சுஜாதாவுடன் நேர்காணல்/குரு ராஜன்

நன்றி : அறிவுஜீவி சுஜாதா வாசகர் குழு

1998 ம் வருடம் India on the Net (INET) என்ற வலைத்தளத்தில் வந்த சுஜாதாவுடனான மிகச் சுவையான ஆங்கில நேர்காணலின் தமிழாக்கம் இது .
கேள்வி: உங்கள் கதைகள் படம் ஆகும் விதம் குறித்து உங்களுக்கு மகிழ்ச்சியா ?
சுஜாதா பதில்: வெளிப்படையாகச் சொன்னால் இல்லை. நான் மட்டுமல்ல, எந்த ஒரு எழுத்தாளரும் தன்னுடைய கதைகள் படமாகும் விதம் குறித்து திருப்தி அடைவதில்லை. உலகப் புகழ் எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயிடம் இது குறித்து கேட்ட போது, ” கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடு,” (Take the money and run) என்றாராம். சத்யஜித் ரேயின் “பதேர் பஞ்சாலி” மிகப் பெரும் வெற்றியும் / புகழும் பெற்ற படம். ஆனால், அதில் அவர் திருப்தி அடையவில்லை என்றே தெரிகிறது. ஹாலிவுட் இயக்குனர் ஹிட்ச்காக் ஒரு முறை இது பற்றி சொன்னபோது, “படம் எடுக்க வேண்டிய கதையை / நாவலை ஒரு முறை படித்துவிட்டு புத்தகத்தை தூர எறிந்துவிடுவேன். படம் முடியும் வரை அதன் அருகே போகமாட்டேன்” என்றாராம்.
நான் நிச்சயம் இயக்குநர்களைக் குறை சொல்லவில்லை. இரண்டும் வெவ்வேறு மீடியம். ஒரு புத்தகத்தைப் படிப்போர் எண்ணிக்கை நிச்சயம் படம் பார்ப்போரின் எண்ணிக்கையை விட குறைவே. என்னுடைய நாவல்களை 30-40 லட்சம் பேர் படித்தால், அது படமாகும் போது கோடிக்கணக்கில் பார்ப்பார்கள்.சினிமா செலவு அதிகமாகும் மீடியா. அதற்கேற்ப காம்ப்ரமைஸ் செய்துதான் ஆக வேண்டும். கதையைப் படித்தவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு திருப்தி அடைவதில்லை, ஆனால், கதையே படிக்காதவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு திருப்தி அடைகிறார்கள். இதிலிருந்தே இரண்டும் வெவ்வேறு ஆடியன்ஸ் என்று புரிந்து கொள்ளலாம்.

