ரசிகையின் மரணம்
எஸ் வி வேணுகோபாலன்

ஒரு ரசிகையின் மரணத்திற்குப்
போயிருந்தேன் நேற்று முன் தினம்

நினைவில் முகம் இல்லை
எப்போது பார்த்தோம்
அல்லது
பார்த்திருக்கிறோமா

குளிர்பதனப் பெட்டிக்குள்
வைத்திருந்தனர்
பரிச்சயமற்ற முகத்தினளை

பார்க்க மாட்டாத
குற்ற உணர்ச்சியில்
பரிதவிக்கிறது மனம்
படபட என…

வாஞ்சை பொழியும் அவள்
குரல் நிறைந்திருக்கிறது உள்மனத்தில்
அலைபேசியில்
குவிந்திருக்கிறது
கதைக்கும் கட்டுரை கவிதைகளுக்கும்
இசை வாழ்க்கைக்கும்
அவளது சளைக்காத மறுமொழி

இன்னும் உயிர்த் துடிப்போடு
அலமாரியை நிறைத்துக் கிடந்த
புத்தகங்களில் தெறிக்கிறது
அவளது வாசிப்பு

எண்பத்து மூன்று இருக்கும்
ஆமாம்
என்கிறார்கள் யாரோ…

சித்தி எனும் உறவுக்காரிக்கு
இருக்கலாம் அந்த வயது –
ரசிகைக்கு வயதில்லை
மரணமுமில்லை
சாம்பலாக அவளை சேகரிக்க வேண்டியதில்லை
கரைக்க வேண்டியதில்லை
கடலைக் கொண்டுபோய்க் கடலில்.

4 Comments on “ரசிகையின் மரணம்
எஸ் வி வேணுகோபாலன்”

  1. இரசிகை மனதில் எப்போதும் . ஆம்.சாம்பலாக அவளை சேகரிக்க வேண்டியதில்லை
    கரைக்க வேண்டியதில்லை
    கடலைக் கொண்டுபோய்க் கடலில்
    கரைக்க ன்ன அவசியம். அருமை.

Comments are closed.