கம்பனைக் காண்போம்—55 வளவ. துரையன்


அகழியைச்

அன்னநீள் அகன்கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னிவேறு சூழ்கிடந்த தூங்குவீங்[கு] இருட்பிழம்பு
என்னலாம் இறும்புசூழ் கிடந்தசோலை எண்ணிலப்
பொன்னின்மா மதில்குடுத்த நீலஆடை போலுமே [114]

[துன்னி=நெருங்கி; இறும்பு=காடு; இருள் பிழம்பு=பேரிருளின் தொகுதி;

சோலையைச் சொல்வதற்குமுன் அது இருக்கும் இடம் பற்றிப் பேசுகிறான் கம்பன். மிகப் பரந்து நீண்டு கிடக்கும் அகழி ஒரு கடல் போல உள்ளது. அந்தக் கடலைச் சுற்றிக் காடு போல சோலை சூழ்ந்துள்ளதாம்; அது ஒரு பெரிய அசையாத காடுபோல இருக்கிறது. அசையாது இருப்பதால் பெரிய இருளின் தொகுதி போலவும் அது காட்சி தருகிறதாம். அயோத்தியின் மதிலுக்கு உடுத்தப்பட்ட நீல ஆடையைப் போலவும் அது இருக்கிறதாம்.

இங்குப் புராண கருத்து ஒன்றை அடியொற்றிக் கம்பன் வருணனை செய்கிறான். அதாவது பூமியைச் சுற்றி சக்கரவாள மலை எனும் ஒன்று இருக்கிறதென்றும், அதைச் சுற்றிப் பெருங்கடல் ஒன்று இருக்கிறதென்றும் கூறுவர். அக்கடலைப் பேரிருள் சூழ்ந்திருப்பதாகவும் புராணம் கூறும். அதேபோல அயோத்தி பூமியாகவும், மதில் சக்கரவாள மலையாகவும், அம்மலையைச் சுற்றியுள்ள பெருங்கடல்தான் அகழியாகவும், அக்கடலைச் சுற்றி உள்ள சோலை பேரிருள் ஆகவும் வருணிக்கப்பட்டுள்ளன.