அருகம்புல்லும் பிள்ளையார் ஹோமமும்/ஆர்க்கே


நாடக உலகில் எனக்கு நிகழ்ந்த சில நிகழ்வுகளை உங்களிடம் சற்று சமூக இடைவெளி விட்டு பகிர்ந்துகொள்ளலாமே எனத் தோன்றியதால் இந்த எழுத்து ஹோமம்.

தலைப்புக்கான ஆராய்ச்சிக்கு அதிகம் மெனக்கெட வேண்டாம் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பொறுமை கடலினும் பெரிது.

நாடகம் ஒரு நிகழ்கலை.

மேடையில் நடிப்பது -அதுவும் லைவ் ஆடியன்ஸ் முன்பு உடல்மொழி, வசன உச்சரிப்பு துல்லியம், முக”பா”வம், இவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்திக் காட்டி எதிர்வினையாக பாராட்டு கைதட்டல்களை ஜெயிப்பது சாதாரண விஷயமல்ல. இதனால்தான் நன்கு பயிற்சியும் அனுபவமும் பெற்ற நடிகன் கூட ஒவ்வொரு மேடையேற்றத்தின்போதும் முதன்முதலாக மேடையேறுவது போன்ற படபடப்பை உணர்வது என்பது யதார்த்த நிஜமாகிறது.

ஒத்திகைகள் நல்ல அடித்தளமாக அமைந்துவிட்டாலும் காட்சிநேரத்தில்
தான் பேசவேண்டிய வசனத்தை மறந்துவிட நேர்வதும் பல சமயங்களில் நடக்கும்தான். எழுபதுகளில் வசனத் தாள்களுடன் ஒரு pen torch வைத்தபடி ப்ராம்ப்டர் என்று இருவர் வசன பேப்பர்களுடன் மேடையின் இருபுற தடுப்புகளின் அருகில் நிற்பார்கள். வசன உதவி தேவைப்படுபவன் தான் மேடையில் நடித்தபடியே ஒரு ஓரம் சற்று நகர்ந்து ப்ராம்ப்ட்டர் உதவியுடன் தன் வசன cue வை அறிந்து கொண்டு சமாளித்து ஜமாய்ப்பான். சில சமயம்
பிராம்ப்டர் முக்கியமான டயலாக் தவிப்பில் காணாமல் போய் நடிகன் திண்டாடுவதும் உண்டு. “எங்கேடா போய்த் தொலைஞ்சே “என திட்டு வாங்கிய “நான்”-ப்ராம்ப்டரும் உண்டு.

இதில் சமாளிப்பு ரகம் ஒன்று உண்டு.

ஒரு பிரபல நாடகக்குழுவில் சீமாச்சு என்று ஒரு நடிகர்(பெயர் மாற்றியிருக்கிறேன்) . பேசிக்கொண்டே இருப்பவர் திடீரென தன் டயலாக் லிங்க்கை மறந்துவிடுவார். அவர் தரும் cue டயலாக்கில்தான் அடுத்த பாத்திரம் பேசத் துவங்கியாகணும். அந்த மாதிரி சமயத்தில் மேடையில் ஒரு பத்து எண்ணும்வரை அமைதி இருக்கலாம். அதைத்தாண்டி கதாபாத்திரம் வெறுமனே நின்றால் அது awkward silence என சொதப்பி விடும். பார்வையாளர்கள் குரல் விடுவார்கள். இவன் பேசலையே என அவனும் சமாளியேண்டா என இவனும் இருக்கும் நிலை. இவனே ஆரம்பிப்பான் -உதாரணமாக- “ஓஹோ! என்னை கடைக்குப் போகச்சொல்லப்போறியா? நான்போகமாட்டேன். கடையில அவ இருப்பா. நான் அவகிட்ட பேசமாட்டேன்” என்பான். உடனே அவனுக்கு அடுத்த டயலாக் மனதில் உதித்துவிடும். “அவ இன்னிக்கு இருக்கமாட்டா. ஊருக்கு போயிருக்கா” என்று தடத்திற்கு வந்துவிடுவான்.

சீன் முடிந்தோ நாடகம் முடிந்தோ இருவரும் செல்லச்சண்டை போட நேரிடும்.
“ஏண்டா டயலாக்க மறந்தே?!”
“நானா? ஹ! ஒரு pause குடுத்தேன்.
நீதான் அதுக்கு வெயிட் பண்ணாம
அவசரக்குடுக்கையா என் டயலாக்கையும் நீயே வாங்கி பேசிட்டே!” என சண்டை போடுவான்.

சரி என்று அடுத்தமுறை அவன் போக்கிற்கு விட்டால் “நான்தான் முழிக்கிறேனே சமாளிச்சா என்ன” என சண்டை வரும்.

“நீ pause விட்றியாக்கும்னு நெனச்சேன்”

இதற்கு பிறகு டயலாக் மறந்தவன் இந்த மாதிரி சமாளித்தால் அதற்கு “சீமாச்சு pause” என்று பெயர் வந்தது என்பது நாடக உலகில் பிரபலம்..

நாடகக்கலைஞர்கள் இந்த மாதிரி நான் செய்ததே இல்லை என்று சொன்னால் அது வடிகட்டின பொய்
என்பது கண்கூடு.

எனக்கு நடந்ததை சொல்லலைன்னா தலை சுக்கு நூறா வெடிச்சுடுமே!

