ஓலம்/முபீன் சாதிகா

அவளுக்கு தன்னுடைய மகன் இரவில் எழுப்பும் ஓலம் பற்றிய கவலை ஆட்டிப் படைத்தது. அவன் பிறந்ததிலிருந்து இந்த ஓலத்தை இரவில் எழுப்பத் தொடங்கினான். அவள் எவ்வளவு சமாதானம் செய்தாலும் நள்ளிரவில் அவன் ஓலம் தொடங்கிவிடும். அவன் எவ்வளவுதான் ஆழ்ந்து தூங்கினாலும் நள்ளிரவில் மட்டும் ஓலமிட அவன் தவறியதே இல்லை. அந்த ஓலம் நாளுக்கு நாள் அதிகரித்து பல கிரகங்களைத் தாண்டி அண்டங்களை எட்டத் தொடங்கியிருந்தது. இதனால் அவள் இருந்த வீட்டு உரிமையாளர்கள் அவளைத் தங்க அனுமதிக்காமல் துரத்தினார்கள். அவளும் சோர்ந்து போய் ஒரு காட்டிற்கு வந்து சேர்ந்தாள். இரவில் அவன் எழுப்பிய ஓலத்தைக் கேட்ட வனவிலங்குகள் அச்சத்தில் அங்குமிங்கும் சிதறி ஓடின. அந்தக் காட்டில் ஒரு முனிவர் தவம் இருந்து கொண்டிருந்தார். இந்த ஓலம் அவரைப் பெரிதும் தொல்லைப்படுத்திவிட்டது. இவர்களைத் தேடி வந்தார். இவளிடம் மகனுடைய ஓலத்தைப் பற்றிக் கேட்டறிந்தார். அடுத்த நாள் ஒரு குகைக்கு அழைத்துச் சென்றார். அந்தக் குகைக்குள் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தின் ஆழத்தில் பூக்களும் பழங்களும் நிறைந்த ஒரு சோலை தென்பட்டது. அங்கே அவர்களை அவர் அழைத்துச் சென்றார். அந்தக் குளத்தில் நீர் அவர்களை நனைக்கவில்லை. அப்படியே வழுக்கிக் கொண்டே அந்தச் சோலைக்கு வந்தடைந்தார்கள். அந்தச் சோலையின் நடுவில் ஒரு மரம் இருந்தது. இரவு அவளுடைய மகன் ஓலமிடத் தொடங்கியவுடன் அந்தக் கனியைப் பறித்து அவனுடைய வாயில் வைத்தார் துறவி. உடனே அவளுடைய மகனின் ஓலம் நின்றது துறவியின் ஓலம் தொடங்கியது.