புதுமைப்பித்தன் பற்றி பிரபஞ்சன்

ஒரு ஓட்டலுக்குள் செல்கிறார் புதுமைப்பித்தன். ‘சர்வரிடம் என்ன உள்ளது?’ என்று கேட்கிறார். அவன் உடனே போர்டில் எழுதியுள்ள சொஜ்ஜியில் ஆரம்பித்து பஜ்ஜி வரையில் பன்னிரண்டு அயிட்டங்கள் உள்ளதாகச் சொல்கிறான். அதையெல்லாம் கேட்ட இவர் “ஒருகாபி கொண்டு வா” என்கிறார். இவர் இத்தனையைக் கேட்டு விட்டு காபி மட்டும் சொன்னதால் சர்வர் டென்ஷன் ஆகியிருப்பானோ? என்று அவனது முகத்தையே பார்க்கிறார். அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அடுத்து ஒருவர் வருகிறார்
அவரும் சர்வரிடம் “என்ன இருக்கிறது?” என்று கேட்கிறார். அவன் “சொஜ்ஜி முதல் பஜ்ஜி வரை பன்னிரண்டு அயிட்டங்கள் பெயரைச் சொல்கிறான். எல்லாம் கேட்ட அவர் “ஒரு டீ மட்டும் கொண்டு வா” என்கிறார். புதுமைப்பித்தன் இப்போதும் சர்வர் முகத்தைப் பார்க்கிறார். இப்போது கண்டிப்பாக அவன் டென்ஷன் ஆகி முகத்தோற்றம் மாறி வெறுப்பில் ஏதாவது சொல்லி விடுவான் என்று எதிர்பார்க்கிறார். அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. இயல்பாக எப்போதும் போல் ஒரே மாதிரி இருக்கின்றான். புதுமைப்பித்தன் அவனைப் பார்த்து “இவன் இயந்திரம் போல இயங்குகிறான். இவன் மனிதனா?” என்று மனதிற்குள் நினைக்கிறார்.

காபி குடித்த பின்னர் புதுமைப்பித்தன் பணம் செலுத்த கல்லாவை நோக்கிப் போகிறார். அங்கு அவர் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும்போது கர்சீப் அவருக்குத் தெரியாமல் கீழே விழுந்து விடுகிறது. அதைக் கவனிக்காது அவரும் நடக்கத் தொடங்கினார். அப்போது பின்னால் இருந்து ‘சார்’ என்று ஒரு குரல். திரும்பிப் பார்க்கிறார். முகத்தில் புன்னகையுடன் அந்த சர்வர் அவரிடம் “சார் இந்தக் கர்சீப் உங்களுடையதா?” என்று கேட்கிறான். அவன் முகத்தைப் பார்த்த புதுமைப்பித்தன் மனதிற்குள் சொல்கிறார்
“இவன் மனிதன்தான்”

முகநூலில் : ஆர்.கந்தசாமி