அழகிய சிங்கரின் அகநூல் நட்பு.! /ஆர்க்கே.!

ஆயிரம் சொல்ல இருக்கு-அவரைப் பற்றி.
ஆயிரம் கேட்க இருக்கு- அவரைப் பற்றிப்பிடித்து.
ஆயிரம் அறிவுரை இருக்கு-அவர்தர
எனக்காய்.
நேரடியாக பேசுவார் நேர்பட பேசுவார்
சமயங்களில் மனம் சுருங்கும்
அவரின் சில வார்த்தைகளால்.
கடின உழைப்பாளி.
விருட்ச வளர்த்தெடுப்பில் என்போன்றோரையும்
விழுதுகளாய் வளர்த்தெடுத்து
மென் மனது வைத்தபடி
கடும் பணிகள் முயலுபவர்.
சின்ன கோபம் செல்லச் சண்டை
இத்தனையும் ஊடாடும்
நட்பின் பயணத்தில்.
ஆனால்
ஒவ்வொரு நட்பூடலையும்
சரிசெய்யும்
முதல் பேச்சு
எப்போதும் அவரிடமிருந்துதான்
வரும்.
அவர் கேட்டழைத்து
அவர் இயக்கி
நான் நடித்த
குறும்படத்தை
அவர் என் நடிப்பை வியந்து
மனமாற பாராட்டிய நாட்கள்
கணக்கிலடங்கா.
இப்போதும் சொல்வார்.
முகநூலில் அவர் நட்பு எட்டாண்டாம்.
அறிமுகமும் அவர் நட்பும் எனக்கு
முப்பதாண்டிற்கு மேல்.
அட!
இப்போது கூட
இக் கவிதையை
அவர் பாராட்டுவார்.
ஆனால்..
“ரொம்ப நீளநீளமா கவிதை
எழுதறீங்க!” என்று
சிரித்தபடி.
நான் எப்படி என்பது
இருக்கட்டும் ஒரு புறம்.
அவர் அப்படித்தான்.
அதுதான் நன்னட்பின்
அழகிய சிங்கரெனும் சந்திரமௌலி.!

https://m.facebook.com/story.php?story_fbid=2221838724552253&id=100001784417520