இலக்கிய இன்பம் 53 /கோவை எழிலன்


ஐம்பெரு பாதகர்காள்
இங்கொரு காதலி பூஞ்சோலைக்கு வருகிறாள். அங்கு கூயில்கள் கானம் இசைத்துக் கொண்டும் மயில்கள் நடனம் ஆடிக்கொண்டும் நீல நிற கருவிளை மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டும் கருநிற களாக்கனிகள் காய்த்துத் தொங்கிக் கொண்டும் பல வகை வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டும் அழகான பூஞ்சோலையை மேலும் அழகாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் இப்பெண்ணிற்கோ இவை அனைத்தும் தன் காதலனின் நிறத்தை நினைவு படுத்தி அவள் துன்பத்தை மேலும் அதிகப் படுத்துவதாக இருக்கின்றன. எனவே அவள் இவற்றை பஞ்சமாபாதகர்கள் என விளிக்கிறாள்.

கண்ணன் மீது காதல் கொண்டு ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் வரும் அழகான பாசுரம் இது

“பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே”