
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. இரவு சரியாக மணி 12.12. தூக்கம் பிடிக்காமல் பாயில் புரண்டு கொண்டே இருந்தான். பாய்க்கு மேல் விரிக்கப்பட்டிருந்த ஒரு மெல்லிய ஜமக்காளம் நசுங்கிச் சுருங்கி ஒரமாக போய் ‘அக்டா’ என்று கிடந்தது. மல்லாக்கப்படுத்து கால்களை விரித்து கைகளையும் மேல் நோக்கி இழுத்துக் கொண்டு கிடந்தான். ஒரு அலாதியான சுகம் இருந்தது. இந்திய அரசியலைப்பு சட்டத்தையெல்லாம் நினைத்துக் கொண்டான். மனித சுதந்திரம் என்று பேசுப்படுவது இதுதானோ என்று அவனுக்கு தோன்றியது. ஜன்னல் வழியாக வீசிக் கொண்டிருந்த காற்றை மின்விசிறியின் மெல்லிய இதழ்கள் வாங்கி வாங்கி அவன் மேல் பூச் சொரிவதுபோல் அவன் மேல் குவித்துக் கொண்டிருந்தது. ஆடைகள் விலகிக் கிடந்தன. அதுவும் ஒரு சுகமாகதான் பட்டது. சிறிது நேரம் கழித்து குப்புறப் படுத்துக் கிடந்தான். தலையை சரித்து கையை மடக்கி தலைக்கு வைத்துக் கொண்டான். ஒரு காலை நீட்டிக் கொண்டு மறுகாலை எந்த அளவிற்கு முடியுமோ அப்படி மடக்கி வயிற்றோடும் இடுப்போடும் சேர்த்து வைத்துக் கொண்டான். கணப்பொழுதுகளாய் காலம் கடந்து கொண்டிருந்தது. கடிகாரத்தின் நீள முள்ளின் ஒளி கொஞ்சம் பேரிரைச்சலாக தான் கேட்டுக் கொண்டிருந்தது. மடக்கி வைத்திருந்த கைகளுக்கு இடையூறாக இருந்த தலையணையை தட்டித் தள்ளினான். இப்பொழுது அவனுக்கு ஒரு நிரந்தர ஆசுவாசும் கிடைத்தது போல் இருந்தது. கைகளுக்கு மேல் தலையை செல்லமாக அசைத்து சரிசெய்து கொண்டதில், ஏதோ கையில் இருக்கும் குஞ்சுப் பறவையை தலையில் தடவிட்டது போல் ஒரு இதம் தெரிந்தது. மீண்டும் அந்த கடிகாரத்தின் ஒலி மெதுவாக புன்னகைத்தன இன்னும் உதடுகளை விரிவாக வைத்துக் கொண்டு புன்னகையை அகலப்படுத்திக் கொண்டான்.
இப்பொழுது, தான் வாங்கி வைத்திருந்த ஒரு வெள்ளி உண்டியலில் பத்து ரூபாய் அளவில் இருந்த ஒரு தங்க காசை ஒரு குழந்தையின் ஆவலுடன் போட்டால் எப்படி ‘டொக்’ என்று விழுந்து ஒலி எழுப்புமோ அவ்வாறு அவன் மூளைக்குள் அந்த கதையின் கரு தட்டியது. ஏற்கனவே மெல்லிய காற்று படலங்களுக்குள் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அவனுக்கு மீண்டும் மீண்டும் பஞ்சுகளை பரப்பி அதன் மேல் படுத்துக் கிடப்பது போல் ஒரு சுகானுபவம். அந்த கதையின் கருவை ‘ஒரு மாதக் குழந்தையின்’ ‘இருமாத குழந்தையின்’ என்பது போல் பரிமாணப்படுத்திக் கொண்டே சென்றான். “எங்கே தூக்கம் பிடிக்கப் போகிறது இப்படி ஒரு “கதையின்” கருவை கொண்டு சுமப்பவனுக்கு” கண்டுபிடித்தவனுக்கு என்று அவனுக்குள்ளே அவன் பேசிக்கொண்டான். அதற்குள்ளே அவன் சிலாகித்து கிடந்தான். ஏதோ ஒரு குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அது கலகலவென்று சிரித்து கொஞ்சி குலாவுவது போல் அவனுக்கு தோன்றியது. இதைவிட ஒரு பெரிய இன்பத்தை அவன் இதுவரை அவன் வாழ்க்கையில் அனுபவித்தவனாக இல்லை. இந்த இதமும் சுகமும் காலை 4.30 மணிவரை ஒடிக் கொண்டிருந்தது.
அப்பொழுது அவன் மனைவி இரவு ஒதுங்குவதற்காக பாத்ரூமுக்கு சென்றிருந்தாள். அவள் படுக்கை அறை கதவை திறந்தவுடன் அவள் படுக்கை அறைக்குள் இருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளிவந்து அந்த அறைக்குள்ளே கட்டுப்பட்டுக் கிடந்த காற்று ‘அப்படா’ என்று இவன் படுத்திருந்த அறைக்குள் தாவியது. முறுக்கலாகவும் சூடாகவும் சாம்பார் சட்னியுடன் தட்டில் பரிமாறப்பட்ட மசால் தோசைக்கு ஊடே ஒரு மசால் வடை சேர்ந்தது போல் அந்த ருசியின் ரசத்தை அவன் ருசித்தான் என்றாலும் அந்த குளிர்காற்றின் இதத்தில் கண்கள் சிக்க ஆரம்பித்தன. மனைவி ஒதுங்கிடத்தை விட்டு திரும்பி வரும்போது, அவள் அதட்டலுக்கு பயந்து தூங்கியது போலவே நடித்துக் கொண்டிருந்தான். வேடிக்கை என்னவென்றால் உள்ளபடியே தூங்கிவிட்டான்.“ உடனே கதை கருவின் குறிப்புகளை மடமடவென்று எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவனுடைய எத்தனிப்புகளை தூக்கம் காவு வாங்கிவிட்டது. ஆனால் “எப்படியும் காலை எழுந்தவுடன் இந்த கதையின் குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து எடுத்துக் கொண்ட உறுதியின் பின்குறிப்போடு தான் தூக்கிப் போயிருந்தான்.
