தமிழில் : க. மோகனரங்கன்

நான்
வில்டென் நிழற்சாலை வழியே
காரில் வருகையில்
அந்த இளம் பெண்
பதினைந்து வயதிற்கும் மேலிருக்கும்
இறுக்கமான நீல ஜீன்ஸில்
பின்புறம் இருகைகளால் பிடித்தாற் போலிருக்க
என் காரின் முன்
நடந்து வந்தாள்
அவள் வீதியைக் கடந்து செல்வதற்காக
காரை நிறுத்தியவன்,
அசைந்து செல்லும் அவளுடைய பின்வடிவை வெறித்தவாறிருக்க,
காரின் முகப்புக் கண்ணாடி வழியாகத்
தனது ஊதாநிற விழிகளால்
என்னை நேராக
உற்று நோக்கியவள்
பிறகு ,
தன் வாயில்
மென்று கொண்டிருந்த
சூயிங்கத்தினின்றும்
அதுவரையிலும் நான் கண்டதிலேயே
மிகப்பெரிதான இளஞ்சிவப்பு கோளத்தினை ஊதினாள்.
அப்போது நான்
கார் ரேடியோவில் ஒலித்த
பீத்தோவனைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
சிறிய மளிகைக் கடையொன்றினுள் நுழைந்தவள்
மறைந்து போக,
நான்
லுட்விக்கின் இசையை கேட்குமாறு தனித்துவிடப்பட்டேன்.
