தொலைந்துபோன கைக்கடிகாரம்/மாதவ பூவராக மூர்த்தி 

“பிருந்தா என் கடிகாரத்தை காணும்.எங்கயோ விழுந்துடுத்து”என்று சொன்னபோது நாங்கள் பழமுதிர் சோலை போகும் பஸ்ஸில் இருந்தோம்.

அத்தையின் கொள்ளுப் பேரன் விக்னேஷ் கல்யாணத்திற்காக நானும் பிருந்தாவும் மதுரை போனோம். மண்டபத்துக்கு பக்கத்தில் இருக்கும் பிருந்தாவின் ஃபிரண்ட் ராஜி ஆச்சி வீட்டில் தங்கியிருந்தோம்.

கல்யாணம் சிறப்பாக நடந்தது.மறுநாள் காலை ஆட்டோ வரச்சொல்லி அழகர்கோவில் பழமுதிர் சோலை முருகனைப் பார்க்க புறப்பட்டோம். போகும் வழியில் தல்லாகுளம் ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் தரிசனம் செய்தோம். பசுமையான வயல்வெளிகளை ரசித்து கொண்டு போனோம். செருப்பை ஆட்டோவில் விட்டு விட்டு போனோம்.

கோவில் வாசலில் இருக்கும் பதினெட்டாம் படி கருப்புசாமி தரிசனம் பார்த்து கள்ளழகர் கோவில் உள்ளே நுழையும் போது ஸ்வாமி புறப்பாடு. யானை முன்னால் வர பெருமாள் பல்லக்கில் கண்ணாடி சேவை. உள்ளே போய் அழகர் தரிசனம் தாயார் தரிசனம் செய்தோம்.
வெளியே வந்து பழமுதிர் சோலை மினி பஸ் வரிசையில் நின்றோம். ஒரு பஸ் வந்து நிறைய பேர் ஏறினார்கள். அடுத்த பஸ்ஸில் முதலில் ஏறி உட்கார்ந்த போதுதான் கவனித்தேன். மனசு பகீரென்றது. பிருந்தா விடம் சொன்னேன்.

“கட்டிண்டு வந்தேளா,இல்ல ராஜி வீட்டு டி வி மேஜையில வைச்சுட்டேளா? நன்னா ஞாபாகப்படுத்தி பாருங்கோ ” என்றாள்.

“இல்ல பிருந்தா நன்னா ஞாபகம் இருக்கு தல்லாகுளத்துல கூட மணி பாத்தேன்” என்றேன் வெறுங்கையை தடவியபடியே.

பிருந்தா உடனே கூட்டமாக இருந்த அந்த பஸ்ஸில் கீழே குனிந்து தேடி இங்கு இல்ல என்று உதட்டை பிதுக்கினாள். “எங்க விழுந்ததோ, யார் கைல கிடைச்சுதோ? சரி போனுன்னு இருக்கு மறந்துட்டு ஸ்வாமி தரிசனம் பண்ணுவோம்.” என்று என்னை சமாதானப் படுத்தினாள்.

பஸ் காட்டுப்பகுதியில் வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது.
நான் மௌனமாய் வந்தேன். மறக்க நினைத்தேன்.

“நல்ல வாட்ச் நம்ம கார்த்திக் வாங்கி கொடுத்தது ” என்றாள்.

ஆமாம் சில சில வருடங்களுக்கு முன் என் பிறந்தநாளில் ராத்திரி 12 மணிக்கு எழுப்பி ஹாப்பி பர்த்டே சொல்லி இந்த வாட்ச் பரிசாக கொடுத்தான். அதிலிருந்து நான் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கட்டிக் கொண்டு போவேன். நல்ல மாடல் இந்த கல்யாணத்தின் போது இருக்கட்டும் என்று கட்டிக் கொண்டு வந்தேன் நேற்று கல்யாண மண்டபத்தில் கூட இருந்தது. இரவு ராஜி வீட்டில் கழட்டி டிவி மேஜை மேல் வைத்திருந்தேன். காலை டிபன் சாப்பிடுவதற்கு முன் எடுத்து கட்டிக் கொண்டது நன்றாக நினைவுக்கு இருக்கிறது. இப்பொழுது தொலைத்து விட்டேன் எதையாவது தொலைத்தால் மனது சங்கடப்படுகிறது. அதுவும் நமக்கு பிரியமானவர்கள் கொடுத்த பொருள் என்றால் இன்னும் வருத்தம் அதிகமாகிறது என்ன செய்வது எங்கே விழுந்ததோ. நான் யோசிப்பதை பார்த்து “விடுங்க சாமி தரிசனம் பண்ணுவோம்” என்றாள் பிருந்தா.
பஸ்ஸிலிருந்து இறங்கி டிக்கெட் வாங்கி, முருகனை அருகில் தரிசனம் செய்தோம் பிரதட்சணம் வந்தோம் ராஜியும் பிருந்தாவும் நெய் விளக்கு ஏற்றினார்கள். நான் பிரசாத ஸ்டாலில் புளியோதரை வாங்கினேன். வரும் வழியெல்லாம் குரங்குகளின் நடமாட்டம். கோவிலுக்குள் நிறைய குரங்குகள்.
வெளியே வந்து பஸ்ஸில் ஏறினோம். இறங்கும் பஸ்ஸில் கூட்டமே இல்லை ஆறு பேர் ஏறியவுடன் பஸ் புறப்பட்டது. கீழே வந்து ஆட்டோவில் நான் முதலில் ஏறி உட்கார்ந்தேன் பிருந்தாவும் ராஜியும் கொய்யாப்பழம் வாங்கி வந்தார்கள்.
பிருந்தா வந்தவுடன் ஏறி உட்கார்ந்து “இங்க பாருங்க” என்று காண்பித்தாள்.
நான் “செருப்பு தானே இறங்கும்போது போட்டுக்கிறேன்”என்றேன் “அது இல்ல உங்க வாட்ச்” என்றாள். பார்த்தால் இரண்டு செருப்புகளுக்கு இடையில் சமர்த்தாக படுத்துக் கொண்டிருந்தது என் தொலைந்து போன கடிகாரம்.
” உழைத்த காசு வீணாகாது, எல்லாம் பெருமாள் தயவு. எடுத்துக்கட்டுங்க என்றாள். மகிழ்ச்சியுடன் குனிந்து எடுத்து பிருந்தா கொடுத்த கடிகாரத்தை கையில் கட்டினேன் மனசு திருப்தியாக இருந்தது.