அலுவல் முடிந்து திரும்பும் வழியில் சென்று பார்த்த சினிமா ஆட்டம் /கணேஷ்ராம்

திங்கட் கிழமைகளில் பொதுவாக “ஸெல்லுலாயிட்” என் கவனத்தை ஈர்த்ததில்லை. அதிகாலையில் அவசர அவசரமாக எழுந்து, சென்னையில் பஸ் பிடித்து, வெகுதூரம் ப்ரயாணித்து, நேராக அலுவலகம் அடைய வேண்டியிருக்கும். பயணம் ஒன்றும் சுவாரஸ்யமாக இராது. புழுதியில் விரையும் சைக்கிள்கள். மண்டை பிளக்கும் வெயில். 9.30 மணிக்கே வந்து, திரளான மக்கள், நமக்கு முன்னமே அங்கு கூடியிருப்பார்கள். சாப்பிடக்கூட நேரமின்றி, அம்மா அதிகாலையில் தயார் செய்து கொடுத்த அன்பு கலந்த இட்டலி, அவல் போல ஆறிப்போயிருக்கும். மனம் முழுக்க வீடு நிறைந்திருக்கும். கவனம் சிதறும்.

ஐந்து மணிக்கு டாணென்று கிளம்பினால் பஸ் பிடித்து அறைக்கு வர அரைமணி ஆகும்.‌‌

அதை அறை என்று அறுதியிட்டுக் கூற முடியாது. முந்தின பிறவியில் அது ஒரு செங்கல் சூளையாக இருந்திருக்க வேண்டியது. ஆறுக்குப் பத்து என்ற அளவில், கிட்டத்தட்ட ஒரு சவப்பெட்டி போல, இரண்டு கட்டில்கள் போடப்பட்டு, நானும் என் அலுவலக சகா வேலனும் பகிர்ந்து கொண்டு இருந்தோம். அனல், வெளியில் இருப்பதைவிட குறைந்த பட்சம், மூன்று டிகிரியாவது கூடத்தான் இருக்கும்.

மிகவும் அயர்ச்சியாக இருந்தது. ப்ரயாணக் களைப்பு. வேலைப் பளு. சட்டையை மட்டும் கழட்டி, ஹாங்கரில் மாட்டிவிட்டு, கட்டிலில் சாய்ந்து கொண்டேன். முகம் கூடக் கழுவத் தோன்றவில்லை. கதவைக் கூடத் தாழ் போடாமல், இரண்டு கைகளையும், தலைக்குப் பின்னால் முட்டுக் கொடுத்து, கண்களை மூடிக் கொண்டேன். அனல் அதிகமாகி, அதன் பாதிப்பு, கண்களின் இமைகளிலும் கண்டது.

ஒரு வாய் தண்ணீர் பருகினால் தேவலை. கீழே குனிந்து எடுக்க சோம்பலாக இருந்தது. யாரும் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.

நாம் வேண்டும் போதெல்லாம் கடவுள் உதவி செய்வார் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

உடனே பலன் கிடைத்தது. கதவு தட்டப் படாமல், ஒரு கருத்த உருவம் உள் நுழைந்தது.

கலைந்த தலைமுடி. யாராலும் நேர்ப்படுத்த இயலாத தலை. உடலை விடவும், கருத்த உதடுகள். விகாரமான சிரிப்பு. அவனது பெயர் முனுசாமி (அ) முத்துப் பாண்டியாக இருக்கலாம். ஆனாலும், அவன் தன்னை சந்தோஷ் என்று பிறரிடம் அறிமுகப் படுத்திக் கொள்ளவே விழைகிறான்.

கடந்த 10 வருடங்களாக இந்த Bachelor Mansionல் உலா வரும் அவனை, வேண்டுமென்றே, அவனது இயற்பெயரையோ அல்லது புனைபெயரையோ வைத்துக் கூப்பிடாமல், “ரூம்பாய்” என்றே கூப்பிடப் பழகியிருந்தனர்.

