தேரடித்தெரு/ஆர்க்கே

வடம் பிடித்திழுத்தோரின்
பக்திப் பெருவெள்ள
வியர்வைத் துளிகள்.

இறை வாகனமுன்
கருடன் அனுமனென
அலங்கார வடிவு பொம்மைதாங்கி
மூங்கில் கூடுகள்
நீண்டு கிழித்த
மண் கீறல்கள்.

திருவீதியுலாச் சாமி முன்னே
அணிவகுத் தேகும்
யானை, குதிரைகளின்
குளம்படித் தடங்கள்.

எக்காளம், மேளதாளம்,
இன்னபிற
இசைக்கருவி
இறை துதித்து வெளி தந்த
ஞான இசைச் சிதர்கள்.

வாசல்தோறும்
அரிசிமா விரித்த
கோலப் பெருவிரிப்பு

நான்மறையின்
பின்தொடர்வு கோஷங்களின்
குரல் பதிவு.

ஓதுவாரின்
தேவார திருவாசக
தேன்குரல் பாடல்களின்
வீரியங்கள்.

ஜோதி வடிவான
தெய்வக் குறியீட்டின்
தீப்பந்த நெய்த் துளிகள்

தந்தை
தன்தோள் உயரங்கூட்டி
சாமி பார்த்து கன்னந்தட்டி
ஊர்வலம் வியக்கும்
சிறுவர் சிறுமியர்தம்
கால் தடங்கள்.

மின்கம்பி முன் விட்டு
பின்தொடரும் ஜெனரேட்டர் வண்டியின்
டயரடையாள அச்சுகள்.

மனம் முழுக்க
அன்பான்மீகம்
நிறைத்தபடி சுவாசிக்கும்
சகமனிதச் சமுதாயம் கமழ்ந்திரு
நல்லெண்ண பாதச் சுவடுகள்.

பக்திஉயர் மனிதர்களின்
பரம்பரை அறங்காப்பின்

இஷ்டச் சுமப்புகளால்
உற்சவராய் வெளிப்போந்து

பட்டணப்பிரவேசம் கண்டு
கருவறைக்குத் தான் திரும்பும்

கால் படாத தெய்வமதன்
அருளாசி அபரிமிதமாய்

நிலை கொண்ட தேர் போலே
பிரம்மாண்டமாய் விரவி நிற்கும்

திருவிழாக்காண் பெருமைகொண்ட
விகசிப்பாய் பூரித்து நிற்கும்–
அன்று மட்டும் அரசாளும்
எங்க ஊர் தேரடித்தெரு.

One Comment on “தேரடித்தெரு/ஆர்க்கே”

Comments are closed.