இருப்பு/தங்கேஸ்

விழிப்பதாய் தோற்றம் தந்தாலும்

மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கும் விண்மீன்களிடம் இறைஞ்சுகிறேன்

தூரத்தில் அரற்றும் என்குரல் அதன் கனவில் ஒலிக்கும்

ஒரு பாத்திரத்தின் குரலாய் இருக்கும் என நினைத்திருக்கும் அதுவும்

இருள் சுழலில் என் காலடிக்கு கீழ் நழுவிக்கொண்டிருக்கும்

என் இருப்பு கரும் குருதியென 

நின்ற இடத்திலேயே 

நீயே உன்னை தொலைத்து விடுவதே

திசை தொலைந்து போவதென்று அர்த்தம் என்று

சொல்லிய வண்ணம்

தலைக்கு மேல் உரசிக் கொண்டு பறந்து சென்றது

அகாலத்தில் ஒரு கீச்சுக்குருவி