நல்லது காலை 6.30 மணி, “பால் எடுத்து வைக்கலயா“ என்ற மனைவியின் அன்பான குரல். பழகிப்போய்விட்டதால் அந்த குரலில் கூட அவனுக்கு ஒரு சுகம் இருந்தது. “இந்தா வைக்கிறேன்ம்மா” என்று பதில் சொல்லிவிட்டு பால் பையை நோக்கி வெளியில் ஒடினான். வெளிகதவின் பூட்டு திறப்பதற்கு கொஞ்சம் சிக்கலை கொடுத்தது. எப்படியோ பாலை எடுத்துக் கொண்டு அடுக்களையின் “நீர் வட்டா”வில் போட்டுக் கொண்டு மற்ற காலை வேலைகளை மளமளவென்று பார்க்க ஆரம்பித்தான். 9மணி இருக்கும் “ஐயோ கதை,” என்று வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு ‘எஸ்’ நாற்காலியில் அமர்ந்தான். மூளையின் பல பகுதிகளில் இருந்து இழுத்து இழுத்துப் பார்த்தான் கதை வந்த பாடில்லை. முகம் சோர்வுப் பூச்சிகளை பூசிக் கொள்ள ஆரம்பித்தது. “ஐயோ எத்தனையோ கதைகள் எழுதியிருக்கறேன், ஒரு செல்ல சீமாட்டிபோல் கிடைத்த கதை நழுவிவிட்டதே. இனிஉண்டியலுக்குள் அதே காசும் அதே சத்தமும், எப்படி கேட்கப்போகிறது? எப்போது கேட்கபோகிறது?“ திருவிளையாடல் படத்தில் சிவபெருமானைத் தேடிய தருமிபோல் அங்கலாய்தான். “வரும், வரும் எப்படியும் வரும்“, கண்டிப்பாக வரும் என்று உறுதிப்படுத்திக் கொண்டான். நம்பிக்கை இருந்தது. ஏறத்தாழ இருந்த இருப்பிலே அரைமணிநேரத்திற்கு மேல் யோசித்து பார்த்திருப்பான், ம்..ஹும்… வெற்றியடைந்த பாடில்லை, “ச்சே எத்தனை கதைகளைக் கடந்திருக்கிறேன், இப்படி ‘மொழு’க்கென்று கிடைத்த கரு நழுவிவிட்டதே. இந்த தப்பிய கதையை நான் எப்படி பிடிக்கப்போகிறேன்” என்று அழாத குறையாக இருக்கையில் பின் சாய்ந்தவனாய் கிடந்தான். “ஏதோ குலோப்ஜாமூனை உருட்டி கொதிக்க வைத்து ‘ப்ளக்’ என்று சக்கரைப்பாகில் உருட்டிவிட்டது போல் அல்லவா கிடைத்தது. எப்படி நழுவ விட்டேன்” என்றவனுக்கு கண்ணீரதுளிகள் சிதறின.
“ச்..சே.. எல்லா கதை எழுத்துக்களையும் நிறுத்து வைத்து விட்டு அதை உடனடியாக எழுதி முடிக்கவேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன் எப்படி தப்பியது” என்ற மனஇறுக்கத்தோடு அடுத்த கதையை எழுதலாம் என்று பல குறிப்புகளை தேடினான். ஏதாவது ஒன்றோடு தப்பியகதை தட்டுப்படுமா என்றெல்லாம் ஏகப்பட்ட பிரத்தியேகங்களை நடத்திப்பார்த்தான். ஒரே பாடலை வேறு வேறு ராகத்திலும் ஒரு பாடகி பாடிபார்ப்பது போல் தானும் எத்தனித்துப் பார்த்தான். இல்லை இல்லை முடியவில்லை, எனவே தனது வரிசை குறிப்புகளில் உள்ள முதல் கதையை எடுத்து எழுத ஆரம்பித்தான். சந்தோஷம்தான் எழுதுவது சந்தோஷம்தான், அவனது ஆஸ்தான தட்டச்சுக்காரர் சுதாவுக்கு கதைகளை டிக்டேட் செய்வது மகிழ்ச்சிதான். என்றாலும் சட்டைக்கு துணியை எடுத்து முடித்தபின் பிரியப்பட்டும் எடுத்துக்கொள்ளாமல் விட்டு வந்த துணியை எண்ணி “ச்..சே அந்த துணி எவ்வளவு அழகாக இருந்தது அதை எடுத்திருக்கலாமே“ என்று ஒரு முச்சுக்காற்று நிம்மதிக்கு அடங்க மறுத்து நகர்ந்து கொண்டே இருப்பது போல ஒவ்வொரு கதைகளை எழுதும் போதும், தப்பிய கதையின் கொஞ்சலுக்காக ஏங்கி தவம் கிடந்தான். சில நேரங்களில் “அடபோப்பா” என்று கதைகளை எழுதி முடித்தவுடன் சொல்லுவதும் இப்பொழுது அவனுக்கு வாடிக்கையாக இருக்கிறது. சில நேரங்களில் ‘ஓகே’ என்று சொல்லிக் கொண்டு மேஜையின் மேல் வலதுகையை தட்டிக் கொண்டு எழுந்து போவதும் வழக்கமாகி போனது. உண்டியலில் இன்னுமொரு முறை அந்த காசு விழாதா என்று ஏங்கிகிடந்தான். ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல வருடங்கள் பெருக்கல் குறிகளை ஏந்திய வண்ணமே இருந்தன.
