
‘ஏம்மா ஸ்கூல்லே என்கிட்டே பசங்க யாருமே பேச மாட்டேங்கிறாங்க , சுஜாதா, ராணி கிட்டே எல்லாம் போயி போயி பேசுறாங்க . நான் கருப்பா இருக்கறதாலயா, ‘ சுந்தரியின் கேள்விக்குப் பதிலாக கண்களைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிந்தது பார்வதியால். தன் வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்கள் அந்தக் குழந்தைக்கும் வந்து சேர்ந்து விடுமோ என்ற கவலை.
பள்ளிக்குச் செல்லாமல் , சிறு வயதில் இருந்தே, அம்மாவோடு சேர்ந்து வீட்டு வேலைக்குப் போய்க் கஷ்டப்பட்டு வளர்ந்து , அம்மாவின் தூரத்துச் சொந்தம் துரைசாமியை மணந்து அவன் கொத்து வேலையில் கூட வேலை பார்த்த சிவத்தப் பொண்ணு ஒருத்தியோடு ஓடிப் போக, அவள் இளமைக்குப் பரிசாக அவன் கொடுத்துப் போன சுந்தரியே தனது வாழ்க்கை என்று கிடைத்த கூலி வேலை எல்லாம் பார்த்துக் கொண்டு சாயந்திரம் இங்கே அம்மன் கோயில் வாசலில் வந்து பூ கட்டி விற்கும் தனது வாழ்க்கை ஒரு கணம் அவள் மனக் கண்ணில் ஓடி மறைந்தது .
கேட்ட கேள்விக்குப் பதிலை எதிர்பாராமல் பாடப் புத்தகத்தில் மூழ்கி விட்ட மகளை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தாள் . கொஞ்சம் பெருமை கூடவே வந்தது. எனக்குள் இருந்த படிப்பு வெறி இவளுக்குள் இறங்கி இருக்கிறது.அத்தனை பாடங்களிலும் முதல் மார்க் வாங்கி வந்து தன்னிடம் காண்பிக்கும் போது இந்த முகம் எத்தனை அழகு. நான் படிக்காத படிப்பெல்லாம் இவளைப் படிக்க வைக்க வேண்டும். .
‘அறிவு தாண்டி அழகு..மூக்கும் முழியுமாய் இருக்கிறது எல்லாம் எத்தனை நாளைக்கு. எல்லாச் சதையும் ஒரு நாள் தொங்கித்தான் போகுமடி கண்ணு. நெருப்பிலே எரியுறப்ப கருப்பாய் போகப் போறது தான் எல்லாம். படி, படி, வெறியோடு படி, அறிவுதாண்டி அழகு. அந்த அழகு அதே போல அறிவான அழகோட இருக்கிற ஒரு ஆம்பிளைய உன் பின்னாலே வர வைக்கும். ‘
இதையெல்லாம் மகளிடம் சொல்ல முடியுமா. இந்த இளமைப் ப்ருவம் அவளுக்குள் கிளப்பி விடும் உணர்ச்சிகளை இந்த வார்த்தைகள் தணிக்குமா. திரும்பிப் பார்த்து அங்கே திறந்த கோயிலில் தெய்வீகச் சிரிப்போடு இவளைப் பார்க்கும் அந்தக் கருத்த அம்மனைப் பார்த்ததும் மகளின் கேள்விக்கு விடை கிடைத்தது பார்வதிக்கு .
‘ சுந்தரி , இந்த சுந்தரி அம்மன் பேரைத் தான் உனக்கு வச்சிருக்கேன். அம்மன் , கருப்பா, சிவப்பா ‘ என்றதும் பளிச்சிட்ட முகத்தோடு பதில் வந்தது சுந்தரியிடம் இருந்து ‘ ஆமாம்ல, அம்மனும் என்னை மாதிரியே கருப்பு , ஆனா அவங்களைக் கும்பிட எவ்வளவு பேரு வர்றாங்க ‘ என்றபடி மறுபடி புத்தகத்தில் மூழ்கினாள் சுந்தரி.

தன்னம்பிக்கை உண்டாக்கும் கதை!