படைப்பாக்கமும், பாரம்பரியக் கரிசனமும்/ப.சகதேவன்

படைபாக்கத்தில் ஒரு நிலைப்பாடு, பாரம்பரியக் கரிசனம் பற்றிய இன்னொரு நிலைப்பாடு என்பதாக கன்னடத்தில் இருக்கிறபோது அதுவும் ஆரோக்கியமாக இருக்கிறபோது தமிழில் அப்படி இல்லாதது கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது… அனந்தமூர்த்தியும், பைரப்பாவும் சாதியைப் பற்றி விவாதிக்க தங்களது புனைகதைகளைப் பயன்படுத்திக்கொண்ட அளவுக்கு தமிழ்ப் பிராமண எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை..பொது வெளியில் கன்னட பிராமண எழுத்தாளர்கள் சாதீய விவாதத்தில் வெளிப்படுத்திய தீவிரத்தைத் தமிழ்ப் பிராமண எழுத்தாளர்கள் காண்பிக்கவில்லை..ஜானகிராமன் நடைமுறை வாழ்வுக்கும், வைதீகத்திற்குமான எதிராடலை ‘அம்மா வந்தாள்’ நாவலில் காண்பித்தார்.. சி.சு.செல்லப்பா காந்தீய நோக்கிலான சாதி விமர்சனத்தை தனது ‘சுதந்திர தாகம்’ நாவலில் (மிக மென்மையாக)க் காண்பித்தார்..மற்றபடி சாதீய விமர்சனம் என்பது திராவிடக்கழகத்தினருக்கும், தமிழ்த்தேசீய வாதிகளுக்கு மட்டுமேயுரிய விவாதப்பொருளாக இருந்து வந்திருக்கிறது.. கன்னடத்தில் தலித் இலக்கியத்தை அடையாளம் கண்டவர்களும், அவற்றைப் போற்றியவர்களும் பிராமண எழுத்தாளர்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்,
பாரம்பரியக் கரிசனத்தில் மதத் தேசீயம் மிக இயல்பாகக் கலந்து வந்து விடுகிறது.. இந்த வாதத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தப்பக்கம் நிற்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது..பைரப்பா இதில் மிக சாதுரியமாக செயல்படுகிறார். அவரது வாதங்களை எதிர்கொள்வது மிகவும் கடினம்..’ஆவரணா’ நாவல் முன் வைத்த ஆதாரபூர்வமான கருத்துக்களை யாரும் எதிர்கொண்டதாகத் தெரியவில்லை..இந்த விஷயத்தில் பைரப்பா மட்டுமல்லாமல் ராஜீவ் மல்ஹோத்ரா, கோயன்ராட் எல்ஸ்ட், நம்மூர் அரவிந்தன் நீலகண்டன் போன்ற பலர் பாரம்பரியக் கரிசன வரிசையில் நிற்கிறார்கள்.. இவர்களுக்கு எதிரான கருத்தாடல்களும் சன்னமாகிக் கொண்டு வருகின்றன.. கரிசனம் என்ற பெயரில் வரும் அரசியல் அடக்குமுறைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.. ஏதாவது ஒரு வகையில் தேசீய உணர்வு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் போல….