அந்த பிரியாணி கதையின் கதாநாயகி சத்யா உண்டியலில் பணம் சேர்க்க பழகிப்போயிருந்தாள். ஐந்தோ பத்தோ நாள்தோறும் உண்டியலில் சேர்க்கவில்லை யெனில் அவளது மனது நிம்மதிபடாது. ஏதோ, வீட்டிலிருந்து கிளம்பும் ஒரு பெண், கேஸ் ஸ்டவ்வை சரியாக முடிவிட்டு வந்தோமா என்ற பதட்டநிலை எவ்வாறு இருக்குமோ அவ்வாறு தான் இவளுக்கும். ஒரு நாள் உண்டியலில் சேர்க்கவில்லை யென்றால் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும். இவ்வாறு இரண்டாவது வருடம் முழுவதும் சேர்த்த பணத்தை வங்கியில் கொண்டு போடவேண்டும் என்று புறப்பட்டாள். காரசாரமான கோஷத்துடன் எதிரேவந்த ஊர்வலம் வண்டியை நிறுத்தியது. எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு, 50 சதவீதம் இடஒதுக்கீடு பெண்களுக்கு சமஉரிமை பெண்களின் அடிப்படை உரிமை என்று தோழியர் ராஜேஸ்வரியின் குரல் வானை பிளந்து கொண்டு ஒரு ஊர்வலம் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. சிக்னல் பக்கம் தான் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டது. அந்த சிக்னலை கடந்துவுடன் தனது ‘வங்கி’ இருந்தது. எனவே இங்கே இறங்கிவிடலாம் என்று முடிவு செய்தாள். சத்யா பேருந்தை விட்டு இறங்கினாள். ராஜேஸ்வரியின் கோஷத்தின் சாரத்தில் தன்னை மூழ்கடிக்க ஆரம்பித்தாள். அந்த கோஷத்தின் ஒசை தன் உடல் முழுவதும் மெதுவாக படர்ந்து செல்லுவது போல் தோன்றியது. தனது வலது பாக்கெட்டுக்குள் கை அமிழ்ந்து சென்றது. ஒரு வருட சேமிப்பின் மேல் தனது வலது கைபற்றியது. பணத்தை அந்த ஊர்வல உண்டியலில் சேர்த்தாள். மெதுவாக நகர்ந்து பதாகையின் கம்பத்தை பிடித்துக் கொண்டவள் ராஜேஸ்வரியின் அணைப்பிற்குள்ளானாள். சத்யாவின் கோஷங்களும் விண்ணை தொட ஆரம்பித்தன.
அரவிந்தும் தற்செயலாக இந்த காட்சியை கூர்மையாக தன் கவனத்திற்கு உட்படுத்தினான். அவனால் பொறுக்க முடியவில்லை. ஏதோ ஒரு பொறி தட்டிதட்டி அவனை முன் இழுத்தது. அந்த தப்பிய காதலியின் கதகதப்பில் இருந்தான். அந்த மூலகதையின் நூலை தொட்டு இழுப்பதற்கு ஏதோ ஒரு சமிக்ஞை கிடைத்தது போல் தோன்றியது. சீனியருக்கு போன் செய்தான். சிறிது நேரமாகி வருவதற்கு அனுமதி கேட்டான். நன்றாக சீனியர் திட்டினார். அமைதியாக வாங்கிக்கொண்டான். சத்யாவின் செயல்பாட்டிற்கும் கோஷத்திற்கும் உள்ளே அந்த நூலின் தொடுக்கு இருப்பதாக யோசித்தான். இன்றைக்கு எப்படியாவது நத்தை போல் முடியிருக்கும் அந்த மூளையின் செல்களிலிருந்து இன்று பிரசவம் நடக்கும் என்று முடிவு செய்த அரவிந் சீனியரின் திட்டுகளின் சந்தோஷ ஒலிகளை சுமந்து கொண்டே சிந்தாதரி பேட்டையின் அம்பேத்கார் கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று பண்டல் சுமைகளை இறக்கிவைத்தான். அமர்ந்து யோசித்தான், செடிகளை கிள்ளிக் கொண்டே யோசித்தான். அங்கே இருந்த சிமெண்டு பெஞ்சில் முழங்காலிட்டு ஏசுவை தொழுவது போல் யோசித்தான். ….ம்.ம்…ஹும்….. அரைமணிநேரம் பெஞ்சிக்கு மேல் படுத்திருந்தான். மரநிழல்களுக்கு ஊடே சூரியனின் கதிர்கள் துளித்துளியாக விழுந்து கொண்டு இருப்பதை தன் நெஞ்சில் ஏந்திக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. ஏமாற்றத்துடன் பையை கையில் எடுத்தவன் அதை வீசி சுழற்றி தன் பின்புறம் அமர செய்தான். குனிந்த தலையுடன் மெதுவாக நகர்ந்தான். ஏதோ கைபேசி அடித்தது போலும் சீனியரின் குரல் கேட்டது போலும் இருந்தது. அலுவலகப்பக்கம் தனது மனத்திரையின் அடுத்த காட்சி விரிந்தது.
சிந்தாதரிபேட்டை பூங்காவிலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு பஸ்ஸில் பயணப்பட்டான். பேருந்து மத்தியில் இரண்டு சீட்டுகள் காலியாக இருந்தன. முன்சீட்டில் இருவர் பேசிக்கொண்டார்கள் இப்போ எல்லாம் அவன் அவ்வளவு புத்தகம் படிக்கிறதில்ல, கடந்த 10 வருஷமா ஒவ்வொரு வருஷமும் விரதம் இருந்து தொடர்ந்து மலைக்கு போயிட்டு வரான். பதினோரு மாசமும் வேர்வை சிந்த ரத்தம் சிந்த வயல்ல உழைக்கிறான், பன்னிரண்டாம் மாசம் அங்க உண்டியல்ல கொண்டு கொட்டிட்டு வரான். அந்த பதினொரு மாசம் சேமிச்சதெல்லாம் ஐப்பன் உண்டியல்ல போயி சேருது, உண்டியலுக்கு வாய் என்னவோ சிறுசா இருந்த மாதிரி தான் தெரியுது ஆனா, அது எவ்வளவு பெரிய வாய்ன்னு தூரத்திலிருந்து பார்க்கிறவங்களுக்கு தான் தெரியும், இந்த மாதிரி தூரத்து கிராமங்கள்ல, குக் கிராமங்கள்ல வேர்வை சிந்தி உழைக்கிறவ காசு எல்லாம் இழுத்து இழுத்து உள்ளே போகுது, அந்த உண்டியலுக்கு எவ்வளவு பெரிய வாய் இருக்கு, முதலாளிங்க பேசி அதட்டி சுரண்டுறாங்க, தெய்வங்கள் எந்த வார்த்தையும் பேசாமலே சுரண்டுறாங்க, இவ முன்னாலே எல்லாம் நிறைய வாசிச்சான் பார்த்தியா என்று பக்கத்து நண்பர் தன் சந்தேகத்தை கேள்வியாக விடுத்தார். நீ வேற கொஞ்சம் நெஞ்சமா தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து எல்லாம் படிச்சான். உள்ளபடியே புத்தகம் வாசிப்புக்கும் ஆண்டவனுக்கும் ஒரு பெரியதொடர்பு இருக்கு, பின் சீட்டில் இருந்த அரவிந் கொஞ்சம் தன்னை வளைத்து காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தான். இவன் உண்டியலிலும் ஏதோ ஒரு புதிய நாணயம் விழ எத்தனித்தது போல் தோன்றியது. பாவம் என்ன செய்ய பேருந்து நிலையம் வந்து விட்டது. அந்த இருவரும் தன்னுடைய உரையாடலை நிறுத்தி விட்டு அவர்கள் வேலைக்காய் இறங்கி விட்டார்கள். இன்னும் சிறிது நேரம் அவர்கள் பயணப்பட்டு இருந்தால் தனது உண்டியலில் அந்த ஒரு நாணயம் விழுந்திருக்குமோ என்று எண்ணி பேருந்து படிக்கட்டில் இறங்கிய அரவிந்துக்கு சீனியரின் குரல் அதட்டலாக கேட்டது.