என்ன காரணத்தாலோ ரூம்பாயை யாருக்கும் பிடிப்பதில்லை. அவனது பழக்க வழக்கங்களா (அ) கண்ட மேனிக்குப் பிறர் மனதை இங்கிதமின்றி காயப்படுத்துவதா (அ) அவன் உல்லாசமாகத் தன்னைக் காட்டிக் கொள்ள உயயோகிக்கும் வாசனைத் திரவியமா, சரியாக அனுமானிக்க இயலவில்லை.

ஓரிருமுறை, நான் அவனிடம், “இந்த perfume போட்டுக் கொண்டு வருவதற்குப் பதில், நீ எல்லாரையும் ஒருமுறை செருப்பால் அடித்து விடலாம்” என்று கூறினேன்.

இன்னொரு முறை, நான் ஒரு சமயம், சில பல சிறுவர்களிடம், என்னுடைய செஸ் ஆட்டத் திறமையை நிரூபித்துக் கொண்டு இருக்கும் போது, இந்த ரூம்பாய், குறுக்கே புகுந்து, தான் விளையாடுவதாகக் கூறி, களத்தில் இறங்கி, மூன்றே நிமிடங்களுக்குள்ளாக, என்னுடைய மகாராஜாவை கையகப் படுத்தி விட்டான். எனக்கு, மிகவும் மானக்கேடாகப் போய் விட்டது. அது கூடப் பரவாயில்லை. வேடிக்கைப் பார்க்கக் கூடியவர்கள் மத்தியில், என்னிடம், “தோ பாருப்பா! செஸ் கூட ஒயுங்கா வெள்ளாடத் தெரீல! பாங்குல வேலை செய்யிறாரு! “

இதைப் போல எவ்வளவோ சொல்லலாம். அதனால், சமயம் கிடைக்கும் போதெல்லாம், எல்லோரும் அவனை கூடிய மட்டும் மட்டம் தட்டுவது வழக்கம்.

அதே ரூம்பாயாகப் பட்டவன், இப்போது நான் கண் அமட்டும் நேரம், என் நேரெதிரே, என்ன கேடுகாலத்திற்கோ, தோன்றி இருக்கிறான்.

“ஐய்ய! இன்னா நைனா, சோம்பேறி கணக்கா நாண்டுக்கினு கீற?” என்றவன், என்னை வழக்கம் போல் பேச விடாமல், “ஜல்தியா சொக்கா மாட்டிக்கினு கிளம்பு” என்றான்.

அடப்போய்யா என்றேன் அலுப்புடன்.

“இன்னாய்யா இப்டி அல்த்துக்குற? MKS-ல ஸூப்பர் படம் போட்டுக்குறான். இன்னா ஜெனம் தெர்யுமா? இப்பமே போனாக்கோ, நோவாம டிக்கிட் எடுத்துறலாம்”

நிறைய மக்கள் வருகிற படங்கள் நல்ல படங்களாக இராது என்பதாக என்னிடத்தில் ஒரு அபிப்ராயம்.

“ப்ஸ்” என்றேன் அசுவாரசியமாய். நான் வரல்ல.

“ஐய்ய! என்னாப்பா இப்பிடி கால வாரிட்ட?

இப்போது வந்திருக்கும் படம் எத்தகையது என்றும், அதில் நடித்திருக்கும் கனவான், புது கெட்டப்பில் அசத்தியிருப்பதாகவும் சொன்னான். அவர் எப்பவுமே ரசிகர்களை ஏமாற்றுபவரல்ல. ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினால், பத்து ரூபாய்க்கு, பாய்ந்து பாய்ந்து சண்டை இடுபவர் அவர்.

“இப்ப கிளம்பறியா இன்னா?” என்று கேட்டவாறே, ஹேங்கரில் மாட்டியிருக்கும் என்னுடைய புத்தம் புது சட்டை மேல் பாய்ந்தான். எங்காவது, அதனைத் தான் உடுத்துக் கொண்டு, என்னால் அதை ஜன்மத்திற்கும் உடுத்த விடாமல் செய்து விடப் போகிறானே என்ற பயத்தில், அவனிடத்தில் இருந்து பறித்து, நான் அணிந்து கொண்டேன்.

மணி பார்த்தேன். 5.45 ஆகியிருந்தது.

