இன்னுமொரு ரயில் பயணம்……/மாதவ பூவராக  மூர்த்தி 

மதுரை விஜயம் முடிந்து சென்னை திரும்ப வெள்ளி இரவு ராஜியிடம் விடைபெற்று 8.50க்கு ஆட்டோவில் மதுரை ஸ்டேஷனுக்கு வந்த போது மணி 9.10.. ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்ல மாதிரி எங்கள் லக்கேஜ்களை பார்த்துவிட்டு ஏசி கம்பார்ட்மெண்ட் தானே நான் என்ட்ரன்ஸ்ல இல்லாம இன்னும் கொஞ்சம் முன்னாடி கொண்டு போய் விடுகிறேன் என்று முதல் பிளாட் வரத்தின் மிக அருகில் கொண்டு வந்து விட்டார் முதல் பிளாட்பார்ம் என்பதால் படி ஏறும் அவஸ்தை இல்லை

அவரே லக்கேஜ்களை இறக்கி வைத்து போர்டரிடம் பொதிகை எந்த பிளாட்பாரத்தில் வரும் என்றார் முதல்ல இல்லனா ரெண்டாவது பிளாட்பாரம் வரும் என்றார். போர்ட்டர் சொன்னா கரெக்டா இருக்கும் என்று புறப்பட்டார்

முதல் பிளாட்பாரத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தது. பொதிகை வர நிறைய நேரம் இருந்தது. இந்த முறை ஒன்றும் பிரச்சனை இருக்க நியாயம் இல்லை கார்த்திக் இடம் முன்பே பேசி அப்கிரேட் ஆன விஷயம் தெரிந்து கொண்டோம். சந்தோஷமாக இருந்தது ரயில்வேயை வாழ்த்தினோம். பி2 63 70 1 சைடு லோயர் இன்னொன்று அப்பர் பர்த் டிரைவில் ஏறி மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு நிதானமாக உட்கார்ந்து கொண்டோம்.

கொஞ்ச நேரம் கழித்து அறிவிப்பு வந்தது பொதிகை இன்னும் சேர்ந்து நேரத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும் என்று சொன்னார்கள். பிருந்தாவும் நானும் அருகில் இருந்த லிப்ட்டில் ஏறி பிளாட்பாரத்தில் எஸ்கலேட்டரில் இறங்கி இரண்டாவது பிளாட்பாரம் போனோம். கோச் பொசிஷன் விளக்குகள் எரிந்தன அதன்படி பி2 வில் எதிரில் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.

நான் எதேச்சையாக அறிவிப்பு போர்டை பார்த்தேன். அதில் பொதிகை ட்ரெயின் நம்பர் தப்பாக போட்டு இருந்தது 12 634 பதிலாக 12 662 என்று போட்டிருந்தது. “பிருந்தா வண்டி நம்பர் தப்பா இருக்கு” என்றேன்.

“இருக்காதே ரயில்வே காரா தப்பு பண்ண மாட்டா. நீங்க டிக்கெட்டை எடுத்து மெசேஜ் பாருங்கோ” என்றாள்.

நான் மெசேஜ் பார்த்தேன் 12 634 தான் போட்டிருந்தது. மெசேஜில் ட்ரெயின் பெயர் போடுவதில்லை

“எதுக்கும் நான் யாரையாவது கேட்கிறேன்’ என்று எதிரில் நின்ற ட்ரெயினில் இறங்கிய ஒருவரிடம் கேட்டாள்.நானும் அவள் அருகில் நின்றேன். அவள் திரும்பி “நீங்க லக்கேஜை பாத்துக்கோ”என்றாள்.

அவர், “பொதிகை 12 662 தான் இன்னும் கொஞ்ச நேரத்துல இரண்டாவது பிளாட்பாரம் வரும் நீங்க போக வேண்டிய ட்ரெயின் நம்பர் என்ன” என்று கேட்டார்.

நான், 12 634 என்று சொன்னேன்.