“ஏய்…. சரண் ஏன்னடி அண்ணன் பிரசவ வேதனையில அங்கே இங்கே அலையிற மாதிரி அலையிறான். கையிரண்டையும் பின்னால கட்டிக்கிறான். வயத்தை தடவிக்கிறான், தலையை சொறிஞ்சிக்கிறான், என்று அரவிந்தன் செய்கைகளை கவனித்த அம்மா மகளிடம் கிண்டல் அடித்தாள். அரவிந்தின் செய்கைகள் அப்படித்தான் இருந்தன. வழக்கமான வேலைகளை மறந்து ஏதோ ஒன்றை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது போல் இருந்தது. “டேய்….டேய்…. டிபன் சாப்பிட்டு சீக்கிரம் ஒடுடா“ என்று அதட்டினார் அம்மா. அந்த புதினா சட்னியின் வாசனை அவனை இழுத்து உணவு மேசையில் அமரச் செய்தது.
அரவிந் அண்மையில் அவன் அண்ணனின் வீடு கிரகபிரவேசத்திற்காக ஊருக்கு சென்றிருந்தான். ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் என்கிற வகையில் எல்லா சகோதரர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பே அங்கே ஆஜராகி இருந்தார்கள். அடுத்த நாள் காலை பறையான் குளத்தில் எல்லாரும் குளித்துக் கொண்டிருந்தார்கள். குளத்து கரையில் ஊர் மக்கள் அரவிந்தை வழக்கறிஞர் என்ற வகையில் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்து பிரிவில் பெண்கள் குளிக்கும் படிக்கட்டுத்துறை அவன் அண்ணியும் குளித்துக் கொண்டிருந்தார்கள். அண்ணன் எப்போதும் கலர்கலராக பெரிய கைக்குட்டைகளை பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு அண்ணனின் ஒன்றிரண்டு கைக்குட்டைகளை துவைத்து புல் தரையில் காயவைத்திருந்தார்கள். அது வெயிலில் எதிர்பார்த்த நேரத்தை விட சீக்கிரம் காய்ந்து விட்டதால் காற்றில் பறந்து குளத்தின் நடுப்பக்கத்தில் போய் விழுந்தது. ஓலை பரோட்டா போடுகிற மாஸ்டர் அந்த பரோட்டாவை காற்றில் தூக்கி எறிந்து தவழவிடுவது போல அந்த கைக்குட்டை காற்றில் பறந்து நீரின் மேல் ஒரு தட்டு போல் கிடந்தது. சிறிது நேரத்தில் அதன் ஒரங்கள் நனைந்து தண்ணீர்ருக்குள் அமிழ்ந்தாள் தாமரை இலைபோல் காட்சி அளித்து. “ஏய் அரவிந்த உன் அண்ணன் கர்ச்சீப்பு….. கர்ச்சீப்பு…” என்று வேறு வேறு சொந்தங்கள் குரல் கொடுப்பதற்கு முன் பட்டாம் பூச்சி சிறகடிக்கும் நீச்சல் உத்தியில் கைகளை துடுப்பாக்கி குளத்தில் குதித்திருந்தான் அரவிந். கணப்பொழுதில் கைக்குட்டையை நெருங்கினான். அடுத்த கை கைகுட்டையில் பட வேண்டும். அதற்குள் நீருக்குள் அந்த கைக்குட்டையை கண்ணிமைக்கும் நேரத்தில் ‘விஸ்க்‘ என்று ஏதோ ஒன்று இழுத்து சென்றது. மைனர் அண்ணனின் கைகுட்டையை கைப்பற்ற முடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது. மீதமிருந்த ஈரத் துணிகளை எல்லாம் எடுத்து தன் உடம்பெல்லாம் போர்த்திக் கொண்ட அண்ணியின் கண்களிலும் கண்ணிரின் கசிவுகள். அண்ணன் அந்த கைக்குட்டையை ஸ்டைலாக பயன்படுத்தும் காட்சிகள் எல்லாம் படக் காட்சிகளாக அண்ணியின் இதய திரைகளுக்குள் வேகமாக ஒடின. “சரி விடும்மா……. வீட்டுக்குப் போம்மா… இப்ப மேல வரும்” என்று பெரியவர்கள் குரல் கொடுக்க அண்ணி மெதுவாக வீட்டிற்கு நடந்தாள். மக்கள் கூட்டம். சிரிப்பு. உள்ளே இழுத்துச் சென்றது மீனா? பாம்பா? என்ற பட்டிமன்ற விவாதம் குளத்துக்கரையில் நடந்து கொண்டே இருந்தது. ஆனால் அரவிந்துக்கு இழுத்தது எது என்பதை விட அந்த ‘இழுத்து சென்ற காட்சி’ தன்னுடைய ஒளிந்து நிற்க்கும் கதைக் கருவிற்க்குள் ஊசியை நுழைத்து அவனையும் அதே வேகத்தில் இழுத்துச் சென்றது. நொடியில் அவன் எங்கே நின்றுக் கொண்டிருக்கிறோம் என்று கூட மறந்து போனான். பட்டிமன்ற விவாதம் எதுவும் அவன் காதில் விழவில்லை. அந்த கபளீகர காட்சி அவனை அந்த கதையின் கருவோடு களத்தில் பல பந்துகள் போல முட்டி முட்டி மோதி சென்றன. மெதுவாக குளித்து முடித்து விட்டு வீட்டிற்கு நகர்ந்தான். எல்லோரும் “பாவம் அரவிந் இந்த விஷயத்துக்கு இவ்வளவு வருத்தப்படுறானே, எவ்வளவோ கேசு பார்த்திருப்பான், இதுக்கு போய் இவ்வளவு வருத்தப்படுறான்?” என்று, பேசிக் கொண்டார்கள். எல்லோருடைய அன்புக்கும் பாத்திரப்பட்டு தான், தொடர்ந்து பந்துகள் மோதும் களத்தை கையில் ஏந்தி வீட்டிற்குச் சென்றான். நீந்திச் செல்லும் போது குதித்து சத்தமிட்ட சிறுவர்களும் இளைஞர்களும் அரவிந்தை களத்தில் தோற்றுவிட்ட ஒரு வீரனைப்போல் சோகத்துடன் பார்த்துக் கொண்டே நின்றனர். “ஒரு கர்ச்சீப் போனதுக்கு இவ்வளவு வருத்தமா“ என்று கூட சிலர் முணுமுணுக்கும் ஒலி கேட்டகதான் செய்தது.
