யோகி இன்றொரு சேதி -117/விசிறி சங்கர்


O
யோகி சில நேரங்களில் தனது இடத்தில் சிலரை அமரவைத்து அழகு பார்த்தவர்.
O
ஒரு முறை குமரி மாவட்டம் ஸ்ரீ ராம்ஜி ஆஸ்ரமம் சார்பாக யோகி அன்பர்கள் மாதாஜி ஓம் பிரகாஷ் யோகினி தலைமையில் யோகியை தரிசிக்க திருவண்ணாமமலை சென்றிருந்தனர். அந்த சந்திப்பு திருவூடல்தெரு நாடார் சத்திரத்தில் நடந்தது.
O
அப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட அன்பர்கள் குழுமி இருந்தனர். யோகி நடுநாயகமாக அமர்ந்திருக்க, பஜனைப் பாடல்கள் அமர்க்களப்பட்டன.
O
அந்தக் குழுவில் கன்னியாகுமாரி அருகே அமைந்துள்ள மருந்துவாழ் மலையில், ஒரு குகையில் வசிக்கும் பூஜ்யஸ்ரீ மாதவ சுவாமிகள் என்னும் தபோதனரும் சென்றிருந்தார்.
O
நிகழ்ச்சியின் நிறைவில் யோகி மாதவ சுவாமிகளை தமது இடத்தில் அமர வைத்து, அவருக்கு மாலை அணிவித்து,
தமது விசிறியையும் சிரட்டையும் அவர் கையில் கொடுத்து வந்திருப்போர் அனைவரையும் ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைவரையும் மாதவ சுவாமிகளை வணங்கி ஆசி பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.
O
பின்னாளில் திருவண்ணாமலை ஆஸ்ரமம் கட்டப்பட்ட பிறகு , Grace ஹாலில் யோகி தரிசனம் கொடுத்து வந்த நாட்களில், ஒருமுறை யோகி, அன்று வருகை தந்த அமெரிக்க யோகி அன்பர் மறைந்த திரு லீ லோஸோவிக், பிரரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு கிருஷ்ணா மற்றும் சில அன்பர்களை தமது இடத்தில் அமர வைத்துவிட்டு விடைபெற்றார். அவர்களை சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
O
அன்று குழுமியிருந்த அன்பர்கள் பலரும் அந்த வெளிநாட்டு அன்பர்களை வணங்கிச் சென்றனர்.
O
யோகியின் செயல்கள் சில நேரங்களில் புரிய முடியாத புதிராக இருக்கும்.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா