ராஜேஷ்குமார் ஒரு செய்தியை …

ராஜேஷ்குமார் ஒரு செய்தியை நக்கீரனில் படிக்கிறார். அதிலே கோவைக்கு அருகில் ஒரு இடத்தில் நூறு, நூற்றைம்பது கல்லூரி மாணவ, மாணவியர் இரவில் ஒன்று கூடுகிறார்கள். சாப்பிடுகிறார்கள். போதையில் இருக்கிறார்கள் என்று போலீஸ் கைது செய்யப் போனால் அங்கு அவர்கள் மது குடிக்கவில்லை, போதை வஸ்து உபயோகப் படுத்தவில்லை. எந்தத் தவறுக்குமான அடையாளமே இல்லை. ஆனால் ஒருவித போதையில் இருக்கிறார்கள்.

ஒருநாள் ராஜேஷ்குமார் வீட்டின் முன் ஒருபோலீஸ் ஜீப் வந்து நிற்கிறது. உள்ளே வந்த போலீஸ் “இங்கே எழுத்தாளர் ராஜேஷ்குமார் யார்?” என்று கேட்கிறார். அப்போது லுங்கி, பனியனுடன் எழுதிக் கொண்டிருந்த ராஜேஷ்குமார் “நான்தான்” என்கிறார். “போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்” என்று போலீஸ் சொல்லும் போது அதிகாரி வீட்டிற்குள் வருகிறார். நக்கீரன் செய்தியைக் குறிப்பிட்டு “இதை நீங்கள் கண்டு பிடிக்கலாமே?” என்று அந்த அதிகாரியை ராஜேஷ்குமார் கேட்கிறார். “இதை நாங்கள் கண்டு பிடித்துக் கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் இதை உங்கள் எழுத்தின் மூலம் கொண்டு வரலாம்” என்கிறார்.

ராஜேஷ்குமார் இணையத்தில் தேடி ‘பைனாரல் மியூசிக்’ என்று ஒன்று இருப்பதைக் கண்டு பிடிக்கிறார். அந்த இசை மனநலம் சரியில்லாதவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் கேட்க வைத்து அவர்களை குணப்படுத்த உபயோகிக்கப்படுத்துவது. அதாவது அந்த இசை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கேட்கும்படி செட் செய்து வைத்து விட்டால் அவர்கள் 12 மணிநேரம் கூட போதையில் இருக்கலாம். அதாவது இசையினால் போதை என்பதைக் கண்டு பிடித்து அதை நாவலாக எழுதினார்.

திரை உலகம் எனக்கு இரண்டாம் பட்சம் என்று கூறும் ராஜேஷ்குமார் பட்டுக்கோட்டை பிரபாகரைச் சந்திக்கும் போது, அவர் என்ன செய்கிறார், என்ன நடக்கிறது என்று எல்லாவற்றையும் என்னிடம் கொட்டி விடுவார் என்கிறார். அவரது கதையில் வந்த “இமைக்கா நொடிகள்” படத்தை தான் கண் இமைக்காமல் பார்த்ததாகவும் அந்தப்படம் அவரது கதைக்காகவே ஓடியது என்றும் கூறினார். மேலும் சுரேஷ், சுபா, இந்திரா சௌந்தரராஜன் அவர்களைச் சந்திக்கும்போதும் அவர்களும் சில செய்திகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் கூறினார்.

எந்த சினிமாக்காரர் அழைத்தாலும் அவர்களை கோவையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சொர்க்கம் ஓட்டலுக்கு வரச்சொல்லி அங்கு அவர்களுடன் காலை 10 மணி முதல் 1மணி வரையிலும், மாலை 3மணி முதல் 6மணி வரையிலும் டிஸ்கஷன் செய்வார். மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்து விடுவார். எக்காரணம் கொண்டும் எழுத்தை அவர் என்றுமே நிறுத்தியதில்லை.

நன்றி: ஸ்ருதி டிவி

முகநூலில்: ஆர்.கந்தசாமி