உண்டியலில் டொக் என்று சத்தம் கேட்டு இப்பொழுது பதினைந்து வருடங்கள் கடந்திருக்கும். எழுதி எழுதி பதினைந்து தொகுப்புகளுக்கு மேல் வெளியாகிவிட்டது. உலகெங்கும் இவனுடைய புத்தகத்தின் வாசிப்புக்கள் பரந்து கிடந்தன. புது கதைகளின் தேடல்களும் கனல் கதப்பை கொண்டி நிலவின. இதற்குள் அவன் அந்த கன்னியின் வாசல்தேடி பதினைந்தாயிரம் முறைகூட சென்று திரும்பி இருப்பான்.
ஒரு நாள் அரவிந் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் ரெஸ்ட் ரூம் போகவேண்டும் என்று உந்தல் இருந்த போதும், நேற்று இரவு கண்ணயர்ந்து, அவன் தலை, மேஜையில் கவிழ்ந்து விழும்படி தூக்கம் கண்களை ஊசியால் பின்னிக் கொள்ளும் வேளை வரை எழுதிக் கொண்டிருந்த கதையின் பிற்பகுதியை எப்படியாவது எழுதி முடித்துவிட வேண்டும் என்று ஆரம்பித்தான். கடைசி பத்தியையும் எழுதி முடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து எழுதப் தலைப்பட்டான். அந்த பத்தியின் கடைசி வரியை இவ்வாறு எழுதி முடித்தான். “உன் நினைவுகளில் பயணப்படும் போது மட்டும் என்னவோ என் இதயத் துடுப்புகள் சீராக விசிறுகின்றன.” என்று எழுதி முடித்து நிறுத்தல் குறியை இட்டு முடிக்க பொறுக்கவில்லை. ஏதோ ஒரு தொடக்கம் கிடைத்தது போல் இருந்தது. தான் சிந்திக்கிற எல்லா கதைகளோடும், ஒரத்தில் அந்த மாயக்கன்னியின் பாதங்களும் பயணப்பட்டுக் கொண்டே தான் இருந்தன. “என்று தான் விடியுமோ?” என்று ஏங்கிக் கொண்டு அதிகமாக அழுத்திய காலை கடன்களுக்காக டாயிலட்டுக்குள் சென்றான்.
அந்த கல்பநாதனின் கொலை வழக்கு விசாரணை ஆரம்பித்து விட்டதால் அதன் மீது செலுத்தவேண்டிய உழைப்பு ‘ஏதோ படியில் இறங்கியது போல அடுத்த ஐந்து வருடங்களை தட்டிச் சென்றுவிட்டது. ஏன்?…….. கல்பநாதனின் வழக்கில் முக்கிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும்போது கூட இவன் காதலியின் கால்தடங்களுக்குள் இவன் பலநேரங்களில் சிக்கிக் கொண்ட சந்தர்ப்பம் உண்டு. ஒரு முறை குறுக்கு விசாரணையை திடுதிடுப்பென்று நிறுத்தி வாய்தா கேட்டதற்காக நீதிபதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான். என்றாலும் அந்த காதல் நினைவுகளின் பசுமை மட்டும் மாறாத பச்சை நிறமாகவே அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் சிலநேரங்களில் இனிமேல் அது விவாகரத்து பெற்றுவிட்ட மனைவியைப் போல நினைவுகளில் வாழும் கதையாவும் பயணிப்பது உண்டு. என்றாலும் என்றாவது ஒரு நாள் அடைந்தே தீருவேன் என்ற வெறியின் இயக்கங்கள் மட்டும் அவனுக்குள் இயங்கிக் கொண்டே தான் இருந்தன.‘
இரவு சரியாக 11மணி, ஊட்டிக்கு போய் அங்கே உள்ள நிலம் சம்பந்தமான வழக்கில் தரப்பினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினான். சமாதானம் உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது. இனியாரும் அப்பீலுக்கு போக முடியாது, வழக்குக்கு மேல் வழக்கு இல்லை. எல்லையை போடுட்டு கல்பதியம் செய்து போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய வழங்கறிஞர் அரவிந் அப்பொழுது தான் தன்னுடைய படுக்கை அறைக்குள் நுழைந்தான். இனிமேல் ஒரு நிமிடம் கூட தூக்கத்தை தள்ளிவைக்க முடியாது என்ற நிலையில் தான் அந்த ஏ/சி அறைக்குள் காலடி எடுத்து வைத்தான். மனைவி மக்கள் எல்லாம் ஏற்கனவே இரண்டு மணிநேரம் தூக்கிப்போயிருந்தார்கள். சென்னையில் சீனியரிடமிருந்து தொலைப்பேசி அழைத்தது. படுக்கையில் சரிய எத்தனித்தவன் “ஓ சார் பேசுறாறு“ என்று மலர்ந்த முகத்துடன் “சார் சொல்லுங்க சார்” என்றான். “ஆ அரவிந் மினிஸ்டருடைய பி.ஏ.வுடைய தம்பிய மூணுநாளா காணலயாம் அதுக்கு ஒரு ஹெச்.சி.பி. மூவ் பண்ணும் காலையில இப்ப நீ டிரெயின், பஸ்ஸயெல்லாம புடிச்சி வரதுக்கு ரொம்ப ஸ்ட்ரையாகும். நாளைக்கு காலையில ஃளைட்ல வந்திடுறியா?” “எஸ் சார் மார்னிங் வந்துடுறேன் என்று ஒரே வார்த்தையில் கட்டளையை ஏற்று தொலைபேசியை தூக்கத்திற்கு வழிவிடுமாறு கேட்டுக் கொண்டான்.