“ஜல்தி. இப்பமே போயி க்யூல நின்னாத்தான் டிக்கிட் கிடைக்கும்” என்று அறையும் குறையுமாக, ஆபாச உடையில் இருக்கும் நடிகையைப் போல இருந்த என்னைப் பலவந்தமாக அறையில் இருந்து வெளியில் ‘இஸ்து’ வந்தான். எங்காவது நான் தப்பிப் போகாமல் இருக்க வேண்டுமே என்று, என்னுடைய வலது கையை, அவனது சுகந்தமான அக்குளில் செருகிக் கொண்டு நடக்க வாரம்பித்தான்.

பொற்கைப் பாண்டியனைப் போல்‌ கையை வெட்டிவிட வேண்டும். இனிமேல் என்னால் எனது வலது கையை வாழ்நாளுக்கும் உபயோகிப்பது துர்லபம் என்றே தோன்றியது.

அவனுடைய அதிர்ஷ்டம் உடனே பஸ் வந்தது. ஒட்டடை போல மனிதர்கள் படிந்து கிடக்கிற பஸ். அசோகச் சக்கரவர்த்தி ஆறாம் வகுப்பு படித்த போது போடப்பட்ட ரோடு. அதில் ஊர்வலம் போக இதோ தேசிங்கு ராஜன் முதன் முதல் வெள்ளோட்டம் விட்ட பஸ்.

அதற்குப் பின் ஆறேழு முறை எட்டு நட்டும், ஒன்பது போல்ட்டும் மாற்றி இருக்கிறார்கள். பஸ் ஒருக்கணம் கூட தாமதியாது கிளம்பியது.

இவ்வகை வாகனங்களில் ப்ரயாணம் செய்ய, கடவுள் கொடுத்த ஆயுள் ரேகைகள் பற்றாது. கொழுவடிக்கிற பொன்னம்பல ஆசாரிகள், மீதமிருக்கிற பூவரசுக் கட்டைகளில், எங்கள் துன்புறுத்தல் சகியாமல், செதுக்கித் தருகிற தாயக்கட்டைகளில், ஆழப்பதிந்திருக்கிற பள்ளங்கள் போல அமைந்திருத்தல் அவசியம்.

உலகத்தின் அனைத்து சுகந்தங்களையும், இவ்வகைப் பயணங்களில் இலவசமாக அனுபவித்து விடலாம். எங்களுக்கு முன்னால் திணிக்கப் பட்டிருந்த எவனோ, மதிய உணவாக பெருச்சாளியை உட்கொண்டு, சரியாக ஜீரணமாகாமல் பஸ் ஏறியிருக்கிறான்.

இவர்கள் சுலபத்தில் எல்லா நாற்றங்களையும், நம்மேல் வீட்டிற்கு வெள்ளையடிப்பது போல் அடித்துவிட்டுப் போகிறார்கள்.

ப்ரயாணச் சீட்டு வாங்குவதற்கு, உண்மையில் சர்க்கஸ் பழகியிருக்க வேண்டும்.

நம்முடைய எண்ண ஓட்டங்களும், அசௌகரியங்களும் புரிந்து கொள்கிற கண்டக்டர்கள் கிட்டுவதற்கு நம் முன்னோர்கள் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஓருவழியாக சில்லறையைப் பீறாய்ந்து எடுத்துக் கொடுத்தேன். அவர் அதனை வெகு லாவகமாகச் சரிபார்த்து, சரியான டிக்கெட்டைப் பிரித்தெடுக்க, தன்னுடைய ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும், தன் குடல் வரையில் பாய்ச்சி, டிக்கெட்டை நன்றாக அலம்பி, என் கையில் எப்படியோ திணித்தார்.

வெள்ளையடிக்கப் படாத சுவர்கள் கொண்டு, MKS என்று பெரிதாக எழுதப்பட்டு, கண்ணீரும் கம்பலையுமாய் விஜயகுமாரி போல் நிற்கிற ஒரு கட்டிடத்தின் முன் பஸ் கிரீச்சிட்டு நின்றது. நான் கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம்தான். ஒரு பெரும் கூட்டம், என்னையும் Footboard ஆகப் பாவித்து, என் மீதே நன்கு ஏறி, மதிலைக் கடந்து, தியேட்டருக்குள் ப்ரவேசித்தது.

