சாவியால் முன்னுக்கு வந்த எழுத்தாளர்களின் பட்டியல்/ஆர்  கந்தசாமி 

சாவியால் முன்னுக்கு வந்த எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது. ஆனால், அதற்கான பெருமை எதையும் தனக்கு எடுத்துக் கொள்ள மாட்டார் சாவி. ‘நான் யாரையும் உருவாக்கவும் இல்லை; வளர்த்துவிடவும் இல்லை. அவரவர்களுக்குத் திறமை இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் மேலுக்கு வந்தார்கள்’ என்பார். அதையும் கூட

அருமையான ஓர் உதாரணத்தோடுதான் சொல்வார். ‘விளக்கு இருக்கிறது; அதில் போதுமான எண்ணெய் இருக்கிறது; திரியும் இருக்கிறது. சொல்லப்போனால் அது எரிந்துகொண்டும் இருக்கிறது. நான் கீழே கிடந்த ஒரு சின்ன குச்சியைக் கொண்டு திரியைத் தூண்டிவிட்டேன். அது பிரகாசமாக எரிவதாக உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அவ்வளவுதான்! விளக்கில் எண்ணெயும் இல்லாமல், திரியும் இல்லாமல் இருந்தால் தூண்டிவிட்டு என்ன பிரயோசனம்?’ என்பார்.

நட்புக்கு மரியாதை கொடுப்பதில் சாவிக்கு நிகர் வேறு யாருமில்லை. 2001-ம் ஆண்டு, ‘சாவி-85‘ புத்தக வெளியீட்டு விழா, சென்னை, நாரத கான சபாவில் நடந்தது. புத்தகத்தை வெளியிட்டவர் சாவியின் நெருங்கிய நண்பர் கலைஞர் மு. கருணாநிதி. புத்தகத்தைப் பற்றிப் பேச எழுந்த கலைஞரைத் தடுத்து, ‘நீங்கள் பேசி முடித்தால் கூட்டம் கலைந்துவிடும். அதனால், முதலில் நான் நன்றியுரை சொல்லிவிடுகிறேன்‘ என்ற சாவி, கலைஞருக்கும் தனக்குமான ஆழ்ந்த நட்புக்கு ‘கர்ணன் – துரியோதனன்’நட்பை உதாரணமாகக் காட்டி, தொண்டை கரகரக்க பரவசமும் நெகிழ்ச்சியுமாகப் பேசிக்கொண்டு இருந்தபோதே, ‘மார் வலிக்கிறது…’ என்றபடி மேடையிலேயே மயங்கி விழுந்தவர்தான்; அதன்பின், பதினைந்து நாட்களுக்கு மேல் அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா ஸ்டேஜிலேயே இருந்து, கடைசி வரை கண் திறவாமலே அமரரானார்.

எழுத்தாளர் மணியன் ஒருமுறை சொன்னதுபோல், ‘சா’ என்றால் சாதனை, ‘வி’ என்றால் விடாமுயற்சி என வாழ்ந்துகாட்டிய பெருமகனார் பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி.

நன்றி: விகடன்

May be an image of 1 person