ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை /ஆர் வத்ஸலா

ஆறு மணிக்கு எழுந்தாள்
தலைமுடியை, நைட்டியை சற்று சரி செய்து கொண்டு
தயாராக கதவு பின்னால் கொக்கியில் தொங்கும் துபட்டாவை
-இப்பொதெல்லாம் ஏனோ அதை ஷால் என்கிறார்கள் –
மேலெ போட்டுக் கொண்டு வாசலில் பையில் தொங்கிய பால் பாக்கெட்டுகளை
கொண்டு வந்து சமையலறையில் வைத்து விட்டு,
வாசலில் தண்ணீர் தெளித்து கோலமென்ற பெயரில் மொக்கு மாவால் ஏதோ போட்டாள்
துபட்டாவை அதன் கொக்கியில் மாட்டிவிட்டு
பால் பாக்கெட்டை கழுவி, ஃப்ரிஜ்ஜை திறந்து உள்ளே எவ்வளவு பால் இருக்கிறது, இன்று காலை எவ்வளவு பாக்கெட் தேவை என தீர்மானித்து
மிச்சத்தை ’சில் ட்ரே’யில் போட்டு வைத்து
பால் பாக்கெட்டை கத்திரிக்கோலால் கீறி
பாலை பால் குக்கரில் ஊற்றி கேஸ் அடுப்பை கீழே திறந்து
பற்ற வைத்து குக்கரை ஏற்றினாள்
ஃபில்டரில் பொடி போட்டு
வெந்நீர் ஊற்றினாள்
பால் பாக்கெட் கவர்களை மக்கா குப்பை பக்கெட்டில் போட வசதியாக
கழுவி காய வைத்தாள்
பல் தேய்த்தாள்
காபி குடித்தாள்

ஃப்ரிஜில் இருந்த மிகப் பழைய பதார்த்தங்களை
மக்கும் குப்பைக்கான பக்கெட்டில் போட்டாள்
சட்னிக்கு அரைத்தாள்
சாம்பார் செய்தாள்
‘ஜிம்’முக்கு பொகும் மகனுக்கு இரண்டு முட்டை ஆம்லெட் போட்டுக் கொடுத்தாள்
மற்றவர் ஒவ்வொருவராக எழுந்து வர அவரவர் பழக்கத்திற்கேற்ப
காபி அல்லது தேநீர் கொடுத்தாள்
மாமனாருக்கு வெல்லம் போட்ட சுக்கு காபி தயாரித்து கொடுத்தாள்
தோசை வார்த்து
எல்லோருக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டாள்
ஞாயிறன்று வேலைக்காரிக்கு லீவு என்பதால்
பாத்திரம் தேய்த்தாள்
அரை கப் காபி பேப்பர் படிக்கும் கணவருக்கு கொடுத்து விட்டு
தான் ஒரு முக்கால் கப் எடுத்துக் கொண்டு பால்கனியில் உட்கார்ந்தாள்

One Comment on “ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை /ஆர் வத்ஸலா”

Comments are closed.