
ஒரு காலத்தில், தமிழகத்தில் பிரபலமாக இருந்த பல வதந்திகளில் இரண்டு சட்டென்று நினைவிற்கு வருகிறது.
ஒன்று, பிள்ளையார் பால் குடித்த சம்பவம்
இரண்டு, எம்ஜிஆர் சமாதியில் காது வைத்துக் கேட்டால் கடிகாரம் ஒலிக்கும் ஓசை.
சாவகாசமாக யோசித்துப் பார்த்தால் இது போன்ற நிறைய புகழ்பெற்ற வதந்திகள் நம் நினைவிற்கு வரலாம். இவற்றைத் தொகுத்து வைத்தால் நல்ல ஆவணமாகவும் ஆகக்கூடும்.
என் பங்கிற்கு நான் ஒன்றைச் சோ்க்கிறேன்.
oOo
எண்பதுகளின் தொலைக்காட்சிகளில் ‘லிரில்’ சோப் விளம்பரம் ஒன்று வரும். திரையரங்குகளில் கூட காணலாம்.
‘லா… லலலல… லா… லாலாலா..’ என்று பொங்கி வரும் அருவியின் உற்சாகத்திற்கு நிகராக ஒரு மங்கை நீராடும் காட்சி. அந்த விளம்பரத்தைப் பார்க்கும் போதே அப்படியொரு புத்துணர்ச்சி மனதில் பரவும். இசை, காட்சி, வாசகம் என்று பல்வேறு விதங்களிலும் செய்யப்பட்ட சிறந்த விளம்பரம் அது.
oOo
நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்த சமயத்தில் இது தொடர்பாக ஒரு வதந்தி இருந்தது.
“ஷீட்டிங் பண்றப்ப அந்தப் பொண்ணு தண்ணில விழுந்து செத்துடுச்சாம்டா. அதை மூடி மறைச்சு விளம்பரத்தை முடிச்சுட்டாங்க” என்பதை எங்களின் மாணவ சமூகத்தார் உற்சாகமாக புறணி பேசிக் கொண்டிருப்பார்கள்.
யார் இதை கிளப்பியது என்று தொியவில்லை. இது போன்ற விஷயங்கள் எல்லாம் ஒளிக்கும் மேலான வேகத்தில் மாநிலம் முழுக்க பரவி விடும். அது ‘புனைவு’ என்று எனக்கு தொிவதற்குள் பல வருடங்கள் கடந்து விட்டன.
oOo
இளமையில் அந்த விளம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் “பாவம்.. இந்தப் புள்ள செத்துடுச்சாம்ல’ என்ற அனுதாபமும் கூடவே வரும்.
இந்தக் குற்றவுணர்வு காரணமாகவே, அந்த ‘அருவி அழகி’யை முழுக்கவும் ரசிக்க விடாமல் செய்து விட்டார்கள், படுபாவிகள்.