ஏன்னமோ எத்தனையோ ஜீனியர்களை கடந்து வந்தாலும் அரவிந்தோடு கலந்த ஒரு பேச்சுவார்த்தையை உருவாக்கினால்தான் சீனியருக்கு முழு திருப்தி இருக்கும். அதற்காகத்தான் எந்த சிக்கலான வழக்கு வந்தாலும் அரவிந்தை கூப்பிட அவர் தவறுவதில்லை. அரவிந் பக்கத்தில் இருந்தால் பல முக்கியமான வழக்குகளை வாதம் செய்யும் போது கூட அவருக்கு ஒரு பிடிப்பு இருப்பது போல் உணர்வார். பல நேரங்களில் அரவிந்த இல்லையென்றால் வாதம் செய்வதற்காக வாய்தா கூட வாங்கிவிடுவார்.
அரவிந் தன்னிடம் சேர்ந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவனும் தனியே எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளை எல்லாம் நடத்தி விட்டான். ஆனால் இந்த அரவிந் எப்படி ஒரு புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளனாக தன்னை கொண்டு நடத்துகிறான் என்ற அவனது திறமைதான் இன்னும் அவருக்கு ஒரு புதிராகவே இருந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நண்பனாக இருக்கும் அப்பா கேட்பது போல “எப்படி ராஜா இரண்டு பக்கமும் நீ திறமையா வேலை செய்யுற” என்று கேட்பார். :”அதெல்லாம் ஒண்ணுமில்ல சார், “நேரம் கிடைக்கும்போது அப்படியே எழுதுறது தான் சார்” என்று அவனின் திறமைகளுக்கு ஏதும் உழைப்போ தேவையில்லாதது போல் பேசிவிட்டு கடந்து சென்றுவிடுவான். கொடுத்த வேலைக்குள்தான் அல்லது எடுத்த வேலைக்குள்தான் அவனுடைய கண்ணின் விழித்திரை வழியே அவன் மூளை இறங்கிகிடக்கும், என்பது அவளுடைய ஆகப்பெரும் குணாம்சம்.
சீனியரிடம் பேசிவிட்டு அவர் உத்தரவில் அந்த கட்சிக்காரரிடம் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் போது தன்னை இருபது வருடங்களாக விரட்டிக் கொண்டிருக்கும் அந்த அசீரியின் குரல் கேட்டது. வழக்கின் சங்கதிகள் கதையின் ஏதோ ஒரு பகுதியை தொட்டு செல்வது போல் இருந்தது. இறைவன் என்ற கருத்தாக்கத்தின் மேல் அரவிந்துக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் ஒருவேளை மூளையின் ஏதோ ஒரு பகுதியில் ஒட்டிக் கொண்டு பிய்த்து எடுத்தால் கூட வர மறுக்கிற அந்த கதையின் கருவை இழுத்து கொடுப்பதற்கு தான் ஆண்டவனே இன்று ஃப்ளைட்டில் அனுப்பி வைத்திருக்கானோ என்னவோ என்பது போல தோன்றியது. மினிஸ்டர் பி.ஏ. வழக்கிலும் தொலைந்து போன விஷயம் தான். தன்னுடைய கதையிலும் தொலைந்து போன விஷயம் தான். “ஒருவேளை ஒரு இழந்த மனோநிலையை மீண்டெடுக்கிற வலியை வலிமையை சொல்லி செல்லுகிற கதை போல தான் அந்த கரு உருவாகி இருக்குமோ?” என்று சிறுபொழுது இருக்கையை விட்டு எழுந்து ஏதோ கடினமான உழைப்பிற்கு ஒரு இடைவெளி தேவைப்படுகின்ற பாவனையில் சீனியர் அலுவலகத்திற்கு வெளியே வந்து நின்று மரங்களையும் வானத்தையும் பார்த்து கொண்டே நின்றான். அந்த காட்சிகளின் பதிவு ஏதும் அவனுக்குள் பதியவில்லை. ஒரு குயில் கூட அந்த நேரத்தில் தன்னுடைய முகத்தை காட்டி கூவித்தான் பார்த்தது என்றாலும் ஒலிபதிவுகளோ படப் பதிவுகளோ ஏற்படவில்லை. இந்த வழக்கு சங்கதியின் ஏற்பட்ட பிரிவின் சங்கதிகளும் தனது கதை களத்தின் கருவோடு இணைய எத்தனிக்கிறதா என்று தன்னுடைய மூளையின் ஒட்டு பகுதியை ஆன மட்டும் இழுத்து பார்த்தான். ம்…ஹு…கடினமான பாறையாக கிடந்தது. மீண்டும் கடைமை அழைத்து.
அன்றைய கலந்துரையாடலில் அரவிந் கலந்து கொண்டது சீனியருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. இரண்டு மணிக்குள் பிரமாண வாக்குமுலத்தையும் ஆவணங்களையும் சரி செய்து முடித்தவுடன் “அரவிந் அஃபிடவிட் நல்ல வந்திருக்கில்ள?“ என்று அரவிந்தின் பெருமையை பேசுவது போல ஒரு குழந்தை தனமாய் அரவிந்திடம் கேட்டார். இவ்வாறு ஏதாவது ஒரு வகையில் சீனியர் தன் பெருமையை அறிவிப்பார் என்று அரவிந்துக்கு தெரியும் என்றாலும் எப்பொழுது எந்த வார்த்தையில் அந்த அறிவிப்பு வரும் என்பது ஒரு புதிர்தான். “ஆமாம் சார் எல்லாம் சாருடைய கைடென்ஸ் தான் சார்“ என்று மெருகூட்டினான்.
