வாலிட்டி 69: கலைஞர் பேனா – சில தகவல்கள்/தளவாய் சுந்தரம்

கலைஞர் கருணாநிதி ஒரு அதிதீவிர பேனா காதலர். சென்னை பாரிமுனை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உயர் நீதிமன்றம் எதிரே உள்ள ஜெம் & கோ பேனா கடை, கலைஞர் வழக்கமாக பேனா வாங்கும் இரண்டு கடைகளில் ஒன்று. இன்னொரு கடை, மயிலாப்பூரில் உள்ள தாஜ் பென்ஸ்.

திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆரம்ப காலத்தில் இருந்து 1990கள் வரை ‘வாலிட்டி 69’ (Wality 69) என்ற வகை மாடல் பேனாவைத்தான் கலைஞர் பயன்படுத்தினார். ‘வாலிட்டி 69’ வகை மாடல் பேனாதான் தற்போது கலைஞர் நினைவாக அமைக்கப்படவும் உள்ளது. மும்பையில் இருக்கும் பழமையான ஏர்மெயில் பேனா கம்பெனியின் தயாரிப்பு இது. 1951இல் இந்த கம்பெனி தொடங்கப்பட்டது.

‘வாலிட்டி 69’ மாடல் பேனாவின் மேல்மூடி மட்டும் பல நிறங்களில் வரும். கீழ்ப் பகுதி, எவ்வளவு மை உள்ளது என்பதை பார்க்கும் வகையில் கண்ணாடி மாதிரி டிரான்ஸ்பேரன்டாக இருக்கும். இந்த பேனாவின் நிப் முனையில் சிறிய அளவு இரிடியம் இருக்கும். 15 செமீ நீளம் உடையது, 21.7 கிராம் எடை கொண்டது.

‘வாலிட்டி 69’ பேனாவில் எழுதுவதை தான் எவ்வளவு விரும்பினார் என்பதை கலைஞர் நண்பர்கள் பலரிடம் கூறியுள்ளார். அதை அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். கலைஞர் தெளிவுடன் எழுதக்கூடியவர்; தனது ஸ்கிரிப்ட் எந்த மாற்றமும் அடித்தல் திருத்தலும் இல்லாமல் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவாராம். இந்த பேனாவில் எழுதும்போது தனது எண்ணங்கள் இயல்பாக ஒரு புதிய மனதுடன் பாயும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

1990களில் பேனாவைப் பிடிப்பது கடினமாக இருந்ததால் கலைஞர் கணினியில் தட்டச்சு செய்ய கற்றுக்கொள்ள முயன்றார். ஆனால், அதில் அவர் எதிர்பார்த்த வேகத்தை அடைய முடியவில்லை. எனவே, தொடர்ந்து ‘வாலிட்டி 69’ மாடல் பேனாவையே பயன்படுத்தி வந்தார். மிக பிற்காலத்தில் ‘பால்-பாயின்ட்’ பேனாக்களை தேர்ந்தெடுத்தார்.

கலைஞர் தினமும் காலையில் எழுந்ததும் முதலில் தேடுவது பேனாவைத்தான். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001 ஜூன் 30 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டபோது அத்தனை களேபரங்களுக்கும் நடுவே முதலில் பேனாவைத்தான் எடுத்து பாக்கெட்டில் சொருகிக் கொண்டிருக்கிறார். கலைஞர் கைது புகைப்படங்களில் அவரது சட்டைப்பையில் இந்த உருளையான பேனா அழுத்தமாக அமர்ந்திருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பதவியேற்ற முதல்நாள் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அப்போது அவர் பயன்படுத்திய பேனா கலைஞர் பயன்படுத்திய ‘வாலிட்டி 69T’ மாடல் பேனா என்பது குறிப்பிடத்தக்கது.