
அன்று
ஏனடீ
அவன் பக்கமே பேசுகிறாயே
நீ என் தோழிதானா?
போர் வெற்றிகரமாக
முடிந்து
அவன் ஊர் திரும்பி
மூன்றாவது நாள்
இன்று
ஊருக்கு வந்த அன்று
சேனாதிபதியுடன்
போரின் இழப்பு பற்றி பேசிக் கொண்டு இருப்பான்
என்றாய்
சரி தான்
என்றிருந்தேன்
நேற்று வயதான ஆயாவை
சந்தித்து ஆசி வாங்கப் போயிருப்பான் என்றாய்
நியாயம் தானே என்று தோன்றியது
இன்று மாலைப் பொழுது
ஆகிவிட்டது
ஏதாவது தவிர்க்க முடியாத பணி வந்திருக்கும் என்கிறாய்
இனி அவன் வந்தால்
நீயே பேசி அனுப்பி விடு
நான் கதவை பூட்டிக் கொள்கிறேன்
இன்று
நீ அவளை பார்த்தது
தவறில்லை
அவளுடன்
சிரித்து பேசியதும்
தவறில்லை
உன் வாகனத்தில் அவளை
கொண்ட விடுவதாக
நீ சொன்னதும்
அவள் அதை மறுத்தவுடன்
வாகனத்தைத் தள்ளிக் கொண்டே
அவள் வீடு வரை நீ சென்றதும்
ஒரு விஷயமே இல்லை எனக்கு
அதை நீ என்னிடம் சொல்லவில்லை
என்று
அவளுக்கு புரிந்து விட்டதே
அதற்கு மட்டும்
கிடையவே கிடையாது
மன்னிப்பு உனக்கு
நாளை
பதவி உயர்வு பெற்று
சந்திரனுக்கு வந்து
இன்றோடு மூன்று மாதம்
ஆகி விட்டது அன்பே
உன்னையும் நம் அருமை குட்டியையும்
மிகவும் ‘மிஸ்’ செய்கிறேன் நான்
என் கையை தலைகாணியாக்கும் நீ
எப்படி தூங்குகிறாய்?
உனது அருகாமையில்லாமல்
எனக்கு வர மறுக்கிறது
தூக்கம்
நேற்று நீ உன் கையை சுட்டுக் கொண்டாயாமே
குட்டி சொல்லி விட்டது
அதற்குப் பிறகு புலனத்தில் தகறாறு
பேச முடியவில்லை
மனம் தவிக்கிறது
உடனே களிம்பு தடவினாயா?
எதற்கும் மருத்துவரிடம் காட்டி விடு
நீ சிறந்த இல்லத்தரசன் தான்
அதற்காக கைப்புண்ணோடு
சமையல் செய்ய வேண்டியதில்லை
புண்ணாறும் வரை
சாப்பாட்டை வரவழைத்துக் கொள்
இல்லத்தரசிகளாக இருக்க முடிவு செய்தவர்கள் கூட
அப்படித்தான் செய்கிறார்கள்
உடனே மின்னஞ்சலில்
பதிலளி
