காதலைப் பற்றி…/அழகியசிங்கர்

காதல் கடிதமெழுதி
17 வயதுப் பெண்ணிடம் கொடுத்தேன்
எனக்கு வயது எழுபதுதான் ஆகிறது
படித்துப் பார்த்து முகம்
சுழித்தாள் பின் காறியுமிழ்ந்தாள்

நடுத்தர வயது
பெண்மணி தட்டுப் பட்டாள்
அவளைப் பார்த்து
மயங்கி காதலைத் தெரியப்படுத்தி
இன்னொரு கடிதத்தை நீட்டினேன்.
70 வயதுதான் ஆகிறது
என்றேன்
எனக்கு 50 வயது
என்று காதலை
மறுத்து விட்டாள்
கூடவே கிண்டலும் செய்தாள்

மூன்றாவதாக
முதியவள்
ஒருவளைப் பார்த்தேன்
நீட்டினேன்
நீண்ட காதல் கடிதத்தைப்
பார்த்தவுடன்
மேலும் சொன்னேன்
வயது 70
கூடவே சர்க்கரை நோய்
இரத்த அழுத்த நோய் என்றேன்
அவளும் சொன்னாள்
எனக்கும் எல்லாம் உண்டு
கூடவே குளோஸ்டிரால் என்றாள்
கணவன் கொரானாவால்
இறந்து போனான்
தயாரா என்று கேட்டாள்

அவள் சொன்னதைக் கேட்டு
ஓட்டமாய் ஓடி விட்டேன்