ஜி.பி.சதுர்புஜன் –
“என்னங்க எத்தனை நேரமா கரடியா கத்திக்கிட்டு இருக்கேன் … காலங்கார்த்தால என்ன அப்பிடி தலைபோற அவசரம்னு இப்பிடி பிடிச்சு வெச்ச பிள்ளயாராட்டம் உட்கார்ந்துக்கிட்டு வாட்ஸ் அப்ப விடாம நோண்டிக்கிட்டு இருக்கீங்க ? இங்க நாலு உருளைக்கிழங்கை வேக வெச்சிருக்கேன் – தோலை உரிச்சுக் கொடுங்கன்னு அரைமணி நேரமா சொல்லிக்கிட்டிருக்கேன் – கவனிக்கவே மாட்டேங்கறீங்களே !”
சுகுணாவின் ஸ்ருதி ஏறிக்கொண்டே சென்றது.
“ம்ம்… ம்ம்…” என்று ஏதோ பேருக்கு முனகிக் கொண்டிருந்தாரே ஒழிய கிஷோரின் கவனம் முழுவதும் வாட்ஸ் அப்பில் மூழ்கிப் போயிருந்ததென்னவோ உண்மைதான்.
“கை சரியில்லைன்னுதானே உங்களை உரிக்கச் சொல்றேன்…கொஞ்சம் கூட கவலையேபடாம தலையை மொபைல விட்டு எடுக்கவே மாட்டேங்கறீங்களே ! போங்க… போங்க…இன்னிக்கு உங்களுக்கு வெங்காய சாம்பாரும் கிடையாது…. உருளைக் கிழங்கு கறியும் கிடையாது …. எல்லாத்தையும் நானேதான் செய்யனுமாக்கும்…இத்தனை வருஷமா நான் உங்களைக் கேட்டேனா – இப்ப ரிடையராகி வீட்டுலதானே இருக்கீங்க ? பெண் விடுதலை அது இதுன்னு வாய்கிழிய ப்ரென்ட்ஸோட பேசறதுலயும் வாட்ஸ் அப்ப பார்வோர்ட் பண்றதுலயும் ஒண்ணும் கொறச்சலில்லை ! ஆனா, வீட்டுலே பெண்டாட்டிக்கு உதவியா ஒரு குண்டூசியக் கூட நகர்த்தறது கிடையாது …”
கிஷோருக்கு சுகுணாவின் புலம்பல் காதில் விழுந்தது மாதிரியும் இருந்தது, விழாத மாதிரியும் இருந்தது. காதில் விழுந்தாலும் அது மூளை வரைப் போய்ச் சேர்ந்ததா என்றால் கொஞ்சம் சந்தேகம்தான்.
கிஷோருக்கு வயது அறுபது ஆகி விட்டாலும் அவருடைய கல்லூரி நண்பர்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் வாட்ஸ் அப் க்ரூப்பில் நுழைந்து விட்டால், சர்ரென்று வயது இருபதுக்கு இறங்கி விடும். மனதில் ஒரு துள்ளல் பிறந்து விடும். அந்தக் காலத்தில் அனைவரும் சேர்ந்து கல்லூரி கேண்டீனில் உட்கார்ந்து அரட்டை அடிப்பது போல் தோற்றமல்ல – மனக் கண்ணில் திரையில் விரிந்து, உண்மையாகவே எல்லாம் மாறி விடும். குஷி கிளம்பி விடும்.
குலா என்ற குலசேகரனுடைய போஸ்ட்தான் இன்று காலை எழுந்தவுடன் கிஷோர் பார்த்த முதல் போஸ்ட். காபி கோப்பையுடன் வாட்ஸ் அப் பார்க்க உட்கார்ந்தவன் அதிலேயே லயித்து விட்டான். காபி அப்படியே ஆறிக் கிடந்ததது.
அது லயோலா கல்லூரியிலிருந்து வந்திருந்த முக்கியமான பிரஸ் ரிலீஸ் .
லயோலா கல்லூரி நாட்டின் பன்மைத்துவத்துக்கும் கலாச்சாரத்திற்கும் எப்போதும் மதிப்புக் கொடுக்கும் கல்லூரி. எந்த மதத்தினரையும் அவமதிப்பு செய்ய மாட்டோம். 19 -20 ஜனவரி தேதிகளில் நடந்த வீதி விருது விழா அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினரையும், அரசியல் கட்சியையும், நாட்டின் தலைவரையும் அவமதித்தது என்று உணர்ந்தவுடன், அவற்றை எடுத்து விட்டோம். தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்புக் கோருகிறோம் …..
இப்படிச் சென்றது அந்த பகீர் அறிக்கை. டாக்டர் காளீஸ்வரன் என்ற லயோலா கல்லூரியின் கலை இலக்கியக் குழுவின் தலைவர் பெயரில் வந்து விழுந்திருந்தது அந்த மன்னிப்புக் கோரும் அறிக்கை.
கிஷோர் இதைப் படிக்குமுன்பே டங் டங்கென்று வந்து விழுந்து கொண்டிருந்தன இரு தரப்பு வாதம், எதிர் வாதங்கள். அனைத்தும் அனல் கக்கும் போஸ்டிங்.