“ஹா… அரவிந் ஈவினிங் எந்த ரயில்ல புக் பண்ணியிருக்கீங்க,” சார் டிக்கெட் அப்பமே எடுத்துட்டேன் வெயிட்டிங் லிஸ்டுல இருக்கு தம்பிக்கிட்ட சொல்லி உங்க லட்டர்ஹெட்ல இ.க்யூ. போட சொல்லியிருக்கேன் சார். ஓ.கே. கிடைக்கலன்னா, பஸ்ட் ஏசி கிடைக்குமா பாருங்க, க்ளைண்டுட்ட சொல்லி பணத்த கொடுக்க சொல்லுறேன். கட்சிக்காரனுடைய காசாக இருந்தாலும் உழைக்கிற காசு என்பதில் உறுதியாக இருந்தான் அரவிந். தேவைக்கு செலவு செய்வதிலும், தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது என்று மத்தளத்தின் இருபுறத்தையும் நாதமாக அடிக்க கற்றுக் கொண்டவன்.
எஸ் – 5வது கோச்சில் ஒன்பதாவது சீட் அலாட்டாகியிருந்தது. ஒரு வயதான அம்மாவிற்கு 11-வது எண் அப்பர் பர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த தாய்க்கு வேண்டுகோளுக்கு இணங்க தன்னுடைய கீழ்படுக்கையை அந்த தாயிக்கு கொடுத்துவிட்டு தான் 11-வது படுக்கையை எடுத்துக் கொண்டான். 13-வது நடுபடுக்கையில் அவரது மகன் படுத்திருந்தான். அம்மா பச்சைகலர் சேலை கட்டியிருந்தார். இடையிடையே வெள்ளையும், மஞ்சளும், சிவப்புமான கோடுகள் போட்ட சேலை அணிந்திருந்தார். எல்லோரும் தூக்கிக் கொண்டிருந்த நேரம். வயது 75-க்கும் 80-க்கும் இடையில் இருக்கும். “அப்பா, கொஞ்சம் தண்ணி கிடைக்குமா ராசா“ என்று தனது மகனிடம் கேட்டார். “என்ன அப்பவே சொல்லவேண்டியதுதானே விழுப்புரத்தில வண்டி நின்னுதுல்ல அங்கே தானே உனக்கு டிபன் வாங்கி அழுதேன். அந்த நேரத்தில சொன்னா வாங்கியிருக்கப் போறேன். சும்மா தூக்கத்த கெடுத்துட்டு நொய் நொய்யீங்க வேண்டியது.“ மேலே 11-ம் படுக்கையிலிருந்து “அம்மா தண்ணி குடிக்கம்மா” என்று தண்ணீர் பாட்டிலை கொடுத்தான் அரவிந்த. “இந்த சார் கொடுக்கறாங்க பாரு வாங்கி குடிச்சுட்டு கம்னு தூங்கு சும்மா எரிச்சல்படுத்திட்டு இருக்க கூடாது“ என்று அம்மாவை திட்டிய மகன் அவனை எரிச்சல் படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த பிரிவில் இருந்த ஏழு நபர்களையும் எரிச்சல் படுத்தினான். எல்லோருக்கும் தூக்கம் கலைந்து போனது உண்மைதான். கண்ணீர் வடித்த அம்மா ஒரு நேரம் டிபன் சாப்பிட்டுவிட்டு “கை எங்க ராசா அலம்பனும்?” என்று கேட்டதற்கு அதுகூடவா தெரியாது என்று கோபத்தின் உச்சிக்கு போய் அம்மாவை தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் கையை கழுவிவிட்டு 9-ம் நம்பர் படுக்கையில் தள்ளிவிட்டது போல் செய்தான் அந்த மகன். அரவிந்துக்கு பொறுக்கமுடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு அங்குமிங்கும் உருண்டு புரண்டான். அவன் இதயங்கள் ரத்த துளிகளை சொட்ட ஆரம்பித்தன. சிலர் தூக்கமின்றி உருண்டாலும் என்ன தண்ணி அடிச்சிட்டு வந்து ரயில்ல கலாட்டா பண்ணுறாங்க என்று பலர் அவரவர் பாணியில் இந்த மகனுக்கு மேல் அம்புகளை எய்தார்கள். அரவிந்த 12. 1 மணிவரை பொறுத்து பொறுத்து பார்த்தான். அவன் புலம்பலும் அலம்பலும் தாங்கவில்லை. ஒரு பெற்ற தாயை உதாசீனப்படுத்துவதற்கு ஒரு அளவில்லையா, என்று கேள்விக்கு மேல் கேள்வி இவனுக்குள்ளே பூதாகரப் பட்டுக் கொண்டிருந்தது. ரயிலில் செயினை இழுப்பதா? போலீஸ்க்கு போன் செய்வதா?, இல்லை ஒரு வழக்கறிஞனாக, இப்படி இக்கட்டான சூழ்நிலைகளில் நடந்து கொள்ளும் கிரிமினல்களுக்கு எப்படி பாடம் புகட்ட வேண்டும் என்பதும் இந்த இருபது வருட வழக்கறிஞர் அனுபவத்தில் அவனுக்கு புரியாத ஒன்றுமில்லை. இருந்தாலும் தன்னை அடக்கிக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேல் காலத்தை கடத்தினான். எல்லோரும் முனங்குவதும், சத்தம் போடுவதுமாய் இருந்தார்கள். அரவிந்து மட்டும் இந்தை எவ்வாறு சரி செய்வது என்று வேறு வேறு கோணத்தில் தனது தூக்கத்தை தியாகம் செய்து கொண்டிருந்தான்.