ஒரு மின்னல் கொடியைப் போல், நட்ட நடு ரோட்டில் வீழ்ந்து கிடக்கிற என்னைக் கைலாகு கொடுத்துத் தூக்கிய ரூம்பாய், என்னிடம் ‘சரியான அசமஞ்சம்பா’ என்று பொருள் படும்படியான ஒரு தென்னாற்காட்டுப் பாஷையைப் பிரயோகம் செய்தான்.

எனக்கு சரியான உள்காயம் இருக்கும் என்றுதான் தோன்றியது. என் உபாதையைப் பற்றி சிறிதும் கவலைப்படாத அவன், என்னை இறுகப் பற்றிக் கொண்டு, மறுபடியும் அக்குள் ப்ரயாணம் தொடர்ந்தது.

லேசாக இருட்டவாரம்பித்தது. ஏதேதோ சப்தங்கள் எழுந்தன. அன்றில் பறவைகளும், நாகணவாய்களும் இருப்பிடம் திரும்பி ஓய்வை அறிவுக்கும் முஸ்தீபுகளாயிருக்கும். நான், அதுகாறும், அன்றில் மட்டும் நாகணவாய் பறவைகளைப் பார்த்தது இல்லை என்றாலும், எப்பவோ சிறுவயதில் படித்ததை, சும்மாவேனும், என்னத்திற்கோ அர்ததமில்லாமல் நினைத்துப் பார்க்க நன்றாக இருந்தது.

டிக்கெட் எங்கு கிடைக்கும் என்று ரூம்பாயிடம் அவசியமில்லாமல் வினவினேன். கிடைக்காமல் இருந்தால் தேவலை என்று உள்மனசு ஆதங்கப்பட்டது.

“அதா பாரு” என்று தொலைவில் குட்டைச் சுவர்களால் சூழப்பட்ட ஒரு கொட்டகையைக் காண்பித்து, அந்தத் திக்கில் என்னை நெட்டித் தள்ளிக் கொண்டு போனான்.

போகிற வழியில் வைத்திருந்த ஒரு தட்டியில், சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ரயில்வே ரிசர்வேஷன் சார்ட்டில், தன் பெயர் தேடுகின்ற ப்ரயாணி போல், மக்கள் அனைவரும், வாய்பிளந்து, பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஊரெல்லாம் புகழ்கிற அந்த நடிகன், தலையை மழுங்கச் சிரைத்துக் கொண்டு, நன்கு உப்பிய புஜங்களோடும், வெற்று உடம்போடும், தண்ணீரைப் பிளந்து கொண்டு நின்று கொண்டிருந்தான். ஓரத்தில், கதாநாயகி, நாங்கள் அனுதினமும், இரவு உட்கொள்ளும், சங்கரையர் மெஸ்ஸின், பழுப்பேறிய ஒரு சுவற்றில், மிகவும் நளினமாக அலங்கரிப்பவள், கையில்லாத ஒரு பனியனை மட்டும் அணிந்து கொண்டு, தன்னுடைய அழகான பற்களைக் காட்டி, சிரித்துக் கொண்டிருந்தாள்.

ரூம்பாயை பெரும்பாடுபட்டு அந்தக் கூட்டத்தினின்றும் விடுவித்து, விரைவாக டிக்கெட் கவுண்டரை அடைந்தோம்.

“இன்னம் 10 நிமிசத்துல டிக்கிட் கொடுப்பாங்க” என்ற அவனது கூற்றை நம்ப முடியவில்லை. ஒரு மனித முகம் தென்படவில்லை அங்கு.

மாறாக, கரியேறிய அச்சுவர்கள், சுருட்டு ஊதுகிற வித்துவான்கள், அனுதினமும், அந்தரங்க சுத்தி செய்து கொள்கிற இடமாகத் தென்பட்டது.

“இந்த இடம்தானா” என்று சந்தேகமாகக் கேட்டேன்.

“அட, எத்தினி தபா இங்க வந்துக்கினு கீறேன். எனிக்குத் தெரியாதத பெரீசா கண்டுக்குனே” என்று, அவனுடைய அனுபவத்தைச் சந்தேகப்பட்டதை ஜீரணிக்க முடியாதவனாய் வெடித்தான்.

எங்கிருந்தோ ஒரு அசட்டு உற்சாகம் என்னைப் பீடித்துக் கொண்டது. கூடவே ஒரு பதற்றமும். எனக்குள்ளே ஆழமாகப் பரவியிருப்பதாக நான் நம்பிக் கொண்டிருக்கும் ரசனைகளை, லேசாக ஒதுக்கி விட்டு, இந்த மாதிரிப் படத்தையும் பார்த்து ரசிக்க என்னைத் தயார் செய்து கொண்டேன்.

ரூம்பாயை இறுகப் பற்றிக் கொண்டு, யாருமில்லாத அந்த க்யூவில் முதலிரண்டு ஆட்களாக நின்று கொண்டோம்.

அடுத்த சில நிமிடங்களுக்கு, எங்களிடையே என்ன மாதிரியான சம்பாஷணை நிகழ்ந்தது என்று சரியாக ஞாபகம் இல்லை. பொதுவாக எனக்குப் புரியாத பாஷையிலேயே என்னத்தையோ பேசினான். சற்று மௌனம் கூட. சினிமாத் தட்டியைச் சுற்றி, எதையோ ஈக்கள் மொய்ப்பது போல கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது.

“ஒரு நிமிசம் சார்” என்று, ஒற்றை விரலை, நிமிஷத்திற்காகவும் உபயோகித்த ரூம்பாய், என் அனுமதியின்றி சடுதியில் கரைந்து போனான்.

எனக்குள் பதற்றம் கூடிற்று. கடங்காரன் இன்னும் வரவில்லை. நிற்கிற இடம் சரியா என்றே தெரியவில்லை. ஒரு பயல் அருகில் வரவில்லை.

திடுமென டிக்கெட் கொடுப்பதற்கான மணியடித்தது. நான் மிதமிஞ்சியப் பதற்றத்துடன், ரூம்பாயை இங்குமங்கும் தேடிவிட்டு, ஜேபியில் கைவிட்டு, சரியான சில்லறையைத் தெரிந்தெடுத்து நிமிர்ந்தால், கவுண்டர் திறந்து விட்டான்.

ஒரே ஒருக் கணம்தான். கண்ணிமைக்கும் நேரத்தில், எங்கிருந்துதான் அவ்வளவு கூட்டம் வந்ததோ தெரியவில்லை. க்யூவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.‌ கவுண்டரின், நிறமிழந்த கம்பிகளில், துளைகளில், ஆயிரம் கைகள், விரல்கள், ரூபாய் நோட்டுக்கள்.

கவுண்டரின் உள்ளே நிற்பவனைப் பார்க்க இயலவில்லை. அவனாலும், வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்திருக்க முடியாது.

அசுரனான, கார்த்த வீர்யாஜுனன், தன்னுடைய ஆயிரம் கைகளால், நர்மதை நதியைத் தேக்கியதைப் போல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைகள் அவனைத் தேக்கியிருந்தன.

தமிழில் சாத்தியமான அனைத்து கெட்ட வார்த்தைகளையும், சரளமாகப் புழங்கியவாறு, மிகுந்த லாவகத்துடன், அவன்முன் செலுத்தப்பட்ட சில்லறைகளுக்குத் தக்கவாறு, டிக்கெட்டுகளைப் பரிமாறினான். என்னுடைய கைகளிலும், இரண்டு டிக்கெட்டுகள் பரிமாறப்பட்டன. கைகளைத்தான் மீட்க முடியவில்லை. மிகுந்த பலத்தைப் ப்ரயோகித்து, கைகளை வெளியே இழுத்ததில், நிதானம் தவறி, தடாலென்று கீழே விழுந்தேன். என்னால் சுலபமாக எழ முடியவில்லை.

ஒரு பெரிய மனிதச் சுழலில் சிக்கி, மீள வழி தெரியாமல், மீதமிருந்த கொஞ்ச நஞ்சம் பலத்தையும், தைரியத்தையும் சேகரித்துக் கொண்டு, “தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்” போல, என்னைச் சுற்றிக் கவிந்திருந்த பன்னீராயிரம் வேளிரையும் புறங்கண்டு, வெளிப்பட்டு, “ரூம்பாய், ரூம்பாய்” என்று மைக்கேல் மதன காமராஜனைப் போல, பிதற்றினேன்.

