்துட்டானா?” என்றாள்

“இல்லம்மா பார்க்கிறேன் என்றேன்.

கார்த்திக் போன் பண்ணி “என்னப்பா வந்துட்டாங்களா? டிரைவர் போன் பண்ணி அப்பவே இறக்கிட்டு போனதா சொன்னானே” என்றான்.

இருவரும் எங்கே போய் இருப்பார்கள் ஒருவேளை மத்தியான நேரம் கூட்டம் இல்லாத இடத்தில் யாராவது கடத்தல் காரர்கள் வந்து இவர்களை காரில் கடத்திக் கொண்டு போய் விட்டார்களோ டிவி சினிமா பார்த்து பார்த்து அந்த பயம் வந்துவிட்டது.

அப்படி ஒரு வேளை கடத்தி இருந்தால் பிருந்தா என் நம்பரை கொடுத்து இருப்பாள் இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு போன் வரும். கரகரப்பான குரலில் ஒருவன் பேசி உங்க மனைவியும் பேரன் என்னோட இருக்காங்க.

நீங்க உடனே 8 லட்ச ரூபாய் கொண்டு வந்து நான் கொஞ்ச நேரத்துல மறுபடியும் போன் பண்ணி சொல்ற இடத்தில வச்சுட்டு போன அவங்கள நான் விட்டுடுவேன் சாமர்த்தியமா போலீசுக்கு போக நினைச்சா அவங்க உயிருக்கு நான் பொறுப்பு இல்ல என்று சொல்லப் போகிறான். எனக்கு வேர்த்து கொட்டியது.

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஒரு 4 நாலு லட்சம் இருக்கும்.
அதுவும் அக்கவுண்டிலும் FIXED DEPOSITS ஆகவும் இருக்கிறது. அதுவும் உடனே எடுக்க முடியாது ஏனென்றால் F D RECEIPT சென்னையிலிருந்தது.

கார்த்திக் இடமும் அவ்வளவு பணம் இருக்காது கார் வாங்கியதில் அவன் சேமிப்பு எல்லாம் தீர்ந்துவிட்டது. அவர்கள் கேட்ட தொகையை எப்படி சேர்த்து அவர்களை மீட்க வேண்டும் என்று மனம் யோஜனை பண்ணியது

கொஞ்ச நேரத்தில் ஒரு நம்பரில் இருந்து போன் வந்தது. நான் பயந்து கொண்டே எடுத்தேன்.

” சார் நாங்க மதர் தெரசா ஆசிரமத்திலிருந்து பேசுறோம் ஏழை குழந்தைகளுக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க”

“தயவு செய்து அப்புறமா போன் பண்ணுங்க” என்று வைத்துவிட்டு கால்கள் நடுங்க நிதானித்து வீட்டுக்கு போகலாம் ஒரு வேளை வேறு வழியில் வந்திருந்தால். கடவுளே வந்திருக்க வேண்டும்.உனக்கு திருப்பதி வந்து உண்டியலில் 1001/- போடுகிறேன்.

வீட்டுக்கு வந்தபோது ஆச்சர்யம் பிருந்தா வும் விஸ்வாவும் பூட்டிய கதவுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். கடவுள் கை விடவில்லை.

“எங்க போனேள்? நான் வரதுக்குள்ள அப்படி என்ன வேலை?” என்று படபடத்தாள்.

நான் “நீ ஏன் லேட்?”

“முதல்ல கதவை திறங்கோ! நம்ம சண்டைய உள்ள போய் போட்டுக்கலாம்”

“ஆமாம் தாத்தா எனக்கு Urgent one bathroom போகணும்” என்றான் பேரன்.‌

கதவைத் திறந்து உள்ளே போனதும் பேனை போட்டு திவானையில் உட்கார்ந்து ஆசுவாசம் பண்ணி க்கொண்டேன்.

விஷ்வா அவசரமாக டாய்லெட்டுக்கு ஓடினான்.

பிருந்தா மாஸ்கை கழட்டி விட்டு “என்ன ஆச்சு?” என்றாள்

” இவ்வளவு லேட் ஆச்சு நான் பயந்துட்டேன் கார்த்திக் வேற போன் பண்றான், லட்சுமி வேற போன் பண்றா, நீ போன வேற எடுத்துண்டு போகல ரொம்ப நேரம் ஆனதுனால உங்களை யாரும் கடத்திட்டாளோன்னு. பயந்துட்டேன் நல்ல வேலை அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கல .”


“ஆமா இந்த பட்ட பகல்ல என்னை கடத்தறா இதுக்கு தான் டிவி, கண்ட சினிமா எல்லாம் பார்க்காதீங்கோ”

எனக்கு ஏதோ பயம், சரி Safeஆ வந்துட்டேள்.
ஆமா எப்படி வந்தேள்?”

“விஷ்வா வேன் கொஞ்சம் லேட்டாகவே வந்தது. நாங்க நடந்து வரலாம்னு நினைச்சப்ப, ஆட்டோ தாத்தா வந்தார். “வாங்க” என்றார் அதுல அப்பவே வந்துட்டோம். உங்களைக் காணும் phone பண்ணலாம்னா phone உள்ள வீடு பூட்டியிருக்கு.”

“சரி விடு”என்று சொல்லிவிட்டு கார்த்திக்கிற்கு போன் பண்ணி,’ ஏய் வந்துட்டாடா கார்த்திக்” என்றேன். லட்சுமியும் வந்து விட்டாள்

சாயங்காலம் கார்த்திக் வந்தவுடன் பிருந்தா என் அதீத கற்பனையை அவனிடம் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள் என்னைத் தவிர.

(மனைவி பிருந்தா நேற்று பேரன் சமர்த்தை அழைத்து வந்ததை நினைத்து நான் எழுதிய கற்பனைக் கதை. Photo இல்லாத Posting படிப்பதில் ஸ்வாரஸ்யம் இருக்காது என்பதாலும், கற்பனை பிருந்தா விஷ்வா வரைய ஆர்ட்டிஸ்ட் இல்லாததாலும் இந்த photo இணைக்கிறேன்.)