(பாரதியார் சரித்திரம் தொடர்ச்சி…)

தந்தை இறந்தபின் பாரதியார் ஆதரவற்றிருந்தபோது அத்தை குப்பம்மாள் அழைக்கக் காசிக்குச் சென்றார். அங்கே கலாசாலையில் சேர்ந்து ஹிந்தி, ஸம்ஸ்கிருதம் முதலியலைகளை வெகு சீக்கிரத்தில் கற்றுப் பிரவேசப் பரீக்ஷையில் முதல் முதலாகத் தேறினார்.
காசியில் பாரதியாரின் அத்தை மிகவும் செல்வமாக வாழ்ந்து வந்தார். அப்பொழுது காசியில் தென்னாட்டு யாத்ரீகர்கள் வந்தால் தங்குவதற்கு மடங்கள் ஒன்றிரண்டு தானிருந்தன. அத்தையின் கணவர் ஸ்ரீ கிருஷ்ண சிவன் ஏராளமான பொருள் செலவிட்டு, ஹனுமந்த கட்டத்தில் இரண்டு மடங்கள் கட்டினார். பிரயாகை (அலஹாபாத்)யிலும் ஒரு மடங்கட்டி, கயாவிலும் ஒரு கிளை ஸ்தாபித்திருந்தார். அதனால் அவருக்கு யாத்ரீகர் மூலமாக ஏராளமான பணம் குவிந்தது. நல்ல அறிவாளி, சிவபக்தர் – ஆகையால் கீர்த்தியும் மேலோங்கிற்று.
நமது தென்னாட்டிற்கு அவர் சுற்றுப் பிரயாணம் செய்யுங் காலங்களில், ஜகத்குரு சங்கராச்சாரியாருக்கு ஜனங்கள் ஊர் ஊராக மரியாதைகள் செய்வது போல அவருக்கும் நடத்துவார்கள். சமஸ்தானாபதிகள் – ராமநாதபுரம் ராஜா, எட்டயபுரம் ராஜா, சிங்கம் பட்டி, சேத்தூர், தலைவன் கோட்டை ராஜா முதலியவர்கள் அவரை அன்போடு ஆதரித்து வந்தார்கள்.
தாய் தந்தையற்ற பாரதியை அத்தையார் அழைத்துச் சென்று கல்லூரியில் சேர்த்தார். அந்த அம்மணி தனது பிள்ளைகளைக் காட்டிலும் பாரதி மீது உயிரை வைத்திருந் தார் என்று சொல்வதுகூட மிகையாகாது. ஆடை விஷயங்களில் பாரதி ஒன்று கேட்டால் அவர் ஒன்பது வாங்கிக் கொடுப்பார். பாரதி பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு கவிதைகள் புனைவதிலும், இயற்கை யழகுகளை அனுபவிப்பதிலும், நண்பர்களுடன் படகில் உல்லாச யாத்திரை போவதிலுமாகப் பொழுதைக் கழிப்பார். அந்தணருக்கேற்ற ஆசாரமின்றி எல்லா ஜாதியாருடனும் கை கோர்த்துக்கொண்டு உலாவுவதும், நியம நிஷ்டையில்லாது எப்போதும் கோட்டும் சட்டையும், தலையில் முண்டாசும், காலில் பூட்ஸும் அணிந்திருப்பதும், நாளடைவில் ஸ்ரீ கிருஷ்ண சிவன் அவர்களுக்கு வெறுப்பை யுண்டாக்கியது. ஆயினும் ஏதாகிலும் சொன்னால் தம் மனைவி மனம் வருந்துவாளென்று அவர் ஒன்றும் சொல்லத் துணிவதில்லை.
ஒருநாள் தற்செயலாகப் பாரதியைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. விஷயம் என்ன வென்றால் இத்தனை அநாசாரத்தோடு அந்தணருக்கு அத்யாவசியமான குடுமியை – சிகையை – எடுத்துவிட்டு, வங்காளிபோல் ‘கிராப் செய்துகொண்டு, வகிடு எடுத்து வாரி விட்டு, மீசையும் வைத்துக் கொண்டு பாரதி காட்சியளித்தது தான்! சிவனுக்குக் கோபம் பொறுக்க முடியவில்லை.
“அப்பா! சுப்பய்யா! எதற்கடா இந்தக் கோலம்? நீ என்ன கைம்பெண்ணா, தலையை மொட்டையிட்டுக்கொள்ள? உனது புத்திசாலித்தனமும், படிப்பும் இதற்கெல்லாமா உபயோகப்பட வேண்டும்? சாக்ஷாத் சிவ ஸந்நிதானத்திலே – சைவப்பெரியார் களுக்கு மத்தியில், நாலு தலைமுறையாக சிவ பக்தி குடும்பத்திலே பிறந்தும் உனக்கு இப்படிப் புத்தி தோன்றுமா உன் தகப்பனார் இப்போது ஜீவியவந்தராயிருந்து பார்த்தால் மானம் பொறுக்க முடியாமல் பிராணணை விடுவாரோ நல்லது. இன்றிலிருந்து நீ எங்களுடன் ஒரே பந்தியில் சாப்பிடக் கூடாது. என்றைக்கு நீ குடுமி வளர்த்து, மீசையை எடுத்து விட்டு வருகிறாயோ அன்றுதான் பந்தியில் உட்காரலாம்” என்றார்.
