வாழ்க்கை/ஜெ.பாஸ்கரன்

ஒரு வார விடுமுறைக்குப் பின் புறநோயாளிகள் பிரிவில் கூடுதலான விசிட்டர்கள்! வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சுமார் 40 வயது மதிக்கத் தக்கப் பெண்மணி, சற்றே பூசினாற்போன்ற உடல்வாகு. சிரித்தால் ‘பளீ’ரென்று தெரியும் வரிசையான பற்கள். முகத்தில் பாதியை மாஸ்க் மறைத்திருந்தது. எங்கோ பார்த்திருக்கிறேன்….’சட்’டென்று நினைவுக்கு வரவில்லை. உடன் வந்த பையனுக்கு வயது 11. ஸ்கூல் யூனிஃபார்மில் வந்திருந்தான். சம்மர் கிராப். அவனுக்கும் கிட்டத்தட்ட அதே சிரிப்பு.

“நேத்திக்கு ஸ்கூல்ல மயக்கமாயிட்டான் சார்” – பெண்மணி சொன்னார்.

“வலிப்பு வந்ததா?”

“ஆமாம் டாக்டர். கை இரண்டும் கொஞ்சம் வெட்டி வெட்டி இழுத்துச்சு. கண் மேலே சொருகிடிச்சு. ஆனா வாயில நுரை ஏதும் வரல டாக்டர்.”

“ம்.. இதுதான் முதல் தடவையா?”

“இல்லே டாக்டர்; போன மாசம் இதேபோல ஒரு தடவை வந்திருக்குது.”

“வீட்டில வேற யாருக்காவது இப்படி இருக்கா?”

“எங்க பரம்பரையிலேயே இல்ல டாக்டர்.”

இந்த மாதிரி வியாதிகளுக்கு, நேரில் கண்டவர்களின் விவரணை மிகவும் முக்கியம். இருந்தாலும், அவனையே கேட்டேன்.

“என்ன ஆச்சு தம்பி?”

“தண்ணி குடிச்சிட்டு, க்ளாஸுக்கு போற வழியில மயக்கமா வந்திச்சு. கண்ணை இருட்டிடுச்சு… அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியாது சார்.”

“உன்னைப் பார்த்த உன் ஃப்ரெண்ட்ஸெல்லாம் என்ன சொன்னாங்க?”

“நான் வுழுந்த உடனே கண்ணு ரெண்டும் மேலே சொருகிடிச்சாம். ரெண்டு கையும் ஆடிச்சாம். கூப்பிட்டாக் கூட, நான் பதில் ஏதும் சொல்லலியாம்”.

“நினைவு வந்ததும், தலைவலி, வாந்தி ஏதாவது இருந்ததா?”

“இல்லே சார். கொஞ்சம் தூக்கம் வந்தது.”

உடன் வந்த பெண்மணியின் கண்களில் கண்ணீர். என் கேள்விகளுக்கெல்லாம் அந்தப் பையனைக் கேட்டு, கேட்டு எனக்கு பதில் சொன்னார். எனக்கு சிறிது வித்தியாசமாகவும், வியப்பாகவும் இருந்தது.

“ஏம்மா, உங்களுக்கே உங்க பையனைப் பற்றித் தெரியாதா? சின்னப் பையன், அவனையே கேக்கறீங்களே… நீங்க அவன் அம்மாதானே?”

கண்களைத் துடைத்தவாறே, “இல்ல சார். அவன் என் தங்கச்சி மகன்” என்றார். கண்களிலும், முகத்திலும் சோகம்.

“ஓ, ஏன், அவங்க வரலையா? வேலைக்குப் போயிருக்காங்களா?”

“இல்ல சார்…….” தயக்கமாக பதில் வந்தது. “அவங்க இறந்துட்டாங்க”.

ஒரு நிமிடம் ஒன்றும் தோன்றவில்லை. அந்தப் பையனைப் பார்த்தேன்; என்னைப் பார்த்து சிரித்தான்.

“இவன் பொறக்கும்போதே, என் தங்கச்சிக்கு கால் வீக்கம், மஞ்சக் காமாலை எல்லாம் இருந்தது. பிரசவம் போது, இவனைப் பெத்துப் போட்டுட்டு, அவ இறந்துட்டா..”

