
மகனின் கல்யாண பத்திரிகை கொடுக்கப் போயிருந்தேன் அவள் வீட்டுக்கு. அதற்கு மட்டும் தானா… காலம் கடந்து போனாலும், அந்தக் காலம் இப்போது நினைத்தாலும் கடக்க முடியாமல் நிலைத்து நிற்க வைத்து விடுவது தானே…
உள்ளிருப்பவளின் மருமகள் வந்து கதவைத் திறந்துவிட்டு உள்பக்கம் திரும்பி, “அத்தை..உங்களைப் பார்க்கத் தான் யாரோ…” என்று அரை வாக்கியத்தில் முழு விஷயம் சொல்லி முடித்தாள்.
கண்ணம்மா ஹாலில் தான் அமர்ந்து இருந்தாள். அந்த முகத்தைப் பார்க்கவும் என் கண்களில் நீர் திரண்டு விட்டது…. அண்மையில் தான் கணவனைப் பறிகொடுத்திருந்தாள். எங்கோ தொலைதூர மாநிலத்தின் காடுகளில் அலைந்து கொண்டிருப்பவனுக்கு இந்தச் செய்தி வரத்தான் செய்தது. அப்போது ஓர் இளம் தாவரத்தின் அருகே நின்று கொண்டிருந்தேன். அந்தச் செடி, காய்ப்பு காய்த்த மரத்தின் அருகே துளிர் விட்டிருந்தது. மனிதர்கள் முதுமை பெற்றுக் கொண்டே சென்றாலும், அவரகளது நினைவுகள் பசுந்துளிராக அவர்களை எப்போதும் சூழ்ந்து காற்றில் ஆடிக்கொண்டிருப்பது போலவே தோன்றும். கண்ணம்மா என் நெஞ்சில் ஒரு இளம் துளிர் தான் அப்போதும் இப்போதும் எப்போதும். மகன் திருமண வேலைகளுக்காகச் சொந்தவூர் திரும்பி இருந்தேன்.

“ஸாரி …கண்ணம்மா…கேள்விப்பட்டேன் ” என்று நிறுத்தினேன். கையில் திருமண பத்திரிகை. அதிகம் துயரில் ஆழ்ந்துவிட முடியாது, சம்பிரதாயம் பார்க்காதவன் என்றாலும் சமூகத்தைப் பார்க்க வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் வரிசை கிரமமாக நகரும் வாழ்க்கையில் அவளுக்கு அண்மையில் ஏற்பட்டிருக்கும் வாழ்வின் அதிர்ச்சி நிகழ்வை எப்படிக் கடந்துபோய் அடுத்த விஷயத்தைத் தொட முடியும்.
கேள்விப்பட்டேன் என்ற அந்த வாக்கியம் இப்போது என்னையும் தொல்லை செய்தது. இப்போது சொல்லப்பட்டது என்றாலும், அது பின் தேதியிட்டுப் பல ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டிருக்க வேண்டியது தானே…. அவள் ஆரம்பக் கல்வியிலேயே பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தாய் மாமனுக்குக் கட்டி வைக்கப்பட்டது. இப்போது அவனைப் பறிகொடுத்திருப்பது, எல்லாமே கேள்விப்பட்டது தானே… எதற்கான வருத்தம் என்னிடம் இருந்து இப்போது வெளிப்பட்டிருப்பது…
அந்தக் கனமான சூழல் நீடிக்கவில்லை. அருகே ஒரு சிறுவன் வந்து நின்றான். குழந்தைகள் எப்போதுமே இறுக்கத்தை உடைத்து விடுபவர்கள். பெரியவர்களது மலையளவு சோகத்தை இடது கையால் தூக்கி ப்பூ… என்று காற்றில் ஊதிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்… அங்கே அந்த வாண்டு வந்து நின்றது அதற்காகத் தான். கண்ணம்மாவின் பேரன். களையான முகம். கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க என்றே துடிக்கும் பெரிய கண்கள். கண்ணம்மாவின் சாயல்.
மருமகள் உள்ளே சென்றாள், அநேகமாக காஃபி தயாரித்துக் கொண்டு வர இருக்கக் கூடும். இப்போது கண்ணம்மா, கல்யாண பத்திரிகையோடு நான், அந்தப் பேரன். எங்கள் உரையாடல் எந்தச் சொல்லில் தொடங்க என்று காத்திருந்தது. ஆனால், குழந்தைகளுக்கு நூற்றுக் கணக்கான சொற்கள் சேமிப்பில் இருக்கிறது.
“பாட்டி…இது யாரு?” என்று கேட்டு விட்டான்.
என்ன சொல்லப் போகிறாள் கண்ணம்மா……. என்ன சொல்ல இருக்கிறது. நாங்கள் ஒன்றும் முன்னாள் காதலர்கள் அல்ல. ஆனால் என்ன உறவு இருவருக்கும் இடையே ? நட்பு என்ற கணக்கிலும் சேராது.
