ரயில் பயணங்களில் /மாதவ பூவராக மூர்த்தி

.

“ஏண்டா கார்த்திக் டிக்கெட் அனுப்புடா” என்றாள் பிருந்தா போனை பார்த்தபடியே.
“அப்பவேஅனுப்பியாச்சு. குரூப்ல பாரு” என்றான் கார்த்திக்.
” நன்னா பாத்துட்டேன். மெட்ராஸ்லேர்ந்து வர டிக்கெட்தான் இருக்கு. இங்கேர்ந்து போற டிக்கெட் இல்லை. புக் பண்ணிட்டியோண்ணோ?”

“இரண்டும் சேர்த்துதான் பண்ணினேன்.”

“வரலைடா”
“சரி அனுப்பறேன்”. அனுப்பினான்.

“வந்துடுத்து. நீல்கிரி எக்ஸ்பிரஸ் 10.25 .S2, 49 52
லோயர் பெர்த்.நல்ல வேளை, மிடில் பெர்த்துன்னா கூட எங்களுக்கு சிரமம்.”

“ஒரு மாசம் முன்னாடியே பண்ணிட்டேன் சீனியர் சிட்டிசன் லோயர் பெர்த் கோட்டா கிடைக்காம என்ன?”

“சரி எத்தனை மணிக்கு கிளம்பனும்?” “ஒன்பதரைக்குகிளம்பினா போதும் கார்ல தானே போறோம்”

கோயம்புத்தூர் வந்து பதினைந்து நாட்கள் ஆகிறது. கார்த்திக், லட்சுமி விஷ்வாவுடன் பொழுது போனதே தெரியவில்லை டாக்டரிடம் காட்டி, நாலைந்து ஹோட்டல்களில் சாப்பிட்டு கோயம்புத்தூர் விஜயம் சிறப்பாக முடிந்தது. விஷ்வா தூங்கப் போகும் முன், “பை மூர்த்தி தாத்தா, பை பிந்துஸ்” என்று சொல்லிவிட்டு போனான் நாங்கள் புறப்பட்டோம் கார்த்திக் பிரண்ட் சபரியும் வந்தான் 10 02 ஸ்டேஷன் வந்து விட்டோம் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம்.

நீலகிரி எக்ஸ்பிரஸ் மூன்றாம் பிளாட்பாரத்தில் வருவதாக போர்டு சொன்னது பிருந்தா லிஃப்ட்ல போயிடுவோம் என்று போனோம். ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் லிப்ட் ஒர்க் பண்ண வில்லை. எதிர்ப்புறம் படியில் ஏறி பிளாட்பார்ம் வந்தோம் நீலகிரி எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. நல்ல வேலையாக கோச் போக பேட்டரி கார் கிடைத்தது. அவர் கொண்டு போய் எஸ்2 வில் நிறுத்தினார். “பார்த்து போங்கய்யா” என்றார் 10 12. ட்ரெயினில் ஏறி எங்கள் பெர்த்துக்கு போனோம் .ஒரே கூட்டமாக இருந்தது‌. நிறைய குழந்தைகள் லக்கேஜ்களை வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டோம்.

அங்கு வந்தவர் எதிர் சீட்டில் இருப்பவர்களை பார்த்து “உங்க பெர்த் என்ன?என்றார்.
அவர்கள், 50, 51, 53& 54 நாலு பெர்த்” என்றூர்கள்.
எங்களைப் பார்த்து ” ஐயா உங்களுக்கு?” என்றார்.

நான் “49& 52 லோயர் பெர்த்” என்றேன்.
அவர் மறுபடியும் தன் டிக்கெட்டை பார்த்து விட்டு “எனக்கும் அதேதான்” என்றார்.
பிருந்தா, “ஒருவேளை சேரனா இருக்கப்போறது” என்றாள்.
“இல்லம்மா நீல்கிரீஸ்தான்”
“அதெப்படி ஒரே பெர்த் துக்கு இரண்டு பேருக்கு கொடுப்பா? நீங்க கார்த்திக்கு போன் பண்ணி கேளுங்கோ” என்றாள்.

நான் தொடர்பு கொண்டேன்.அவன் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டருப்பதாக ஒரு பெண் சொன்னாள்.பிறகு அவனே பண்ணினான். பிருந்தா என்னிடமிருந்து பிடுங்கி “நம்ம கோச் பெர்த் பாத்து சொல்லு”
அவன் அதையே சொன்னான்.
பிருந்தா அவரிடம் “எங்க பெர்த் இதுதான்”என்றாள்.

சைட் லோயர் பெர்த்காரர் சமாதானம் செய்ய வந்து இரண்டு போனையும் வாங்கி நன்கு ஆராய்ந்து “ஒரே நம்பர் தான் ஏதோ தப்பாயிருக்கு” என்றார்.
கொஞ்சம் யோசித்து “ஒரு வேளை Upgrade ஆகியிருக்கும்.”
பிருந்தா,” அப்படி ஆகியிருந்தா நீங்க போயிடுங்கோ” என்றாள் அவர், “அம்மா சின்ன குழந்தைங்க, நிறைய லக்கேஜ் நாங்க போறது கஷ்டம்.
” நாங்க வயசானவங்க மணிவேற ஆயிடுத்து இறங்கி ஏற முடியாது” என்றாள் பிருந்தா.

இதற்குள் சைடு லோயர் காரர் “ஆமாம்மா திருப்பூரில் போய் இறங்கி ஏறுங்க” என்றார்

“நீங்க மறுபடியும் கார்த்திக்கு போன் பண்ணுங்க.” என்றாள். மறுபடியும் பண்ணினதில்

அவன்,” ஆமாம்பா உங்களுக்கு தான் அப்கிரேடாயிருக்கு b4, 47& 50 என்றான்.
நான் அவரை பரிதாபமாக பார்த்தேன்.
அவர் “வண்டிஎடுத்துட்டாங்க நான் போய் எதுக்கும் இது வழியாக போலாமா என்று பாத்துட்டு வரேன்” என்று போனார். சிறிது நேரம் கழித்து வந்து, “வாங்கய்யா வழி இருக்கு, நான் எடுத்துட்டு வரேன் லக்கேஜ் என்று எங்களுடன் வந்தார். S .1தாண்டி ஏசி கோச் B5 வை தாண்டி B4 இருந்தது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு போய் உட்கார்ந்தோம் ஒன்று சைடு லோயர் இன்னொன்று மிடில் பரத் நான் சைடு லோயர் எடுத்துக் கொண்டேன் பிருந்தா எனக்கு அடுத்த Bayயில் இருந்த பெண்மணி இடம் கேட்டு லோயர் பெர்த்துக்கு மாற்றிக் கொண்டாள்.
TTE வந்து டிக்கெட் செக் பண்ணினவுடன் கம்பளி விரித்து படுத்து தூங்கினேன். ஒரே குளிர் புறப்படும் போது கார்த்திக், “ஸ்வெட்டர் எடுத்துக்கொண்டு போ என்றான்.
நான், மெட்ராஸ் தானே போறோம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் இப்பொழுது குளிருகிறது .
எப்படியோ தூங்கி விட்டேன்.
காலை வண்டி பெரம்பூர் வரும்போது லட்சுமி போன் பண்ணி, “என்ன அங்கிள் அப்கிரேட் ஆச்சா? ஜாலியா ஏசி போறேளா? என்றாள் “ஆமாம் “என்றேன் நடுக்கத்துடன்.

One Comment on “ரயில் பயணங்களில் /மாதவ பூவராக மூர்த்தி”

Comments are closed.