அவர் போனில் பார்த்து, “சார் அது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இப்பொழுது விருதுநகரில் இருக்கு வரும் வெயிட் பண்ணுங்க” என்றார். டென்ஷன் அதிகமானது

“கார்த்திக்கை கேட்டேளா அவன் எதுல பண்ணினான்” என்றாள். ப

“இல்ல பிருந்தா பாண்டியன் சீக்கிரம் போய்விடும் அதனால அவன் கொஞ்சம் லேட்டா வர டிரெயின்ல புக் பண்றேன் என்ன டிரெயின் என்று கேட்டான்.”

“எதில வேணாலும் புக் பண்ணு” அவன் பொதிகை கன்னியாகுமரி எதிலயாவது பண்றேன்னான்.

நான் கார்த்திக்கிற்கு போன் பண்ணி, “என்னடா கார்த்திக் பொதிகை ன்னு சொன்னேன் கன்னியாகுமரியில் பண்ணி இருக்கியே” என்றேன்.

அவன், “நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே பொதிகை இல்லைன்னா கன்னியாகுமரி அப்படின்னு தானே சொன்னேன் கன்னியாகுமரியில் இருந்தது பண்ணிட்டேன் உன்கிட்ட சொன்னேனே” என்றான். சொன்னதாக நினைவில் இல்லை.

பிருந்தா, இப்ப என்ன பண்றது?” என்றாள்.

“கன்னியாகுமரியில் போக வேண்டியதுதான்”

“இந்த நேரத்துல எப்படி தான் உங்களால ஜோக் அடிக்க முடியறதோ. நல்ல வேலை பார்த்தேள் பார்க்காமல் பொதிகைன்னு இதுல ஏறினோம்னா பாதி வழியில் இறக்கி விட்டு இருப்பா” என்றாள்.

அதற்குள் நாங்கள் போகாத பொதிகை பிளாட்பாரத்தில் வந்தது பிருந்தா ஏசி கம்பார்ட்மென்ட் டிடியிடம் போய் கன்னியாகுமரி எந்த பிளாட்பாட்டில் வரும் என்றாள். அவர் நல்லவர் நிதானமாக அம்மா கன்னியாகுமரி ஃபர்ஸ்ட் பிளாட்பார்ம்ல வரும் என்றார்.

வந்து, “எதையும் சரியா பாக்குறது இல்ல இப்ப மறுபடியும் ஒண்ணா பிளாட்ஃபாம் போகணும் வேலையற்ற வேலை எஸ்கலேட்டர் வேற ஒர்க் பண்ணல லக்கேஜ் தூக்கிண்டு மூச்சு முட்ட ஓடணும்.”

நான் பதில் பேசவில்லை எடுத்துக்கொண்டு நடந்தேன். மெதுவாக படி ஏறினோம் நல்ல வேலையாக முதல் பிளாட்பாரத்தில் லிப்ட் ஒர்க் பண்ணியது. ஒரு போலீஸ்காரர் எங்களுடன் லிப்டில் ஏறினார் பிருந்தா கதவு மூடு முன், “ஒண்ணாம் பிளாட் பார்ம் போடுங்க” என்றதும் . அவர் “அம்மா இங்கே இருக்கிறதே ஒரே ஒரு ப்ளோர்தான்” என்றார். நான் சிரிப்பை அடக்கிக் கொண்டே, “அவங்க பிளாட்பார்ம் நம்பர் சொல்றாங்க” என்று சொன்னேன்.

மறுபடியும் முதல் பிளாட்பார்ம் வந்தோம். இப்போ எந்த கம்பார்ட்மெண்ட்? என்றாள்.

நான் ஏதோ ஞாபகத்தில் “பி4 63 70″என்றேன். விளக்குகள் எரிந்தன 12 634 கோச் பொசிஷன் எரிந்தது.

எதற்கும் இருக்கட்டுமே என்று நான் மறுபடியும் போனை பார்த்தேன். B2 இருந்தது பிருந்தாவிடம் சொல்ல தயக்கமாக இருந்தது.

என்ன போட்டு இருக்கு? என்றாள்.

B2 என்றேன்.

“ஏன் இப்படி இருக்கேளா சரியா பாக்க வேண்டாமா” என்றாள்.

