கலைஞரின்நினைவுநாள்இன்று/சுரேஷ் கதான் 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, அப்போது. இப்போது கள்ளக்குறிச்சி தனி மாவட்டம். அரசு வேலைக்குச் சேர்ந்த புதிது.

AKT லாட்ஜில் ரூம் எடுத்திருந்தேன். மறுநாள் பள்ளிக்கு போன போது தலைமையாசிரியர் அரங்க. எழிலரசன் எங்க தங்கல் என்று கேட்டார். சொன்னேன். அதெல்லாம் எப்டி மதுரைக் காரரே கட்டும்… நீங்க வாங்குற 4500 ரூவா சம்பளத்துக்கு… என்றார். ஒவ்வொரு முறையும் காசம்பட்டி – வத்திபட்டி- நத்தம் – கொட்டாம்பட்டி- திருச்சி – உளுந்தூர்பேட்டை- கள்ளக்குறிச்சி என்று ஆறு பேருந்துகள் மாறி மாறி பிடித்து வருவதற்கு 200 ரூவாய் ஆகும். லாட்ஜ் நாள் வாடகை 200 ரூ… சாப்பாடு…இன்ன பிற செலவுகளை நினைத்தால் தலை சுற்றியது. என்ன நடந்தாலும் வீட்டிலிருந்து பணம் மட்டும் வாங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். தலைமையாசிரியர் பள்ளிக்கூடத்திலயே தங்கிக்கொள்ளச் சொன்னார். எத்தனை பெரிய ஆறுதல்! ஏற்கனவே தங்கியிருந்த இரண்டு ஆசிரியர்களுடன் பள்ளியிலேயே தங்கிக்கொண்டேன். காலையிலேயே இட்லிக்கு ஈரல் சாப்பிட்டு பழக்கப்பட்ட நான் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு சைவ மெஸ்சில் இட்லிக்கு சாம்பார் சாப்பிட்டு மெம்பரானேன். வாராவாரம் வீடு வந்தால் செலவாகுமென்று மாதமொருமுறை வருவதெனத் தீர்மானித்தேன். அம்மா அடிக்கிறாங்க, திட்டுறாங்க என்று குட்டிப் பெண் பாரதி போன் செய்யும் போதெல்லாம் மொட்டை மாடியில் தண்ணி தொட்டி மறைவில் நின்று அழுவேன். மனைவி எப்போதாவது கண்கலங்குவாள். அம்மா பத்திரமா இருந்துக்கய்யா என்பார்கள். தவறு செய்துவிட்டோமா… இத்தனை குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு வந்தது தவறுதானோ என்று குழம்பத் தொடங்கியிருந்தேன். 2006 மே தேர்தலில் திமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி தொகுப்பூதிய சம்பளதாரர்களுக்கு காலமுறை ஊதியம் அளித்து உத்தரவிட்டார், கலைஞர். 4500 ரூவாய் 14500 ஆக மாறியது. வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்ற பிடிப்பைத் தந்தார், கலைஞர். தமிழில் பொருளியல் படிப்போருக்கு உதவித்தொகை, முதல் தலைமுறைப் பட்டதாரி, அரசுப் பணித் தேர்வுகளுக்கு கட்டணத்தில் சலுகை, அரசு வேலைகளில் உள் ஒதுக்கீடு, தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை போன்ற அவரது திட்டங்களால் நேரடியாகப் பயன் பெற்றிருந்த நான் மதிப்புமிக்க ஊதியத்தையும் அவராலேயே பெற்றேன்.

கலைஞர் தந்த

வாழ்வு இது.

கலைஞரின்

நினைவுநாள்

இன்று.

May be an image of 1 person, beard and standing