குரங்கு/முபீன் சாதிகா

காட்டில் மரம் வெட்ட சென்றிருந்தான் அவன். மதியம் மரத்தில் ஏறி அமர்ந்து தூங்கிவிட்டான். ஆழ்ந்த தூக்கத்தில் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டான். அதில் அவனது கழுத்து பின்னோக்கித் திரும்பிவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தும் அவன் கழுத்தும் தலையும் முன்னோக்கி வரவே இல்லை. பல மருத்துவமனைகளுக்குச் சென்றான். யாராலும் அதைத் திருப்ப முடியவில்லை. அப்படி திருப்ப வேண்டும் என்றால் அவன் கழுத்தைவெட்டி மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்கையில் அவன் உயிர் இழக்க நேரிடலாம் என்றும் கூறிவிட்டார்கள். அவன் பெரும் சோர்வுற்று மீண்டும் அதே காட்டிற்கு வந்து தான் விழுந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டான். அப்போது மேலே அமர்ந்திருந்த ஒரு குரங்கு அவன் அருகே ஒரே பாய்ச்சலில் வந்து நின்றது. அதன் கையில் ஒரு வாழைப் பழம் இருந்தது. அதனை அவன் தலைக்கு மேலே உயர்த்தி வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் நோக்கி நகர்த்திக் காட்டியது. அதை அண்ணாந்து பார்த்தான் அவன். இப்படியே பல முறை செய்தது. ஒரு முறை சலிப்புற்று அவன் கீழே குனிந்தான். அவன் கழுத்து வலப்புறமாகப் பாதி அளவு திரும்பிவிட்டது. மீண்டும் அந்தக் குரங்கு அந்தப் பழத்தை அவன் தலைக்கு மேல் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக நகர்த்திக் காட்டியது. அதை அண்ணாந்து பார்த்தான். இதை பல முறை செய்தது. அவன் கழுத்துவலியால் மீண்டும் சட்டென்று திரும்பினான். அவன் கழுத்து மீண்டும் முன்னோக்கி வந்துவிட்டது. அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. தனக்கு பழையபடி கழுத்தைத் திருப்ப முடிவதும் எந்த வலியும் இல்லாமல் போனதும் அவனுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தன. அந்தக் குரங்கை அக்கம்பக்கம் தேடினான். அது மறைந்து போயிருந்தது. அது வைத்திருந்த வாழைப்பழம் அவன் அருகில் கிடந்தது.