எஸ்.சண்முகம் கவிதை

வெளிப்பக்கமுள்ள மாடிப்படியின் கீழுள்ள
குறுகலான இடத்தில் மரஸ்டூலில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து மூன்று நாட்களாகிவிட்டன
அவ்வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
தென்படவில்லை
அவர் அமர்ந்திருந்த ஸ்டூல் வாசலோரமாக வைக்கப்பட்டுள்ளது

வயோதிகரென எண்ணத் தகுந்தவரல்ல
மூக்கின் கீழ்வளைவில் பொருந்திய கண்ணாடி
கொஞ்சம் கீழ்வெட்டுப் பார்வை
தன்னைக் கடப்பவர்களுக்கெல்லாம்
ஒரு விஷமச் சிரிப்பு
அவர் எழுந்து நின்றதை பார்த்ததில்லை
ஆனால் யாரையும் மிரட்டாத வாளிப்பு

அந்த மாடியின் கீழுள்ள இடுக்கு
ஏழு அடி நீளமும் நான்கடி அகலம் இருக்கலாம்
அங்கு காலை பத்துமுதல் மாலை ஆறு மணிவரை
வாரத்தின் ஆறுநாளும் அமர்ந்திருப்பார்
எதையோ செய்து கொண்டிருந்தார்

அவரிருந்த மாடிப்படியின் இடப்பக்கம்
ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்பு பகுதியின்
முன்கதவு திறந்திருந்தது
தெருவிலிருந்து இரண்டு படிகள் ஏறிச்சென்று
ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தவரை
மாடியின் கீழிருந்தவர் இல்லையா என்றேன்
அவர் இடத்தை காலிசெய்துவிட்டார் என்றவர்
ஏன் அவரது புதிய முகவரி வேண்டுமா
உங்களுக்கு ஏதாவது தரவேண்டுமா எனக் கேட்டார்
ஒன்றுமில்லை என்றேன்

பலர் அவர் எங்கே எனக் கேட்கின்றனர்
நீங்கள் எதையாவது அவரிடம் தந்தீர்களா என்றதும்
அப்படியெல்லாம் இல்லை
சரி உங்கள் பெயர் பெயர் என்றவரிடம்
தயங்கியபடியே கண்சிமிட்டிவிட்டு விடைபெறுகையில்
அந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தவரின் பெயரைக் கேட்காமல் மீண்டேன் .

-எஸ்.சண்முகம் –
(எண்: 055)

One Comment on “எஸ்.சண்முகம் கவிதை”

Comments are closed.