=============

கேள்வி: இரண்டு பெரிய இயக்குனர்கள், கே. பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா, இவர்கள் இருவருக்கும் என பிரத்தேயகமாக நீங்கள் எழுதிய கதைகள் (நினைத்தாலே இனிக்கும் மற்றும் நாடோடித் தென்றல்) வெற்றி பெறவில்லை. இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ??
சுஜாதா பதில்: ஒரு படத்திற்காக நான் முதலில் எழுதியது நினைத்தாலே இனிக்கும் படத்திற்காக. அதற்கு முன் என்னுடைய கதைகள் மட்டுமே படமாக்கப்பட்டன. இவைகளில், நான் வசனமோ, திரைக்கதையோ எதுவும் எழுதவில்லை.
நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு நான் எழுதிய திரைக்கதை வேறு. துரதிருஷ்டவசமாக, நடிகர்களின் கால்ஷீட் சரிவரக் கிடைக்காமல், பாலச்சந்தர் நான் எழுதியதை அப்படியே எடுக்க முடியவில்லை. அதில் நிறைய மாற்றங்கள் செய்தார். கடைசியில், ஒரே பாட்டு மயமாக “ABBA” படத்தைப் போல ஆகிவிட்டது.
என்னுடைய ஒரிஜினல் ஸ்க்ரிப்ட் அப்படியே எடுக்கப்பட்டிருந்தால், இன்னமும் லைவ்லி (lively) ஆக, நன்றாக, ஒரு ஸ்க்ரீன்பிளே என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருந்திருக்கும். ஆனால், இதில் எனக்கு மனவருத்தம் கிடையாது. பாலச்சந்தர், அனந்து, கமல் மற்றும் ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவம் நன்றாகவே இருந்தது.
நாடோடித் தென்றல் படத்திலும் கிட்டத்தட்ட இதுவே நடந்தது. ஒரிஜினலாக, நான் எழுதிக் கொடுத்த கதை ஒரு ஆங்கிலேய கலெக்டர் கொலை செய்யப்படுவது பற்றி. ஆனால், பாரதிராஜா அதை சுதந்திரம் கிடைக்கும் முன் இருந்த இந்தியாவில் நடந்த ஒரு முக்கோண காதல் கதையாக மாற்றிவிட்டார்.
இதற்காக நான் இயக்குனர்களை குறை சொல்ல மாட்டேன். ஏற்கனவே சொன்னபடி, இரண்டு ஆடியன்ஸும் வேறு வேறு. இயக்குனர்களுக்கு அவர்களது மீடியம் பற்றி நன்கு தெரியும்.
பிறகு, எனக்கு மிகவும் திருப்தி அளித்த படங்கள், மணி ரத்னம் இயக்கிய “ரோஜா” மற்றும் ஷங்கர் இயக்கிய “இந்தியன்”.
நான் வசனம் மட்டுமே எழுதியிருந்தாலும், ரோஜா படத்தின் கிட்டத்தட்ட எல்லா வேலைகளிலும் நான் பங்கு கொள்ள முடிந்தது.
இந்தியன் படத்தில் ஷங்கர் அடுத்தடுத்து வரும் காட்சிகளை சொல்லிவிடுவார். நான் வசனம் எழுதுவதிலிருந்து, தனக்கு எது தேவையோ அதை ஷங்கர் எடுத்துக் கொண்டார்.

=============

கேள்வி: “மருத நாயகம்” கதையை கமலுக்கு நீங்கள்தான் பரிந்துரைத்தீர்களா??
சுஜாதா பதில்: ஒருவிதத்தில் பார்த்தால், ஆம்.
கிட்டத்தட்ட 7 – 8 வருடங்களாக கமல் ஒரு சரித்திரப் படத்திற்கு பொருத்தமான கதையைத் தேடி வருகிறார் (1998 இல் நடந்த நேர்காணல் இது நண்பர்களே). அம்பிகாபதி படத்தை, வசனமே இல்லாமல் வெறும் பாடல்கள் மட்டுமே வைத்து மறுபடியும் எடுக்கலாமா என்று கூட என்னிடம் கேட்டார். நான் மிகப் பழைய கதைகளை விடுத்து சமீபத்து சரித்திரத்தைப் படமாக எடுக்கலாமே என மருத நாயகத்தின் கதையை பரிந்துரைத்தேன்.
இந்த சமயத்தில்தான், தமிழ் புலவர் நா,வானமாமலை எழுதி, மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் பாடமாக இருக்கும் ஒரு நாட்டுப்பாடலை படித்தேன். அது மிகவும் நன்றாக இருக்கவே, அதை கமலிடம் காட்டி, இதையே எடுக்கலாமே என்றேன். கமல் முதலில் சிறிது தயங்கினார். பிறகு, அதை முழுவதும் படிப்பதாக வாக்களித்தார்.
அதன் அறிமுகத்தில், “யூஸுஃப் கான் என்பவர் முதலில் இந்து வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்தவர். முதலில் அவர் பெயர் மருத நாயகம்” என்று இருந்ததைப் பார்த்து விட்டு கமல் அதை சரித்திரப் படமாக எடுக்கலாம், அதற்கு எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன என்றார். மத மாற்றம் நிகழ, சமூக அடக்கு முறையும் ஒரு காரணம், படமாக எடுக்க அது நல்ல சப்ஜெக்ட் என்றார்.

=============

கேள்வி: ஆனால், மருத நாயகம் கதை அதிகம் பேருக்குத் தெரியாதே??
சுஜாதா பதில்: மருத நாயகம் கதைக்களம் நன்றாக இருக்கிறது. நிறைய நிகழ்ச்சிகள் கவனத்தைக் கவர்கின்றன. இது ஒரு மன்னனைப் பற்றிய சம்பிரதாயமான கதை அல்ல. ஃபிரென்ச் (French) ராணுவத்தால் பயிற்சி பெற்று அவனால் எதிரிகளிடையே திறமையாக, நுணுக்கமாக உலவ முடிகிறது. ஆங்கிலேயர்கள் அவனைப் பற்றி தெரிந்து கொண்டு, முதலில் மதுரையில் வரி வசூலிப்பவனாக நியமனம் செய்து, பிறகு ஒரு வருடத்தில் அவன் நன்றாக முன்னேறும் போது, ஆங்கிலேய அடக்குமுறைக்கு அடிபணியாதவன் என்ற காரணத்தினால் தூக்கிலடப்படுகிறான். மிகச் சிறிய காலத்திலேயே ஒரு மிகச் சாதாரணமான நிலையிலிருந்து, மிக உயரத்துக்கு வந்து, எதிர்பாராமல் மரணிக்கும் கதை கமலை மிகவும் கவர்ந்தது. திரைப்படம் எடுக்கத் தூண்டியது.
கிட்டத்தட்ட 80% படம் ஹில் என்பவர் எழுதிய “மருத நாயகத்தின் வாழ்க்கை வரலாறை” ஒட்டியே இருக்கும். எங்கெல்லாம் சரியான கதைக் கோர்வை கிடைக்கவில்லையோ அங்கே எங்கள் கற்பனையை பயன்படுத்தியுள்ளோம்.
உதாரணத்திற்கு, மருத நாயகம் ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாறினான் என்பதற்கு சரியான காரணம் கிடைக்கவில்லை. இந்த இடத்தில். அந்த கதாபாத்திரத்தின் கடந்த காலத்தில் பயணித்து கமல் ஒரு அருமையான காரணத்தை உருவாக்கி விட்டார்.

=============

கேள்வி: ஆனால், மருத நாயகம் கதாபாத்திரம் வீரபாண்டிய கட்டபொம்மன் பாத்திரத்தோடு ஒப்பீடு செய்யப்படும் அபாயம் உள்ளதே !
சுஜாதா பதில்: கமலைப் போன்ற ஒரு மிகச் சிறந்த நடிகர் இது போன்ற ஒப்பீடுகளையெல்லாம் தன் தேர்ந்த நடிப்பால் சமாளித்துவிட முடியும். கமல், தான் நடிக்கும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு முழுமையை கொண்டுவர முடியும்.
அதுமட்டுமல்லாமல், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் முக்கிய ஆங்கிலேய கதாபாத்திரத்தில் வரும் “ஜாவர்” சீதாராமன் போன்ற நடிகர்கள் உடைந்த தமிழில் பேசுவார்கள். அன்றைய ஆடியன்ஸ் அதை ஏற்றுக்கொண்ட மாதிரி இப்போது செய்ய முடியாது,
இந்தப் படத்தில் ஆங்கிலேய, ஃபிரென்ச் (French) நடிகர்கள் அவர்களுடைய தாய் மொழியில் பேசும்போது பின்னணியில் தமிழில் வசனம் கேட்கும் para-dubbing முறையைப் பயன்படுத்தி அந்தந்த காட்சிகளுக்கு ஒரு நம்பகத் தன்மையை கொண்டுவர கமல் முயற்சி செய்வார்.