பார்த்தால், என்னைப்பற்றிப் புகழ்ப் பரணி பாட வேண்டிய, ரூம்பாய் என்ற அந்த மிருகம், ஸ்டைலாக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, நக்கலாக என்னைப் பார்த்து, “இன்னா சார், செமித்தியா மாட்டிக்கினியா?” என்று கெக் கெக் என்று இளிக்கிறான்.

அவனது, கழுத்தில் என் பற்களைச் செலுத்தி, அருகாமையில் இருக்கிற காவல் நிலையத்தில் சரணடைந்து விட்டால் என்ன என்ற என்னுடைய எண்ணத்தை, அவனது, நச நசவென்று ஈரம் கசிகிற கழுத்தினை உத்தேசித்து, மாற்றிக் கொண்டு, கசங்கிய உடையில், அவனைத் தொடர்ந்து, கொட்டகையில் ப்ரவேசித்தேன்.

அசட்டு மஞ்சளில் வெளிச்சம் என்ற பெயரில் இருட்டை நிரப்பிக் கொண்டிருந்த விளக்குகளின் ஊடே நீண்டு கிடந்தது கொட்டகை. ஈசான மூலையில், இழுத்துப் பிடித்து, ஒட்டுப் போட்டு இருந்தாலும், வெளுப்பாகித் தெரிந்த திரையைத் தவிர வேறொன்றும் பளிச்சென்று இல்லை.

கொட்டகைகளுக்கு எருமைகள் பரவாயில்லை என்று தோன்றியது. தண்ணீரைக் கண்டால் தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும் எருமைகள்.

ஒரே கையால் எழுதியதைப் போல நாற்றமும் இறைச்சலும் விரவிக் கிடந்தன. நாற்றமும் கடவுளைப் போலத்தான், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால்.

“இன்னா சார், இங்கனியே நின்னுக்குனு பராக்கு பார்த்துக்குனு கீறே? இதுக்கு மின்னே தியேட்டரையே பாத்ததுல்லயா நீயி” என்று என் மௌனத்தைக் கலைத்தான்.

அவனது கவலை ந்யாயமாகப் பட்டது எனக்கு. கண்சிமிட்டும் நேரத்தில் கொட்டகை நிரம்பிக் கொண்டே வந்தது. அருகாமையில் இருந்த அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன. இனி, இரண்டு இருக்கைகளாகக் கிடைப்பது துர்லபம் தான்.

அவ்வளவு இருட்டிலும், எங்கயோ மூன்று நான்கு இருக்கைகளைப் பார்த்துவிட்டான் போலும். இலங்கையைக் கண்ட அனுமன் போல், காற்றில் எழும்பி, வழியில் இடைப்பட்ட கணிசமானவர்களின் கழுத்து எலும்புகளைப் பதம் பார்த்து இலக்கை அடைந்தான்.

அந்த இருக்கையில் ஒன்று கார்னர் இருக்கை. அவன் அதனை அடைந்து விடும் தருணம், அவனை விடவும் வேகமாக ஒரு உருவம் பாய்ந்து அடைந்து விட்டது. அந்த உருவத்திற்கு குறைந்தபட்சம் எழுபது வயதாவது இருக்கும். 60 வருட அனுபவம், இளைஞனான ரூம்பாயை வீழ்த்தி விட்டது.

ரூம்பாய், மனம் நொந்தபடி, மற்ற இரு இருக்கைகளைப் பிடித்து, கூட்டத்தினுள் என்னைத் துழாவினான்.

நான் சுழலில் அகப்பட்ட சுந்தரச் சோழனைப் போல (சுனாவுக்கு சுனா) தட்டுத் தடுமாறி அவ்விடத்தை அடைந்து இருக்கையில் வீழ்ந்தேன்.

காற்றோடு, விசிறியும் விழுந்துவிடாத பத்திரத்தில் இருந்த இருக்கை அது. வியர்வையும், சிகரெட்டும், பீடியும், கெட்டுப்போன திண்பண்டங்களும் கலந்த கலவையாக வீச்சம் அடித்து குமட்டிக் கொண்டு வந்தது.

கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். அதற்குள், ரூம்பாயும், முதியவரும் சினேகமாகி விட்டிருந்தனர். ரூம்பாய் அவரிடம் எதனையோ கூற முற்பட்டு, வலுக்கட்டாயமாக என்னையும் இழுத்து, “இத்தக் கேளு” என்றான்.

நாங்கள் வந்திருந்த படத்தின் கதாநாயகனைப் பற்றித் தெரியுமா என்று கேட்டான். தெரியாது என்றோம். ஒரு புழுவைப் போல என்னைப் பார்த்துவிட்டு, தமிழ் நாட்டின் பிரபலமான ஒரு பத்திரிக்கையின் பிதாமகரைப் பற்றிக் கூறினான். அவரால்தான், இந்த நாட்டிற்கே எழுத்தறிவு கிட்டியது என்ற தகவலையும் தெரிவித்தான். நம்முடைய கதாநாயகனுக்கு, அவர் எதோ ஒரு வகையில், சின்ன பெரியப்பாவோ (அ) பெரிய சித்தப்பாவோவாம்.

இதனைக் கூறும் போதே, அவன் கைகள் உணர்ச்சிப் பெருக்கில் நடுங்கின. கேட்டுக் கொண்டிருந்த பெரியவரின் கண்களும் குளமாயின. இருவருக்கும் ஏக காலத்தில் மயிர்க்கூச்செறிந்திருக்க வேண்டும். இருவருடைய ரோமங்களும் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டன. அந்த நேரம் பார்த்து, திரையில் விளம்பரப் படங்கள் போட ஆரம்பித்தனர். சுய உணர்வு வரப்பெற்ற இருவரும், ரோமங்கள் முடிபோட்டிருந்ததால் ‘ஆ’ வென்று வேதனையோடு பிரிந்தனர்.

விளம்பரங்களின் நடுவே தியேட்டருக்குள் புகை பிடிப்பதைத் தடை செய்யும் slide ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

அது வரை, புகை பிடிப்பதை மறந்திருந்த ரூம்பாய், சட்டென்று ஞாபகம் வரப்பெற்றவனாய், உள்ளாடைக்குள் உல்லாசமாய் கை விட்டு, ஒரு பிய்ந்து போன சிகரெட்டை வெளியில் எடுத்தான்.

என்னுடைய அறிவுறை எதுவும் அவன் காதில் ஏறவில்லை. மிகவும் ஸ்டைலாக அதை வாயில் செருகி பற்றவும் வைத்தான்.

அப்படியே கண்கள் ஒரு லயிப்பில் செருக, கிட்டத்தட்ட அரை சிகரெட்டை ஒரே இழுப்பில் உள்ளே இழுத்து, மார்பின் விலா எலும்புகளில் கூட சேகரித்து, பின் வெகு அழகாக, தலையை ஒருக்களித்து, அருகில் அமர்ந்து தேமேனென்று slide பார்த்துக் கொண்டிருக்கும் முதியவர் முகத்தில் குப்பென்று ஊதினான்.

அத்துணைக் குறுகிய கால அவகாசங்களுக்குள், தன் முகத்தின் மிக எதிரே, நிகழ்ந்து விட்ட அந்தத் தாக்குதலை எதிர்பார்த்திராத அந்த முதியவர், அவ்வளவு ஆரோக்கியமான காற்றையும், தன்னுடைய ஈரல் கொள்ளுமளவும் ஸ்வாசித்து, நல்ல காற்றிற்காகத் திணறி, லொக்கு லொக்கு என்று நாலு முறை இருமினார்.

பின்னர், தன் வயம் வரப் பெற்றவராய், ரூம்பாய் பக்கம் கடும் கோபத்துடன் திரும்பினார். பழுப்பேறிய அவரது மீசையின் கீழே அவரது தடித்த உதடுகள் அசைவது தெளிவாகத் தெரிந்தது.

என் வாழ் நாளில் அவ்வளவு சரளமாக யாரும் தமிழ் பேசிக் கேட்டதே இல்லை. ஓருசில நிமிடத் துணுக்குகளுக்குள்ளாகவே அவர் ரூம்பாயின் மூதாதையர்கள் (அ) அதற்கும் முன்னர், கிட்டத் தட்ட ஆதாம் ஏவாள் வரை கூடச் சென்று, வரிசைக் கிரமமாக, பரம்பரையின் அனைத்துப் பெண்டிரின் கற்பு நிலைகளையும் சந்தேகப்படும் விதமாக வார்த்தைகளை எடுத்து வீசினார்.

எனக்கு ஒரு அட்சரம் புரியவில்லை. சொல்லகராதி, பொருளகராதி உள்பட எந்த ஒரு அகராதியிலும் அடங்காத வார்த்தைப் பிரயோகம்.

ரூம்பாய் இதற்கெல்லாம் கவலைப் பட்டதாகவோ, வெட்கப் பட்டதாகவோ தெரியவில்லை. அவன் பாட்டுக்கு, சிகரெட்டை விதம் விதமாக அனுபவித்து ஊதுவதில் ப்ரயத்தனம் செய்து கொண்டிருந்தான். காற்றில் வளையம் இடுவது முதல், RTO Officeல் போடுவது போல் எட்டெல்லாம் போட்டுக் காண்பித்தான்.

முதியவரின் சுருதி கொஞ்சம் இறங்கியது. லேசாக இரைக்கவாரம்பித்தது. ரூம்பாயை நன்றாக உலுக்கி, மேலும் சில நல்ல வார்த்தைகளைக் கூறியதோடு நிறுத்தி இருக்கலாம் அவர்.

மாறாக, “என் மூஞ்சில போயி ஊதறியே மூதேவி, அப்பால, அந்தக் கசுமாலம் மூஞ்சில ஊதறது தானே” என்று என் பக்கமாகக் கையைக் காட்டி, அறிவுரை வேறு பகர்ந்தார்.

தன்னுடைய முயற்சிகளுக்கு ஒரு வடிகால் கிடைத்து விட்ட திருப்தியில், ரூம்பாயின் கண்கள் ஒளிர்ந்தன. அவனது முகம், ஒரு oscillation fan-ஐப் போல என் பக்கம் திரும்பியது.

நான், என்னுடைய உடலின் அனிச்சை உணர்வுகள் அனைத்தும் உந்த, என்னுடைய கைக்குட்டையால், நாசித்வாரத்தை நன்றாக மூடிக்கொண்டு, சரேலென்று எழுந்து நின்றேன்.

அந்த நேரம் பார்த்து, திரையில்,
ஒரு மாது சிரோமணி குறைந்த பட்ச உடைகளோடு அருவியில் குளிக்கத் தொடங்கினாள்.

இத்தகைய நேரத்தில் என்னுடைய நிற்பு, பின் வரிசைகளில் அனேகம் ஆட்சேபணைகளைக் கிளப்பி இருக்க வேண்டும். ‌‌ ஒரு பேரிரைச்சலே கேட்டது.

நான் என்னுடைய விதியை வெகுவாக நொந்தபடி, மறுபடியும், தளர்வாக என்னுடைய இருக்கையில் சரிந்தேன். உடல் வலியும், சோர்வும் விசுவரூபம் எடுக்கத் துவங்கியிருந்தன.

இதனிடையே ரூம்பாய் வேறு, கொள்ளிவாய்ப் பிசாசு போல புகை விட்டுக் கொண்டு, கடைகளில் சாம்பிராணி போடுவன் போலத் தோற்றமளித்தான்.

போறாததற்கு, தான் சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டதை, ஏதோ கனிஷ்கர் குஷாண சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த வரலாறு போலக் கூறவாரம்பித்தான்.

எனக்கு மயக்கமாக வந்தது. நல்ல பசி வேறு. இருக்கையில், இன்னம் தாழ்வாக என்னை இருத்திக் கொண்டு, திரையை வெறிக்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றிக் கவிந்து இருந்த புகை மூட்டமே மேகமூட்டமாக மாறி, அதன் ஊடாகத் திரையில் “சூரியன்” உதித்தது

.

2 Comments on “அலுவல் முடிந்து திரும்பும் வழியில் சென்று பார்த்த சினிமா ஆட்டம் /கணேஷ்ராம்”

Comments are closed.