நான் துவக்க காலத்திலிருந்து நடித்து வரும் குருகுலம் நாடகக்குழுவின் முக்கியமான நாடகம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். பரவலாக மேடையேற்றம் கண்டு ஜனரஞ்சக வரிசையில் இடம் பிடித்த நாடகம். கதைப்படி நான் நாயகன் மூர்த்தியின் நண்பன். காலையில் வாக்கிங் போய்விட்டு வரும்வழியில் தினசரி அவன் வீட்டிற்குப் போய் ஒரு டோஸ் காப்பி சாப்பிட்டு வருகிற கேரக்டர் . நண்பன் கௌரிசங்கர் மூர்த்தி கதாபாத்திரம். மாலதி சம்பத் மூர்த்தி மனைவி பிருந்தா கதாபாத்திரம். அவனுக்கு சுகர் என்பதால் காலையில் வெறும் வயிற்றில் முதலில் பொழியப்படுவது காப்பி அல்ல அருகம்புல் ஜூஸ். அரைமணிக்கு அப்புறம்தான் காபி.
அவர்கள் வீட்டு ஏரியா பார்க்குகள் தெருவோரங்கள் இன்ன பிற இடங்களில் வளர்ந்த அருகம்புல் யாவும் ஜூஸாக அருகிவிட்டதால் நான் வரும்போது பறித்துக்கொண்டு வர சொல்லியிருப்பான்.

நான் பதினோராம் அவென்யூ நடைபாதை அருகம் புல் பறித்த கதை தனி ட்ராக். இப்போ உதவாது.

செட் குமார் தரும் பச்சை இங்க் காகிதக்கற்றை ஜாலாக இருந்ததால்
அசோக்நகர் லெவன்த் அவின்யூவில் கற்றை கற்றையாய் புல் பிடுங்கிக் கொள்வேன்.

இதிலெல்லாம் ஒன்றுமில்லை. இனிதான் இருக்கிறது.

காட்சி துவங்கும்.

“நாழியாய்டுத்து. காபி எங்கே பிருந்தா? “

“முதல்ல அருகம்புல் ஜூஸ் அப்புறம்தான் காபி. “

“நம்ம ஏரியா அருகம்புல் எல்லாம் நீ அரைச்சு குடுத்து நான் குடித்து முடிச்சு காலி. அதான் ரகுவை வாக்கிங் முடிச்சுட்டு வரும்போது அவன் ஏரியா புல்லெடுத்து வான்னு சொல்லிருக்கேன்.”

என் என்ட்ரி. கதாசிரியர் மூர்த்தி எழுதின வசனம் “இந்தாடா அருகம்புல்! எதுக்கு இத்தனை கேட்டே!? உங்க வீட்ல உன்னைத்தவிர மாடும் கிடையாது. அப்பா வீட்டில கணபதி ஹோமம் பிள்ளையார் பூஜை ஏதாவது பண்ணப்போறியா??”

அங்கேதான் எனக்கு நாக்கில் சனி.

ஒவ்வொரு முறையும் நான் “என்னடா உங்க வீட்ல ஏதாவது பிள்ளையார் ஹோமம் கணபதி பூஜையா ?”என கேட்டு சொதப்பாமல் இருந்ததே இல்லை.

“இவன் வேற ” என மூர்த்தி (கௌரிசங்கர்) தலையிலடித்துக்கொள்வான். அது நான் சொதப்பியதற்கு என்று நானும் அருகம்புல் ஜூஸ் கடுப்பு என ஆடியன்சும் உணர்வர்.

சைடு பேனலிலிருந்து என நான் என்ட்ரி ஆகும்போதே குழுவின் ஸ்ரீதர் “இன்னிக்காவது சொதப்பமா சொல்லு. கணபதி ஹோமம் பிள்ளையார் பூஜை”

“டேய் போடா போடா எல்லாம் எனக்குத் தெரியும். நீ பெரிசா எனக்கு சொல்லாதே ” என கித்தாப்பாக சொல்லிவிட்டு அதே பழைய குருடி கதவைத் திறடி கதைதான்.

அன்றும் அப்படித்தான். காட்சி ஓட்டத்தில் இதை ஆடியன்ஸ் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாடகம் முடிந்தவுடன் என்னைச்சுற்றி கும்மி அடித்த கிண்டல் செய்யாத குழு பிரகிருதிகள் கம்மி.

இதில் ஒரு முறை நடந்த கூத்துதான் ஹைலைட்.

பொதுவாக நாடகம் பார்க்க ஐநூறு பேர்(!!) வந்தால் நாடகம் முடிந்ததும் முந்நூறு பேர் கைதட்டுவார்கள். நூறு பேர் கர்டன் கால் எனப்படும் குழு அறிமுகம் வரை நிற்பார்கள். பத்துப்பேர் மேடை வரை வந்து கை குலுக்குவார்கள். ஓரிருவர் க்ரீன் ரூம் வரை வந்து பாராட்டுவார்கள்.

நான் சொதப்பிய கதை ஆயிற்றா?
ஒருவர் அன்று க்ரீன் ரூம் வந்து “ஸார்! உங்க நடிப்பு பிரமாதம். அதுவும் கணபதி ஹோமம். பிள்ளையார் பூஜையை மாத்தி பிள்ளையார் ஹோமம் கணபதி பூஜைன்னீங்க பாருங்க! அது செம!”

நான் அவருக்குத்தெரியாமல் தலையிலடித்துக்கொண்டேன்.

One Comment on “அருகம்புல்லும் பிள்ளையார் ஹோமமும்/ஆர்க்கே”

Comments are closed.