
எனது கப்பல் புறப்படப் போகின்றது
விடைபெறுவதற்கு முன்பாவது
அவளிடம் தெரியப்படுத்திவிட வேண்டும்
என் காதலை
நான் சக்கரவர்த்தியல்ல
கோட்டையை முற்றுகை
இடுவதற்கு
பேரரசனும் அல்ல
சுயம்வரத்தில் பங்கு கொள்வதற்கு
பல்லக்கை சுமந்து போகிறவனுக்கு
பட்டத்து இளவரசியின் மீது
காதல் பிறக்கலாமா
வித்தை காட்டி பெறுவதற்கு
அவள் பதுமை அல்ல பெண்
வாத்தியம் செய்தவனுக்கா சொந்தம்
அறுதலிப் புறாக்கள்
கோயில் கோபுரங்களைத் தவிர
வேறெங்கே தஞ்சமடையும்
சுவாமியை தரிசிக்க
துவாரபாலகர்கள் அனுமதிகொடுக்க
வேண்டுமல்லவா
சீதையின் பொன்எழிலா
ராமனை கவர்ந்திருக்கும்
நான் ஊமையாகிவிடலாம்
ஆனால் இதயத்தின் ஓர்மூலையில்
அவளின் நினைவு
வண்டாக குடைந்து
கொண்டுதானே இருக்கும்
மதுவால் மரத்துப்போக வைக்கலாம்
ஒரேயடியாக மறக்கடிக்க முடியுமா
நானும் அவளும்
கற்பிதம் செய்து கொள்ளும்
உலகம் வெவ்வேறானவை
எனது வேதனை மிகுந்த
பூபாளத்தை காலைப்பொழுது
காது கொடுத்து கேட்குமா என்ன
என்னாலும் பறக்க முடியும்
சிறகுகள் இல்லாமல்
அதிசயமான உலகில்
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்
அப்படியென்றால்
நான் ஏன் கடவுளாக
இருக்கக்கூடாது?
