
என்னைப் பற்றி என் தந்தை எழுதி வைத்திருந்த ஜோதிடக் குறிப்பு ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். எனக்கு நடக்கப் போகும் நல்லதையும் தீயதையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் அதைத் தேடினேன். அப்போது ஒரு பழைய பெட்டி தென்பட்டது. அதில் இருக்கலாம் எனத் திறந்த போது ஒரே புகையாய் வந்தது. அந்தப் புகை மறைந்தவுடன் அதில் சிறிய உலகம் ஒன்று விரிந்தது. என் தந்தை வெள்ளையான ஆடை ஒன்றை அணிந்து பெரிய மாளிகையின் மாடம் போல் இருக்கும் ஓர் இடத்தில் அமர்ந்திருக்கிறார். என் அம்மா அவருக்கு அருகில் அதே போல் உடையணிந்து அமர்ந்திருந்தாள். கிளிகள் அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததும் தெரிந்தது. அழகான பூக்கள் கொண்ட கொடிகள் அந்த மாடத்தில் தவழ்ந்து கொண்டிருந்தன. அது ஏதோ ஓர் அவை போல் தெரிந்தது. இன்னும் சிலரும் இதே போன்ற உடையுடன் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் எழுந்து என் பெயரைச் சொன்னார். என் தந்தை எழுந்து என் மகனை இன்னும் சில காலம் அந்தப் பூமியில் வாழ அனுமதிக்க வேண்டுகிறேன். அவனுடைய கடமைகள் இன்னும் முடியவில்லை. இப்போதே அழைத்தால் அவனை நம்பியிருக்கும் உயிர்கள் பாதிக்கப்படும். அவன் இன்னும் கொஞ்சகாலம் இருக்க நான் எதையும் செய்ய ஆயத்தமாக உள்ளேன் என்றார். அதைக் கேட்ட அந்தச் சபையின் நடுவில் இருந்தவர் எல்லோருக்கும் இது போன்ற கடமைகள் இருக்கும். எல்லோரையும் இது போல் விட்டுவிட முடியாது. ஏற்கனவே உங்கள் மகன் பூமியில் அதிகமான காலம் இருந்துவிட்டார். எனவே மேலும் காலத்தை நீட்டிக்க முடியாது என்று சொன்னார். அப்படி நீட்டிக்க நான் என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று தந்தைக் கேட்டார். உங்கள் மகனை இங்கு அனுப்பிவிட்டு நீங்கள் அவன் இடத்தில் அங்கு இருந்து வாருங்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நான் பெட்டியை மூடினேன். அப்பாவின் உடைகளை எடுத்துப் போட்டுக் கொண்டேன். அன்று இரவு அப்பா என் அறைக்கு வந்தார். என் உடைகளை அணிந்திருந்தார். என்னை எழுப்பி வீட்டுக்கு வெளியில் செல்லுமாறு கூறி கதவை அடைத்தார். இருள் என்னைக் கரைத்துவிட்டது. காலையில் அந்தப் பழைய பெட்டியை எடுத்துக் கிணற்றில் போட்டார் அப்பா.