=============

கேள்வி: ஒரு தெற்கத்திய வீரனுடைய கதை வாழ்க்கை நிகழ்ச்சிகள்…இதை தேசிய / உலக அளவில் கொண்டு செல்லும் போது, அந்தக் கதாபாத்திரத்தின் “மண் வாசனை” (பூர்விக மணம்) அதற்கு தடையாக இருக்காதா?
சுஜாதா பதில்: ஏன் இருக்க வேண்டும்? மருத நாயகம் ஒரு சரித்திர கதாபாத்திரமாக இருக்கலாம், ஆனால், அவன் புகழ் பெற்றவனல்ல. இந்தக் கதையில் ஒரு மனிதனின் சாதனைகளையும் / வேதனைகளையும் காட்ட முற்படுகிறோம்.”ஒரு மனிதனின் வாழ்வும் வீழ்வும்” என்பதுதான் மருத நாயகத்தின் ஒரு வரிக் கதை.
இதைப் போன்ற கரு உலகெங்கிலும் வரவேற்பு பெறும். “ஜூராஸிக் பார்க்” போன்ற படங்கள் அதனுடைய தொழில்நுட்ப சிறப்பினாலும், பிரமாண்ட காட்சிகளாலும் நன்றாக ஓடியதைப் போல மருத நாயகம் திரைப்படமும் தலைசிறந்த தொழில்நுட்பக் காட்சிகளுடன் வரும்.
படத்தின் போக்கு ஒரே சீரான பாதையில் செல்லும் லீனியர் (linear) பாணியில் இருந்தாலும், பின்னணியில் ஒரு குரல் மருத நாயகம் பற்றியும், அவனுடைய பின்புலத்தைப் பற்றியும் / சரித்திர முக்கியத்துவம் பற்றியும், படம் நெடுக சொல்வது போல அமைக்க கமல் திட்டமிடுகிறார்.

=============

கேள்வி: இந்தப் படத்திற்காக கமல், ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதை அமைக்கிறார் என்று கேள்விப்பட்டோம். அதைப் பற்றி சற்று விரிவாக சொல்ல முடியுமா?
சுஜாதா பதில்: இந்தப் படத்திற்காக, ஹாலிவுட் படங்களுக்கு செய்வது போல, இந்தியாவில் முதன்முறையாக ஒரு கம்ப்யூட்டர் உதவி கொண்டு திரைக்கதை அமைக்கும் திட்டமிருக்கிறது.
இதெற்கென நிறைய மென்பொருள் (software) கிடைக்கும்போது, கமல் “மூவி மேஜிக்” எனும் சாஃப்ட்வேரை உபயோகிக்கத் திட்டமிட்டுள்ளார். திரைப்படத்தின் எந்தவொரு விஷயத்தையும் இதன் மூலம் அணுகலாம்.

=============

கேள்வி: “மருத நாயகம்” படத்தில் உங்கள் பங்கு என்ன?
சுஜாதா பதில்: இந்த “மூவி மேஜிக்” எனும் சாஃப்ட்வேரை உபயோகிக்கத் தேவையான தமிழ் எழுத்துருவை (Fonts) நான் உருவாக்கியுள்ளேன். கமல் எழுதப் போகும் திரைக்கதையை நான் மேற்பார்வையிடுகிறேன்.
இது போன்ற வேலைக்கு ஹாலிவுட் வைத்திருக்கும் பெயர் “ஸ்க்ரீன்பிளே டாக்டர் (Screenplay Doctor)”. அந்த வேலையைத் தான் நான் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

=============

கேள்வி: இது தவிர, வேறு என்னென்ன நீங்கள் செய்கிறீர்கள் ?
சுஜாதா பதில்: மணி ரத்னம் அவர்களின் “தில் ஸே (Dil Se)” படத்திற்கான வேலைகளை செய்து வருகிறேன். மணி ரத்னம் என்னை அந்தப் படத்திற்கான களத்தைச் சொல்லி வசனம் எழுதச் சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தையும் அதைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் ஒரு சேர ரிலீஸ் செய்யலாம் என ஐடியா இருக்கிறது.
இது தவிர,இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி / மாதுரி தீட்சித் ஜோடியாக நடிக்க “இன்ஜினீயர்” என்ற படம் என் வசனத்தில் உருவாகிறது. இது சுவாரசியமான படமாகும்.

===================================

குறிப்பு:
இதைப் படிக்கும்போது இந்த 24 வருடங்களில் எதையெல்லாம் இழந்து விட்டோம் என நினைத்து பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது.

சுஜாதாவின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதை மறுபடி, மறுபடி உணருகிறோம்.