பாரதி பதிலொன்றும் உரைக்காமல் மூன்றாம் மாடி யிலிருந்த தமது அறைக்குச் சென்றார். ஐந்து நிமிஷத்துக் கெல்லாம் அவரது அத்தை கையில் தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு, மாடிப்படி யேற முடியாமல் ஏறி வருவதைக் கண்டு, “அத்தை ! ஏன் இவ்வளவு சிரமப் படுகிறாய்?” என்று கேட்கவும், அத்தை, “அப்பா! அவர் ஏதோ கோபத்தில் பேசியதற்காக நீ வருந்தாதே! பின்னால் அவருக்கே தெரியும்” என்று சமாதானப்படுத்தி, போஜனம் செய்வித்த பின்னரே மற்றவருக்குப் பரிமாறக் கீழே சென்றார்.
இப்படியாக இரண்டு மூன்று மாதங்கள் கழிந்தன. மடத்தில் பெரிய கோவிலுண்டு. மார்கழி மாதம் திருவாதிரை வந்தது. உற்சவத்திற்காக யாத்ரீகர்களும், பக்தர்களும் நூறு பேருக்கு மேல் கூடியிருக்கிறார்கள். பொழுது விடியலாற்று. அபிஷேகம் எல்லாம் முடிந்து தீபாராதனைக்கு ஆரம்பித் தாயிற்று. “காராம் பசு தரிசனம்” என்று மும்முறை திரையைத் தூக்கி மறைத்து, தரிசனம் ஆரம்பித்தது. “கனக சபை தரிசனம்”, “கல்யாண தரிசனம்”, “சிற்சபேச தரிசனம்” எல்லாம் முறையே நடந்தன. பின் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டன.
என்ன காரணம் என்றால், வழக்கமாகத் ‘திருவெம்பாவை’ சொல்லும் ஓதுவார் அன்று வரவில்லை. அழைத்துவர ஓர் ஆளை அனுப்பிவிட்டுத் தீபாராதனைகளைச் சற்றுத் தாமதமாவே ஸ்ரீ சிவன் நடத்திக் கொண்டிருந்தார். அழைக்கச் சென்றவர் திரும்பி வந்து, “அவர் வேறு கோவிலுக்குச் சென்றுவிட்டாராம்” என்று கூறவும், கிருஷ்ண சிவனுக்குப் பெரிய ஏமாற்றமாக முடிந்தது. அங்கு அந்தக் காலத்தில் தமிழ் படித்தவர் அதிகம் கிடையாது.
“விசுவநாதா ! நடராஜா ! இதுவும் உன் சோதனையோ? எத்தனையோ வருஷங்களாக உற்சவாதிகள் நடத்தி வருகிறேன். இது போன்ற விக்கினம் இதுவரை ஏற்பட்டதில்லையே! என்ன அபராதம் செய்தேன்? திருவெம்பாவை சொல்லாமல் எப்படித் தீபாராதனை முடிப்பது? என் மருமகளுக்கு தெரியுமென் றாலும், ஸ்திரீகள் பாடுவது முறையல்லவே” என்று ஸ்ரீ சிவன் வருந்தினார்.
அவரது மனைவி, “என்ன இவ்வளவு யோசனை? நம்ம சுப்பய்யா இல்லையா, ஓதுவாரைக் காட்டிலும் திருத்தமாகப் பாடுவதற்கு?” என்று சொல்லி, பாரதியின் கிராப்புத் தலை மறையப்பட்டுத் தலைப்பாகை கட்டி, விபூதி பட்டை பட்டை யாக இட்டு, ருத்ராக்ஷ கண்டியைக் கழுத்திலணிவித்து அழைத்து வந்து பாடச் செய்தார். முறைப்படி தீபாராதனை முடிந்தது.
பின்பு பாரதியும், சுப்புப் பாட்டி என்ற கிழவியொருத்தி யும் சேர்ந்து, “பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ, உந்தன் பாத தரிசனம்” என்ற நந்தன் சரித்திரக் கீர்த்தனையை உருக்கமாகப் பாடினார்கள். அங்குள்ள பக்தர்கள் மனம் பரவசமடைந்து, நெக்குருகி, புளகாங்கிதமடைந்தார்கள்.
கடைசியில் ஸ்ரீ கிருஷ்ண சிவன் பாரதியைத் தழுவிக் கொண்டு, “அப்பனே! இவ்வளவு சிறு வயதில் உனக்கு இத்தனை ஞானம் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் வெறும் ஆஷாட பூதிகளே. எங்களுக்குத்தான் குடுமியும் வேதியர் வேஷமும் உன்னைப்போல் உண்மையான மனதுடையவருக்குக் குடுமியும் வேண்டாம். பூணூலும் வேண்டாம்” என்று புகழ்ந்தார். அன்றிலிருந்து மறுபடியும் பந்தி போஜனம் ஆரம்பமாயிற்று.