” இல்ல பிருந்தா நாம கோயம்புத்தூரில் இருந்து வரும்போது அப்கிரேடா ஆச்சா அதுல பி4 அதே ஞாபகத்தில் சொல்லிட்டேன்” என்று அசடு வழிந்தேன்.

சரி வாங்கோ என்று மறுபடியும் பெட்டியை எடுத்துக்கொண்டு B2

கம்பார்ட்மெண்ட் எதிரில் போய் உட்கார்ந்து கொள்ளும் போது,தலைக்கு மேல் டிவி அதில் விளம்பரங்கள் வந்து கொண்டே இருந்தன. அனௌன்ஸ்மென்ட் வந்தது அதில் இன்னும் சிறிது நேரத்தில் என்று ஏதோ ஆரம்பித்தார் அதற்குள் டிவியின் சத்தம் அதிகமாக கேட்டது ராஜ் மஹாலில் புடவை வாங்குங்க என்று மூன்று அழகான பெண்கள் பட்டு புடவை கட்டிக்கொண்டு பரிந்துரை செய்தார்கள் லலிதா ஜுவல்லரி விளம்பரம் வந்தது.

‘என்ன சொல்றான்னு காதுலியே விழலை நான் போய் ஸ்பீக்கர் கிட்ட போய் நின்னு கேட்கிறேன்” என்று பிருந்தா போய் கேட்டு கொண்டு வந்தாள். நல்லவேளை கன்னியாகுமரி தான் இன்னும் கொஞ்ச நேரத்துல முதல் பிளாட்பாரத்தில் வரும் அப்படின்னு சொல்றா என்றாள்.

எதிரில் எதிரில் இருந்த SNP ஸ்டாலில் பால் இருந்தது.

” பால் சாப்பிடலாமா?” என்றேன்.

சரி என்று போய் இரண்டு சூடான பாதாம் பால் வாங்கிக் கொண்டு வந்தாள். குடித்துவிட்டு கப்பை நான் கொண்டு போய் டஸ்ட் பின்னில் போட்டேன். ட்ரெயின் வந்துவிட்டது

மெதுவாக ஏறினோம் கதவு திறந்த உடன் இரண்டாவது bayயில் 63 இருந்தது முதல் bayயில் 70. அம்பர். பிருந்தா 71 சைடு லோயரில் இருந்த பையனிடம் போய் மெதுவாக எனக்கு அப்பர் பர்த் ஏற முடியாது நீங்க கொஞ்சம் போறீங்களா என்றாள்.

அவன் நோ ப்ராப்ளம் சாப்பிட்டு போறேன் என்றான்.

பிருந்தா பெர்த் கிடைத்த சந்தோஷத்தில் “அவசரமே இல்ல மெதுவா” என்றாள்.

இந்தி பேசும் அவன் லேப்டாப்பில் மும்முரமாக ஏதோ பார்த்துக்கொண்டு இருந்தான்.

70 பெர்த்தில் ஒருவர் படுத்துக்கொண்டு இருந்தார்.அவரை எழுப்பி கேட்டதில் நீங்க 67 படுங்க அதுதான் என் பெர்த் என்றார்.

அந்தபையன் அவன் நண்பனுடன் பேசிக்கொண்டே பிட்ஸாவும் கோக்கும் சாப்பிட்டு லேப் டாப்பை மூடி பேக்கில் வைத்துவிட்டு ஷு கழற்றி வைத்துவிட்டு மேலே ஏறி படுத்துக்கொண்டான்.

பிருந்தா 63ல் படுத்துக்கறேன் பெட்ஷிட் தலைகாணி இல்லையே என்றாள். எதிரில் இருந்தவர் இந்த டிரெய்ன்ல தரதில்லை என்றார்.

அவள் வழக்கம்போல புடவையை போர்த்திக்கொண்டாள்.

நான் சால்வை எடுத்துக்கொண்டு 71 ல் படுத்தேன். குளிர் மிதமாக இருந்தது. ட்ரெயின் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு மட்டும் இப்படி அனுபவங்கள்.