நல்ல நண்பர்களின் இந்த வாட்ஸ் அப் க்ரூப் பற்றி எரிந்தது.
“ இந்த லயோலா கல்லூரி ஒரு கிறிஸ்துவக் கல்லூரி. இதே காலேஜிலே இயேசுவை அவமதிக்கற மாதிரி ஒரு படம் போட்டு மாட்டி வெப்பாங்களா ? என்ன தைரியம் இருந்தா எங்க இந்துக் கடவுளை இப்பிடி இழிவு படுத்துவாங்க ?” – எப்போதும் நாமம் போட்டிருக்கும் கோபாலகிருஷ்ணன் சாட்டையைச் சுழற்றினான்.
“ எல்லோரும் ஏன் இப்பிடி பதட்டப் படறீங்கன்னு தெரியல…. அவங்க இந்தக் காலத்தில பெண்களோட நிலையைத்தான் உருவகப் படுத்தி பெயின்டிங் பண்ணியிருக்காங்க. திரிசூலம் ஒரு குறியீடுதான். அதுக்கும் இந்து நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?”- இது மேத்யூவின் மறுமொழி.
“ வாங்கடா வாங்க ! இதுவும் சொல்லுவீங்க ! இன்னமும் சொல்லுவீங்க ! இந்துக்கள் எல்லாம் என்ன இளிச்சவாயன்னு நெனச்சீங்களா ? திரிசூலம் இந்து சிம்பல் இல்லையா ? அப்ப சிலுவையும் கிருத்துவ சிம்பல் இல்லைன்னு நான் சொன்னா சரின்னு தலையாட்டுவீங்களா ? பாரதமாதாவை இழிவு படுத்தறவங்களுக்கு இந்த நாட்டிலேயே இடமில்லை – ஆமாம் !”
சந்திரமௌலியும் சண்டையில் சேர்ந்து கொண்டான்.
முத்துசாமி, வேல்சாமி, சத்தியநாராயணன் , ஜவஹர், வெங்கி, இளங்கோ, ரூப் என்று அனைவரும் உள்ளே இறங்கி அதகளப்படுத்தினர்.
ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் உஷ்ணமானி சில பல டிகிரி எகிறியது. நேரே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவில்லையே தவிர, வெறுப்பும், கசப்பும் வளர்ந்து கொண்டே போனது.
இடையே சிவகுமார் போட்ட ஆன்மீக போஸ்டுகளும், பாஸ்கர் பார்வோர்ட் செய்த ஜோக்குகளும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
யாரும் எதிபார்க்காதபோது ஆனந்த் சுப்ரமணியன், ஐ.பி.எஸ் உள்ளே நுழைந்தான்.
“ஆக்சுவலா என்ன நடந்தது ? என்ன எக்சிபிஷன்? கொஞ்சம் டீடேல்ஸ் கொடுங்க ப்ளீஸ்!”
மற்றவர்களை விட ஆனந்த் வார்த்தைக்கு மதிப்பு ஒரு மாற்று கூடுதல்தான். நண்பர்கள் குழுதான், அனைவரும் சமம்தான் என்றாலும், தன்னுடைய ஐ.பி.எஸ் அந்தஸ்தாலும் , ஒரு நியாயமான நடுநிலையாளன் என்ற நிலைத்த பெயரினாலும் , அதற்குத் தன்னை வெகுநாளாகத் தகுதி ஆக்கிக் கொண்டவன் அவன்.
கிஷோருக்கு இதற்கிடையே வேறு வாட்ஸ் அப் க்ரூப் ஒன்றிலிருந்த இன்னொரு நண்பரிடமிருந்து லயோலா ஓவியக் கண்காட்சிக்கான லிங்க்கும் அத்தனை ஓவியங்களும் வந்து சேர்ந்திருந்தன. சரசரவென தன்னுடைய கல்லூரி நண்பர்கள் குழுவின் பார்வைக்கு உடனடியாகப் பகிர்ந்து கொண்டான்.
படங்களைப் பார்த்த அடுத்த நொடியே ஆனந்த் அந்த க்ரூபிலிருந்து உடனே விலகி விட்டான்.
பின்னாலேயே சரக் சரக்கென்று நிறைமதி, சுரேஷ், ஞானப்ரகாசம், மோகனன், குமார் என்று அனைவரும் விலகினர்.
க்ரூப்பே காலியாகிவிடும் போல் தோன்றியது கிஷோருக்கு.
“ என்ன நண்பர்கள்டா இவர்கள் !”
சலிப்பாக வந்தது கிஷோருக்கு.
ஆறின காபியை எடுத்தான்.
அவனுடைய மனைவி சுகுணா அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ உருளைக் கிழங்கையாவது தோல் உரித்திருக்கலாம் !”
முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தான் கிஷோர்.

நிச்சயமா உருளைக்கிழங்கை உரிச்சிருந்தா நன்னா இருந்திருக்கும். ஆனா உருளைக்கிழங்குல கார்போஹைடிரேட் ஜாஸ்தி இல்லையோ ? வாத உடம்புக்கு ஒதுக்குமோ ? யாரோ ஒரு forward அனுப்பியிருந்தா . பார்த்துடலாம் . கிஷோர் குமார் மறுபடியும் போனை எடுத்தான் .