இலக்கிய இன்பம் 55/கோவை எழிலன்

வில்லெனக் கிடந்த புருவம்

பெருங்கதையில் வாசவதத்தையின் ஒவ்வோர் உறுப்பின் அழகையும் உவமை கொண்டு வருணிக்கும் பாடல் இது. முதலில் ஓர் உவமையைக் கூறிவிட்டு அதைச் சார்ந்த மற்றொன்றை மற்றோர் உறுப்பிற்கு உவமையாகக் கூறுவது அழகைக் கூட்டுகிறது.

ஆற்று மணல் போல் நெளிந்த கூந்தல்; ஆற்றின் சுழி போன்ற கொப்பூழ். வில் போன்ற புருவம்; வில்லின் அம்பு போன்ற கண். பிறை நிலவு போன்ற நெற்றி; அந்தப் பிறை இல்லா நிறைமதி போன்ற முகம். பாம்பு போன்ற நெகிழும் இடை; அதன் படம் போன்ற அல்குல். கிளி போன்ற மொழி; கிளியின் அலகின் நிறத்தைக் கொண்ட நகம். மூங்கில் போன்ற தோள்; அதில் பிறக்கும் முத்து போன்ற முறுவல். காந்தள் மொட்டுகள் போன்ற விரல்; அதன் பூ போன்ற முன்கை.

இவ்வாறு ஒரு பொருளைக் கண்டால் வாசவ தத்தையின் இரு உறுப்புகள் நினைவிற்கு வருவதாக அமைந்த பாடல் அடிகள் இங்கே

“யாற்றுஅறல் அன்ன
கூந்தல் யாற்றுச்
சுழிஎனக் கிடந்த
குழிநவில் கொப்பூழ்
வில்லெனக் கிடந்த
புருவம் வில்லின்
அம்பெனக் கிடந்த
செங்கடை மழைக்கண்
பிறையெனச் சுடரும்
சிறுநுதல் பிறையின்
நிறையெனத் தோன்றும்
கறையில் வாள்முகம்
அரவென நுடங்கு
மருங்குல் அரவின்
பையெனக் கிடந்த
ஐதேந்து அல்குல்
கிளியென மிழற்றும்
கிளவி கிளியின்
ஒளிபெறு வாயின்
அன்ன ஒள்ளுகிர் ….
வேயெனத் திரண்ட
மென்றோள் வேயின்
விளங்கு முத்தன்ன
துளங்குஒளி முறுவல்
காந்தள் முகிழ்அன்ன
மென்விரல் காந்தள்
பூந்துடுப்பு அன்ன
புனைவளை முன்கை”