“அவன் அப்பா இல்லையா?”

“இருக்காருங்க. ஆனா எங்க கூட இல்லே. என் தங்கச்சி இறந்த பிறகு, அவரு வேற கல்யாணம் கட்டிக்கிட்டாருங்க. இவனை எங்க கவனிக்கப் போறாருன்னு, நாங்க சண்டை போட்டு எங்களோட கூட்டி வந்துட்டோம். அவருக்கு இப்பொ ரெண்டு பசங்க. எப்போவாவது வருசத்துல ஒரு தடவை வந்து இவனப் பார்த்துட்டுப் போவாரு, அவ்வளவுதான்” வாழ்க்கையின் சோகங்களையும், துக்கங்களையும் மிகவும் சாதாரணமாக ஆனால் கனத்த இதயத்துடன் தாங்கிக் கொள்ளும் இந்தப் பெண்மணியைப் பார்த்து வியந்தேன்.

“உங்களுக்குப் பசங்க இல்லையா?”

“இரண்டு பசங்க இருக்காங்க சார். இவனை மாதிரியே ஸ்கூல்ல படிக்கிறாங்க”

“உங்க வீட்டுக்காரர் என்ன செய்யறாரு?”

ஒரு நிமிடம் நிதானித்து, மெதுவாகச் சொன்னார். “அவரு இல்லே சார். பீடி, பொகையில… கேன்சர்ல இறந்துட்டார் சார்”.

தூக்கிவாரிப் போட்டது.

“எங்கம்மாவும், அப்பாவும் கூட இருக்காங்க சார். அதுதான் கொஞ்சம் தெகிரியமாவும், ஆறுதலாவும் இருக்குது சார்”.

பேச்சை மாற்ற, அவனிடம் கேட்டேன். “நல்லா படிடா. என்ன படிக்க விருப்பம்? என்ன வேலை பிடிக்கும்?”

“ஆர்மில சேரப் போறேன் சார்” என்றான்.

“ரொம்ப கஷ்டமான வேலையாச்சேடா. குளிர்லயும், பனியிலயும் எப்பவும் கவனமா இருக்கணுமேடா” என்றேன்.

“தெரியும் சார். எனக்குப் பிடிக்கும் சார். ராணுவம்தான் சார் முக்கியம். மக்களைக் காப்பாத்தறங்கல்ல?” என்றான்.

எழுந்து, வாரியணைத்துக் கொண்டேன். தேசப் பற்றும், தியாகமும், நெஞ்சுறுதியும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை எண்ணிப் பெருமிதம் கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன், குட்டிப்பையன் ஒருவன் இதே மாதிரி ராணுவத்தில் சேரப் போகிறேன் என்று சொன்னது நினைவிற்கு வந்தது. எதிர்காலத்திலும் வலிமையான பாரதம் என் கண்ணில் தெரிந்தது.

மருந்துகள், மாத்திரைகள், டெஸ்டுகள் எல்லாம் சொல்லி, வாழ்த்தி அனுப்பினேன்.

முகத்திலிருந்து மாஸ்க் ஒரு வினாடி நழுவ, அந்தப் பெண்மணியை அடையாளம் கண்டுகொண்டேன்.

“நீங்க, அந்த சேட்டு வீட்ல, பாட்டிய பார்த்துகிட்ட ‘டே டைம்’ கேர் டேக்கர் இல்லே?“ என்றேன்.

“ஆமாம் சார். நீங்க விஸிட் வருவீங்களே சார். அவங்களைக் கேட்டுதான் இங்க உங்களைப் பார்க்க வந்தேன் சார்.”

“அந்தப் பாட்டிதான் இறந்துட்டாங்களேம்மா?”

“ஆமாம் சார். இப்பொ வேற ஒரு பாட்டி 95 வயசு. வியாதி ஒண்ணும் இல்லே. ஓல்ட் ஏஜ் தான். பகல்ல பார்த்துக்கறேன் சார். மூணு புள்ளைங்க படிக்கணுமில்லே சார்?” என்றவரைப் பார்த்து அனிச்சையாகக் கை கூப்பினேன்.

வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். இருக்கிறது!