மணி 2 இருக்கும். தூக்கத்தில் கீழ் படுக்கையில் அம்மாவின் ஒரு கால் கிழே விழுந்து கிடந்ததை கவனித்த அந்த மகன் திடீரென் கீழே இறங்கி காலை தூக்கி படார் என்று படுக்கைக்கு மேல் தள்ளிவிட்டு அம்மாவின் கழுத்தை பிடித்து படுக்கையின் ஒரமாக தள்ளி என்ன படுத்துருக்க? கால தொங்க போட்டு கிடக்க, அந்த ஒரமா படுத்து செத்து தொல” என்றான். இதற்கு மேல் அரவிந்துக்கு பொறுக்கமுடியவில்லை. மேல் படுக்கையிலிருந்து அப்படியே கீழே குதித்தான். அந்த மகனின் கழுத்தை பிடித்து இடது கைக்குள் வைத்துக் கொண்டு வலது கையால் பளார் என்று வலது கன்னத்தில் ஒரு அறை அரைந்தான். ஏதோ லோக்கல் ரெவுடி போல ரயிலுக்குள் பிரஸ்தாபம் பண்ணிக் கொண்டும், அலப்பறை பண்ணிக் கொண்டும், மற்றவர்களை தூங்க விடாமல் ரகளைப்பண்ணிக் கொண்டிருந்ததோடு அல்லாமல், அம்மாவை ‘செத்து தொலை’ என்பதும் அரவிந்திற்கு அதற்கு மேல் பொறுத்துக் கொள்ளமுடியாத உச்ச கட்ட வார்த்தையாக இருந்தது. தான் கன்னத்தில் இழுத்த ஒரு இழுப்பில் ‘ராஸ்கல் ஜாக்கிரதை’ என்ற உரத்த குரலில் நிலை குலைந்து நின்றான் மகன். பக்கத்து பிரிவுகளில் எல்லம் இருந்து ஆட்கள் கூடிவிட்டார்கள். அதற்குள் ஒவ்வொருவரும் செயினை பிடித்து இழுப்பதும், ரயில்வே போலீஸ்க்கு போன் செய்வதுமாய் இருந்தார்கள். பலர் “இவனுக்கு இப்படி ஒரு ஆள் வேண்டியதுதான் சொந்த அம்மாவ என்ன திட்டு திட்டுறான். தே…. அப்படின்னு கேக்கிறான் இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்குமா.” என்று பல முணுமுணுப்புகள். “நாய் யாரையாவது தூங்க விடுறானா.” இடது கைபிடியை அரவிந்த இன்னும் கழுத்திலிருந்த எடுக்கவில்லை. அரவிந்தை அவன் தன் கையால் காலால் எப்படியெல்லாமோ உதைத்து பார்த்தான். அரவிந்துனுடைய தோற்றம் உடலமைப்பு கறுப்பு பேண்டு வெள்ளை சட்டை போன்றவை எல்லாம், ஒரு வழக்கறிஞராக தான் இருக்கு வேண்டும் என்று எல்லாரும் சங்கேத பாஷையாக பேசிக் கொண்டிருந்தது அரவிந் கண்களில் படாமல் இல்லை.. அப்படியே அவன் தலையை பிடித்து கம்பார்மென்டில் ஒரு பக்கத்தில் –ஃபேன் அருகில் இடிப்பதற்காக கொண்டு சென்றான் அரவிந்த. ஒரு வெறி பிடிச்ச காட்டு எருமை எதிராளையை முட்டி தள்ளுவது போல் காட்சி இருந்தது.
“ஐயா விட்டிடு…… ராசா விட்டிடு ராசா என்று அரவிந்தின் காலை கட்டி பிடித்து அழுது கொண்டிருந்தார் அம்மா. எப்படி மின்சாரம் பாய்ச்சல் தாக்குண்ட இடத்தில் தடைப்பட்டுப் போனால் என்ன மாற்றம் வருமோ அப்படி ஒரு மாற்றம் திடீரென அரவிந்திடம் தென்பட்டது. பட்டென்று கழுத்து பிடியை அனாயாசமாக விட்டு விட்டு பொத்தென்று அப்படியே கீழே அமர்ந்தான். அம்மாவின் படுக்கைக்கு அடியில் வைத்திருந்த தன் பையை இழுத்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மகன் அரவிந்தை ஆன மட்டும் தாக்கினான். அரவிந் பொருட்படுத்தவில்லை. பைக்குள்ளிருந்து தான் கத்தையாக வைத்திருந்த எழுது காகிதங்களை வெளியில் எடுத்தான். உள்ளுக்குள் உள்ளுக்குள் வலது கையை திணித்து துழாவினான். அந்த அறைக்குள் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு அடுத்திருந்த சிறிய அறையில் ஜீப்பை திறந்தான். அதற்குள் வேகமாக கையை திணித்து தேடினான், மூடியில்லாத பேனா ஒன்று கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு யாரோ உணவருந்தி விட்டு வைத்திருந்திருந்த கரண்டியை எடுத்து அரவிந்த தலையில் ‘நங்’ என்று அடித்தான் மகன். அரவிந் தலைமுழுவதும் ரத்தம் வழிந்து இறங்கியது. அரவிந்துக்கு அது ஒரு பிரச்சினைபோல் தெரியவில்லை. கூட்டம் கூடியது. “ஏம்ப்பா… எம் புள்ளைய இந்த அடி அடிக்கிற?” என்று மகன் காலை கட்டிபிடித்தாள் அந்த தாய். ஐயோ பாவம் ரத்தம் சொட்டிக் கொண்டே இருக்க வடியிது பார் என்று அங்கலாயித்தாள் தாய். சீட்க்கு மேல் முதுகை வைத்துக் கொண்டு தனது வெள்ளை காகிதத்தில் ரத்தம் சொட்டிக் கொண்டே இருக்கு வேகவேகமாக எழுதிக் கொண்டே இருந்தான். ஒரு பக்கம் முடிந்தது. இரண்டாவது பக்கத்தில் ரத்த சொட்டுகள். ஆன மட்டும் அடித்து மகனும் ஒய்ந்து போனான். எல்லோரும், மகனை பிடித்து இழுத்து அப்புறப்படுத்தினார்கள். தான் எழுதி முடித்த இரண்டு காகிதங்களையும் ஒன்றபின் ஒன்றாக வைத்து மொத்த காகிதங்களின் இடையில் வைத்து பைக்குள் பத்திரப்படுத்தினான் அரவிந்.
ரயில் செயினை பிடித்தது யார் என்றும் கலாட்டா செய்தது யார் என்றும் போலீஸ் படையுடன் எஸ்-5 கோச் நிரம்பியது. அரவிந்த அலட்டிக் கொள்ளாமல் கீழ் படுக்கையில் உட்கார்ந்திருந்தான். கண்ணீரோடு அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த தாய் அரவிந்த தலையை தன் தோளுக்கு மேல் மெதுவாக இழுத்து சாய்த்தாள். அவள் தோள்களில் அரவிந்த தலையிலிருந்து ரத்தம் வழிந்து இறங்கியது. தன் பைக்குளிருந்து தனது விசிட்டிங் கார்ட்டை மட்டும் எடுத்து போலீஸிடம் கொடுத்தான். “புக்கிம் சார் ஐ வில் மேக் த கம்பளையிண்ட்” என்றான் அரவிந்.
……………………………………………….

சுவாரஸ்யமான கதை. இயல்பான நடை. நன்று