கம்பன் கவியமுதம் 50/வளவ.துரையன்



                                 

சொல்லவே முடியாது
அயின்முகக் குலிசத்து அமர்கோன் நகரும்அளகையும் என்று இவை அயனா
பயிலுறவு உற்றபடி பெரும்பான்மை பகர்திருநகர் இது படைப்பான் மயன்முதல் தெய்வத் தச்சரும் தம்தம்
மனத்தொழில் நாணினர் மரந்தார்
புயல்தொடு குடுமி நெடுநிலை மாடத்து இந்நகர் புகலுமாறு என்னோ?               97                   

[அயின்முகக் குலிசம்=கூர்மையான முகம் கொண்ட வச்சிராயுதம்; அளகை’அளகாபுரி; புயல் தொடு குடுமி=மேகம் தொடும் அளவுக்குயர்ந்த மாடம்]

”தேவேந்திரன் கூர்மையான வச்சிராயுதம் உடையவன்; பிரமன் அவனுடைய தலைநகரமான அமராவதியைப் படைத்துப் பார்த்தான்; குபேரனின் நகரமான அளகாபுரியைப் படைத்துப் பார்த்தான். கம்பன் இந்த இரண்டு நகரங்களையும் பிரமன் படைத்ததற்கு ஒரு காரணம் சொல்கிறான். அதாவது அயோத்தி என்னும் சிறப்பான ஒரு நகரத்தைப் படைப்பதற்குப் பயிற்சி எடுப்பது போல அவற்றை முதலில் படைத்துப் பயிற்சி பெற்றானாம். மயன் என்பவன் தேவலோகத்தின் சிறந்த சிற்பியாவான். அவனும் அங்குள்ள மற்ற சிற்பிகளும் அயோத்தி போன்ற சிறப்பான ஒரு நகரத்தைத் தங்களால் படைக்க முடியவில்லையே என்று மனம் வருந்தி நகரங்களைப் படைக்கும் தொழிலையே மறந்து விட்டார்களாம். அப்படியெல்லாம் இருக்கையில் மேகத்தைத் தொடுகின்ற அளவுக்கு உயர்ந்த மாடங்களை உடைய மாளிகைகள் பல நிறைந்த அந்த அயோத்தியை என் போன்றோரால் சொல்ல இயலுமோ? முடியாது என்கிறான் கம்பன்.

அதாவது விண்ணுலகில் உள்ள அமராவதி மற்றும் அளகாபுரி போன்ற நகரங்களை விடச் சிறப்பானது அயோத்தி என்று சொல்ல வருகின்ற கம்பன் அந்த நகரங்களை உவமையாகக் காட்டுகிறான். எப்பொழுதுமே ஒரு பொருளோடு ஒப்புமை சொல்லும்போது 

அதை விட உயர்ந்ததைத்தான் சொல்லவேண்டும் எனும் இலக்கணத்தைக் கடைப்பிடிக்கிறான் கம்பன். தவிர சிறந்த நகரங்களைப் படைத்துப் பயிற்சி பெற்றால்தானே அவற்றை விடச் சிறந்ததை உண்டாக்க முடியும்?