சிந்திக்க வேண்டுகிறேன்

கணேஷ்ராம் 

MGR என்கிற தனிநபர் ஒரு ஸ்தாபனமாகி பத்து வருடங்கள், அதில் மூன்று வருடங்கள் படுத்துக் கொண்டே தோற்காமல் ஜெயித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதற்கு முக்கிய காரணம் நான் ஆணையிட்டாலின் சௌந்தரராஜனும் விஸ்வநாதனும் வாலியும் அதைத் தாண்டி நாலைந்து முறை ஸ்டைலாக குறுக்கும் நெடுக்கும் வந்து போன சாட்டையும் என்பதும் உலகம் ஒப்புக் கொண்ட உண்மை.

மகாநதியில் ஹாஸ்யன் சொல்லொணாத் துன்பம் அனுபவித்து விட்டு, வேறுவழியில்லாமல் (?) அந்தத் துலுக்காணத்தைத் துவட்டி எடுக்கும் போது, பின் வரிசையில் ஒரு மாமி, பெரிதாக ஒரு மூச்சு விட்டு பக்கத்து இருக்கை பெண்ணிடம், “இப்பதாண்டி நிம்மதியா இருக்கு” என்றதும் தியேட்டரில் கொல்லென்று யாரும் சிரிக்கவில்லை என்பதே பார்வையாளர் அனைவரும் ஹாஸ்யனின் அநியாயமான துக்கங்களின் வடிகாலாக ஏதாவதொன்று நிகழ்ந்து விடாதா என்ற‌ எதிர்பார்ப்பில் இருந்ததற்கான சாட்சிதான்.

மனிதன் ஃபேன்டஸி உலகத்தில் சஞ்சரிப்பதை மிகவும் விரும்புகிறான். என் போன்றவர்கள் இத்தனை வருடங்களில் தடிமனற்ற‌ மூங்கில் கழிகளை துணி உலர்த்த மட்டுமே உபயோகப் படுத்தி இருக்கிறோம். ஆனால், தொலைதூரம் நீள்கிற பயணங்களில், உறக்கம் கொள்ளாத இரவுகளில், வந்தியத்தேவனோடு அல்லது அவனாகவே குதிரைகளில், மன்னிக்கவும், புரவிகளில் பலகாத தூரம் பயணித்து இருக்கிறோம். வழிப்பறித் திருடர்களால் வழிமறிக்கப் படுகிற இளவரசிகளைத் தனியாளாக சண்டையிட்டு மீட்டு இருக்கிறோம். இளவரசியை அடைவதற்குள் உறக்கம் வந்துவிடும் என்பதும் எல்லோருக்கும் நிகழ்வது தான்.
இந்த ஃபேன்டஸியில் நாம் வீராதி வீரனாக, துஷ்ட நிக்ரஹம் செய்யத் தவறியதே இல்லை. எவ்வளவு புலிகளைக் கொன்று இருக்கிறோம்? மற்றவர்கள் எப்படியோ, நான் சிங்கங்களைத் தாக்கி அழிப்பதில்லை. என் வரையில் அவைகள் நல்லவைகளாக, சமயங்களில் உள்ளங்கால்களைத் தூக்கிக் காட்டி, முட்களை எடுத்து விடுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

ஃபேன்டஸியில், நாம் அதிகம் விரும்புகிற, ஆனால் அதில் எதையும் அடுத்த ஜன்மத்தில் கூட செய்ய‌ இயலாதவற்றை செய்து, மனதிற்குள் அதீத திருப்தியை அடைந்து விடுகிறோம்.

அதன் வெளிப்பாடு தான் எம்ஜிஆரின் மீதான ப்ரேமை. துணி மூடப்பட்ட துலுக்காணம் நெருப்புத் தழலில் அமிழ்ந்து துடிப்பதில் நமது குதூகலம். நிஜ வாழ்வில் இது சாத்தியம் இல்லை என்பது தெரிந்ததினாலேயே, இந்நிகழ்வுகளில் நமது மகிழ்ச்சி பன்மடங்காகிறது.

நடக்காது என்று தெரிந்தும் நடந்தால் பரவாயில்லை என்று சட்டென்று தொற்றிக் கொள்ளும் உற்சாகம்.

இதேது, தமிழ் சினிமாவாக இருந்தால், நல்ல சமயத்தில் புடவை கொடுத்த கண்ணனை ரசிகர்கள் திட்டித் தீர்த்து இருப்பார்கள். அல்லது சம்பவம் நடந்த பிற்பாடு, கண்ணன் பழிவாங்குவதாகக் காட்டி இருப்பார்கள். அநியாயமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அசட்டு வியாசரால் அவ்வாறு சிந்திக்க இயலவில்லை.

அதே சமயம், இருந்திருந்து, வளைக்க வேண்டிய வில்லை உடைத்து விட்டு, (நாமாக இருந்தால் சத்தம் போடாமல் வில்லை அதே இடத்தில் வைத்து விட்டு, ஒன்றுமே தெரியாத மாதிரி திருட்டு முழியுடன் பக்கத்து வீட்டுக்குப் போய், சீதாவுக்குப் பதில் ராதாவை உஷார் பண்ணியிருப்போம்), சிரபப்பட்டுத் திருமணம் செய்து கொண்டு வந்த ஒரே பெண்டாட்டியைத் தொலைத்து விட்டு, தெருத்தெருவாக கண்ணீரும் கம்பலையுமாக “லோ லோ”வென்று அலைந்து, கடைசியில் குரங்குகளைப் பிடித்துக் கொண்டு போய், அவளை மீட்டதை இன்று வரை கொண்டாடுவது, சத்தியமாக நவமியில் பானகமும் நீர்மோரும் குடித்து தாகசாந்தி செய்வதற்காக இல்லை.

தூக்க மாட்டாது பத்து தலையோடு சண்டைக்கு வந்த ராவணனை ஜெயித்து, இன்னிக்கு சங்கு ஊதியாச்சு, நாளைக்கு வா என்று சொன்ன மானிடனின் வெற்றிக்காக.

One Comment on “சிந்திக்க வேண்டுகிறேன்”

  1. மாயாவாத யதார்த்தம் பாணியில் கட்டுரை எழுத முடியும் என்று நிரூபித்த கணேஷ் ராமிற்கு பாராட்டுகள் அப்படியே கதை கவிதை என பயணிக்கட்டும்!

Comments are closed.