மூன்றாம் வகுப்பில் கண்ணம்மா எதிர்ப்புற வரிசையில் மூன்றாவதாக அமர்ந்திருப்பாள், மற்ற சிறுமிகளோடு. இரட்டை சடை, அன்றாடம் வெள்ளை வெளேர் என்று ஒரு பூ. நெற்றியில் திருத்தமாக இருக்கும் அவளது பொட்டு. மென்மையான நடை, சிலேட்டில் எழுதும்போது அதன் இதயத்தைக் கீறிவிடக் கூடாத எச்சரிக்கையோடு அப்படி அன்போடு அணைத்துக்கொண்டு எழுதுவாள்.
மனப்பாடக் கணக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஆசிரியர் சொல்வார், கேட்பார். எல்லோரும் சட்டென்று பலகையைக் கையில் எடுத்து விடையை எழுதி விட்டுப் பலகையைக் கீழே கவிழ்த்து விட வேண்டும். என் பலகையை அவளும், அவளது பலகையை நானும் எடுத்துத் திருத்தி மதிப்பெண் போட ஒரு வாய்ப்பு வந்தது. அவள் விடை தவறு, ஆனால் சட்டென்று மாற்றி எழுதி முழு மதிப்பெண் போட்டு வைத்து விட்டேன். அப்புறம் அவளது கண்களில் தெறித்த மின்னலுக்கு நூறு தடவை விடையை மாற்றிக் காப்பாற்றலாம் என்று பட்டது.
ஒரு வில்லன் முளைப்பாரா, ஆசிரியர் உருவில்….ஏதோ பிரச்சனை….இப்போது என்னவென்று கூட நினைவில் இல்லை. அந்த மனிதர் அந்தச் சின்னஞ் சிறுமியின் கன்னம் சிவக்கக் கிள்ளி, காதைத் திருகி, வெளியே போ என்று விரட்டிய காட்சி நேற்று நடந்தது போல் இருக்கிறது. எத்தனை அவமதிப்பு சுமந்து, கண்களில் நீர் தளும்பி, நடை தளர்ந்து வெளியேறிப் போனாள் கண்ணம்மா. மொத்த வகுப்பும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தது.
பின்னர் ஒரு போதும் கண்ணம்மா பள்ளிக்கு வரவில்லை. அவளை எப்படியாவது பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவள் வீட்டில் யாருக்கும் தோன்றவுமில்லை. கண்ணம்மா சண்டை போட்டுப் பார்த்தாளா, சமாதானம் ஆகி விட்டாளா என்று எந்தச் செய்தியும் தெரியவில்லை.
அவள் வீட்டில் ஜன்னல் இருந்தது. அதில் கம்பிகள் இருந்தன. அந்தத் தெருப்பக்கம் போகும்போது கண்கள் அந்த ஜன்னல் பக்கம் திரும்பும். அதிர்ஷ்டம் இருந்த நாட்களில் அவள் அங்கே கன்னத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கப் பார்த்துக் கொண்டு செல்ல முடியும். அவளும் பார்க்கத் தானே செய்தாள். நான் கடந்து போகாத நாளில் கூட அவள் அங்கே காத்திருந்து பாராது போயிருக்கக் கூடும். ஆனால், அந்த வயதின் ஈர்ப்பை எப்படி காதலில் சேர்க்க! அவளுக்கும் வயது ஏறிக்கொண்டிருந்தது.
இரண்டாவது வில்லன், அவளுடைய தாய் மாமன். அவனுக்கும் அதிக வயதில்லை அப்போது. ஆனால், கண்ணம்மாவின் அப்பா முடிவெடுத்திருந்தார். அவனைப் பிடித்துக் கண்ணம்மாவை அவனுக்குக் கட்டி வைத்துவிட்டார். அவன் அயலூர்க்காரன். சமூக வழக்கப்படி, கல்யாணம் முடித்த பெண்ணை அவனூருக்கு அழைத்துப் போனான். ஆனால், எனக்கோ அவன் அவளைக் கடத்திக் கொண்டு போனது மாதிரி பொங்கிக் கொண்டிருந்தது. அதற்கு அடுத்த வாரம், உள்ளூர் டூரிங் டாக்கீசில் பார்த்த படத்தில் எம் ஜி ஆர் வில்லனைத் துரத்திக் கொண்டுபோய்க் கத்தி சண்டை போட்டுக் கதாநாயகியைக் காப்பாற்றி அழைத்து வந்ததைப் பார்க்கவும், அடடா, நாம் ஏமாந்து விட்டு விட்டோமே என்று கொஞ்ச நாள் உறுத்திக் கொண்டிருந்தது.
அதெல்லாம் அந்தக் காலம். வருடங்கள் எத்தனை உருண்டோடி விட்டன. மணியக்காரர் மனைவி அவள். இப்போது அவரும் இல்லை. இந்த ஓட்டங்கள் எனக்குள், அவளது மனத்திற்குள் என்ன ஓடிக் கொண்டிருந்தது என்பதை யார் கணிக்க முடியும்….
பேரன் திரும்பக் கேட்டான், “பாட்டி, உங்களைத் தான்…இவரு யாரு?”
நான் சிரித்துக் கொண்டே குறுக்கிட்டேன்,” தம்பி உங்க பாட்டியோட கிளாஸ் மேட்!”
அவன் விழிகள் வியப்பில் இன்னும் அகன்று விரிந்தன, “ஆனா….பாட்டி நீங்க ஸ்கூலே போனதில்லேன்னு சொன்னாங்களே டாடி?”
கண்ணம்மா இப்போது பெரிதாக சிரித்துக் கொண்டே, “மூணாம் கிளாஸ் படிக்கும்போதே உனக்கு எல்லாம் நிறைய தெரிஞ்சிருக்கு… எதுக்கு ஸ்கூலுக்கு வீணா வர்றேன்னு ஒரு டீச்சர் அடிச்சு விரட்டிட்டாரு டா கண்ணா!” என்றாள்.
“என்ன பாட்டி டபாய்க்கிறீங்க” என்று அவனும் இப்போது சிரிப்பில் சேர்ந்து கொண்டான்.
நானும் இணைந்தபடி, “சுட்டிப் பயலே, மூணாவது படிக்கும்போது என் வகுப்புத் தோழிடா உங்க பாட்டி…. எப்படி அழகா இருப்பாங்க தெரியுமா, சினிமா ஸ்டார் மீனா டிவியில பார்த்திருக்கியா….அந்த மீனா மாதிரி இருப்பாங்க உங்க பாட்டி” என்றேன்.
“அப்படியா பாட்டி ….நீங்க அவ்ளோ அழகா இருப்பீங்களா?” என்று கேட்டான்.
அதற்குள் மருமகள் காஃபியைக் கொண்டு வைத்து, “அங்கிள் சாப்பிடுங்க…சுகர் குறைவாகத் தான் போட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே போனவள், சட்டென்று மூன்று நிமிடங்களில் ஒரு புகைப்படத் தொகுப்பை எடுத்து வந்து பிரித்து மகனிடம் நீட்டினாள்: “டேய் உங்க பாட்டி மேரேஜ் ஆல்பம் டா….எப்படி டால் அடிக்கிறாங்க பாரு” என்றாள்.
பழைய காலத்து கனத்த ஆல்பத்தை மெல்லக் கைகளில் விரித்து டிரேஸ் பேப்பர் நகர்த்தி கெட்டியான முதல் பக்கத்தை மெதுவாக அவன் திருப்ப, நானும் எட்டிப் பார்த்தேன்.
“ஆமா…ஆமா… பாட்டி நீங்க அசப்பில் மீனா மாதிரி தான் இருக்கீங்க….அ ப் பா…..எவ்ளோ அழகு” என்றான்.
நேரம் கடந்து கொண்டிருந்தது.
“கண்ணம்மா, என் பையனோட கல்யாணம்….அவசியம் வந்துரணும்” என்று அந்த நொடியில் சட்டென்று அழைப்பிதழை அவள் கையில் சேர்த்தேன். வாங்கிப் பிரித்து வாசித்து வேகமாக மடித்து மருமகளிடம் நீட்டிவிட்டு என்னைப் பார்த்துப் புன்னகையோடு, தேங்க்ஸ் என்றவள் சட்டென்று கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.
அதில் கண்ணீர் துளிர்த்ததா என்று பார்க்க முடியவில்லை. என் கண்கள் அப்போது தளும்பிக் கொண்டிருந்தன.

தலைப்பும் கதையும் சிறப்பு😍
தலைப்பு மிகவும் அருமை 😍
adolescent affection … இத்தனை அழகானது….
அருமை.
பயந்துகொண்டே படித்தேன்.
எங்கே குழந்தைக்கு இவர் பெயர்தான் என்று முடித்து விடுவீர்களோ
என்று. நல்லவேளை .
உணர்வின் வெளிப்பாடோடு முடித்ததது. சிறப்பு.
கதையை படித்து கருத்து பதிவு செய்தவர்கள் அனைவருமே சிறுகதை எழுத்தாளர்கள் அல்லது சிறந்த கவிதைகள் படைப்பவர்கள்.
துப்பறியும் சங்கர் லால் கதைகள் மாதிரி புதுப்புது முடிவுகளை ஊகிப்பவர்கள். அப்படி என்றால் கதையைப் பற்றி பதிவு செய்ய நிறைய உள்ளது. சிறந்த உணர்வு பூர்வமான ஒன்று. வாழ்த்துக்கள்.
தொடரட்டும்.
என்ன சொல்ல? ஏதோ ஒருவகையில் நம்மைப்போல, எல்லோருமே பாதிக்கப்பட்டிருப்பார்களோ என்ற உணர்வு. அறியா பருவத்து விரசமில்லா உணர்வுகள். மிகச்சிறப்பு.
வாழ்த்துக்கள் தோழர்.
This is affection between the two old students. Each understand others inner feeling. Can be called soul mate.
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் என்று தெரிகிறது.
ஒரு சில நினைவுகள் காலம் கடந்து நம் நினைவில் வந்து கொண்டே இருக்கும். லேசான மயில் இறகு போல, இளையராஜாவின் ஊடுருவும் மெல்லிய இசை போல, மனதை வருடும் உணர்வை அழகாக பிரதிபலிக்கும் கதை. வாழ்த்துக்கள் வேணு.
Emotions were silently described ..good